Monday, 27 April 2026

ப்ரம்மராக்‌ஷஸ் — ஒரு மறுவாசிப்பு

 ப்ரம்மராக்‌ஷஸ் — ஒரு மறுவாசிப்பு

———

ஜே.பி. ராஜேந்திரன்


ப்ரம்மராக்‌ஷஸ் என்ற வார்த்தையை முதன்முதலில் எனக்கு அறிமுகப்படுத்தியது ஓவியர் நடேஷ். ஆனால் அதைப் பற்றி சில கதைகள் இருந்திருக்கிறது என்பதை நான் தெரிந்துவைத்திருக்கவில்லை. தமிழ் எழுத்தாளர் எம்.டி. முத்துக்குமாரசாமி அவர்களுடைய சமீபத்திய YouTube பேச்சில், பட்டி விக்கிரமாதித்தன் கதைத் தொகுப்பிலிருந்து ஒரு கதையைச் சொன்னார். இந்தக் கதையின் மையக்கருத்து என் மனதில் ஆழமாகத் தங்கிவிட்டது. இக்கட்டுரை அந்தக் கதையை மையமாக வைத்து, நவீனத்துவம் என்பது என்ன என்பதை என் நிலையிலிருந்து — ஒரு மனநல மருத்துவனாக, ஜெயகாந்தனை வாசித்த ஒரு வாசகனாக — கொஞ்சம் விரித்துப் பார்க்க விரும்புகிறேன்.


எம்.டி.எம் அவர்கள் ப்ரம்மராக்‌ஷஸின் பார்வையில் இந்த உலகின் பல்வேறு நிலைப்பாடுகள் எப்படி இருக்கிறது என்று உரையாற்றினார். அதற்குப் பின்பு sensibility in modern times என்பதை விளக்குவதற்காக ஜெயகாந்தனின் கங்கா என்ற கதாபாத்திரம் எப்படி பயன்படுகிறது என்று ஃபேஸ்புக் குறிப்பில் சொல்லியிருந்தார். ப்ரம்மராக்‌ஷஸின் பார்வை ஏன் இப்படி இருக்கிறது என்பதைச் சொல்வதற்கும், கங்காவின் உதாரணத்தை வைத்துக்கொண்டு மேலும் என்ன சில புரிதல்களை கொண்டு வரலாம் என்றும் இக்கட்டுரையில் அலசியிருக்கிறேன்.


கதை இதுதான். ஒரு ராஜா வேட்டையாடச் சென்றபோது ஒரு ப்ரம்மராக்‌ஷஸிடம் சிக்கிக்கொள்கிறான். ப்ரம்மராக்‌ஷஸின் பிடியிலிருந்து தப்ப வேண்டுமென்றால், ராஜாவிற்கு பதிலாக ஏதாவது ஒரு பிரம்மச்சாரி சிறுவன் தன்னார்வத்துடன், தன் பெற்றோரின் சம்மதத்துடன் தன்னை பலியாக சம்மதித்தால், அவனை விடுவிப்பேன் என்று கூறுகிறான். ராஜா ஊருக்குச் சென்று தனக்குப் பதிலாக வேறு யாராவது பலிக்கு முன்வருவார்களா என்று அறிவிக்கிறான். ஒரு ஏழைக் குடும்பத்தில் ஏழு வயது சிறுவன் முன்வருகிறான். தாய் தந்தை கண்ணீருடன் அவனை அனுப்புகிறார்கள். பலித் தளத்தில் வாள் ஓங்கப்படும் கணத்தில் சிறுவன் சிரிக்கிறான். ஏன்? “என் அம்மாவுக்கும் தெரியவில்லை, அப்பாவுக்கும் தெரியவில்லை, இந்த ராஜாவுக்கும் தெரியவில்லையே, இந்த உலகம் ஏன் இப்படி இருக்கிறது என்று.” அது அவன் சிரிப்பின் அர்த்தம்.


ப்ரம்மராக்‌ஷஸ் என்ற பெயரே ஒரு சுட்டிக்காட்டல். ப்ரம்மன் + ராக்‌ஷஸ். படைப்பாலன் + காவலன். வேத மரபில் ஒரு அந்தணன் அவனுக்கு விதிக்கப்பட்ட தர்மத்திலிருந்து விலகினால் அவன் ப்ரம்மராக்‌ஷஸ் ஆகிறான் என்ற தொன்மம் இதைப் பிரதிபலிக்கிறது. அறிவின் காவலன் அறிவை ஆயுதமாக்கும்போது அவன் என்னவாக ஆகிறான் என்பதை. அசுரன் என்ற சொல்லுக்கும் ராக்‌ஷஸ் என்ற சொல்லுக்கும் இடையிலான எல்லை எப்போதும் மெல்லியதாக இருந்திருக்கிறது. அசுரர்கள் அளவற்ற வளர்ச்சிக்குப் பெயர் பெற்றவர்கள். ராக்‌ஷஸர்கள் அந்த வளர்ச்சியை காப்பவர்கள். ரக்ஷ் என்ற வேர்ச் சொல்லே “காப்பது, வேலியிட்டு பாதுகாப்பது” என்ற பொருளைத் தருகிறது. ப்ரம்மராக்‌ஷஸ் ஒரு அமைப்பை உருவாக்குகிறான். அதன் எல்லையற்ற வளர்ச்சிக்கு காவல் காக்கிறான். படைக்கிறான், காக்கிறான், விரிவடையச் செய்கிறான். அவனது பிரச்சினை ஒரு தனிப்பட்ட நெறிமை அல்ல; அவன் ஒரு அமைப்பின் உள்ளேயே இருக்கும் சிக்கல்.


இக்கதை மிகவும் கூர்மையாகவும், மிகவும் பொருத்தமானதாகவும் இன்றும் இருப்பது இதனால்தான். ப்ரம்மராக்‌ஷஸ் என்ன கோருகிறான்? நரபலி ஒன்றை. அது பழமையான சடங்கு. ஆனால் அதற்கு அவன் தரும் வடிவம் புதுமையானது. அரசன் இடைத்தரகராக நிற்க வேண்டும். சிறுவன் தன்னார்வத்துடன் முன்வர வேண்டும். பெற்றோர் சம்மதம் வேண்டும். ராஜ்யத்தின் பெயரில் நடக்க வேண்டும். இது ஒரு நகர்ப்புற, நிர்வாகப் பலி. பழைய ஊர்த் தெய்வத்துக்கான ரத்தக் கொடை அல்ல; இது ஒரு அரச சடங்கு. ப்ரம்மராக்‌ஷஸ் பழைய மூடத்தனத்தை அம்பலப்படுத்தியே புதிய மூடத்தனத்தை நிறுவுகிறான். அரசன் தலைமையிலான நாகரிகம் நரபலியை விட நாகரிகமானது என்ற தோற்றத்தில். ஆனால் பலி அதே பலிதான். உடல் அதே உடல். ரத்தமும் அதே ரத்தம். வெறும் பெயர் மாற்றம், சடங்கின் புதிய வடிவம்.


ஏழு வயது சிறுவனின் சிரிப்பு இந்த இரண்டு அமைப்புகளுக்கும் வெளியே நிற்கிறது. குடும்பம் அவனை காப்பாற்ற முடியாது — அம்மா, அப்பா அவனை அனுப்பிவிட்டார்கள். அரசு அவனை காப்பாற்றாது — ராஜாவே அவனை வாளுடன் அணுகுகிறான். சிறுவனுக்கு இரண்டு அமைப்புகளின் மூடத்தனமும் ஒரே கணத்தில் தெரிகிறது. அவனது சிரிப்பு நியாயம் கோரவில்லை, அமைப்பை மாற்றக் கேட்கவில்லை, கோபப்படவில்லை. அவன் வெறும் பார்க்கிறான். அந்தப் பார்வையின் தொனியே, அந்தப் பார்வையின் தெளிவே அவனது சிரிப்பாக வெளிப்படுகிறது. சாட்சியின் சிரிப்பு.


இங்கு எம்.டி.எம் அவர்கள் கூறிய modern sensibility-யை விளக்குவதற்கு ஜெயகாந்தனின் பாத்திரப் படைப்பான கங்கா ஒரு “அரதப்பழச உதாரணம்” என்று சொல்லியிருக்கிறார். அந்த அரதப்பழச உதாரணமாக இருந்தாலும், அதை வைத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கிறேன். ஜெயகாந்தனை ஒரு இளைஞனாக வாசித்தேன். இப்போது ஒரு மருத்துவனாக அவரைத் திரும்பப் படிக்கும்போது வேறு சில விஷயங்கள் தெரிகின்றன. 1966-ல் வெளியான “அக்னி பிரவேசம்” சிறுகதையில் கங்கா ஒரு இளம் பெண். பெருமழையில் மாட்டிக்கொண்ட அவளுக்கு ஒரு கார்க்காரன் lift தருகிறான். ஓரிடத்தில் அவளை வல்லுறவுக்கு உட்படுத்துகிறான். அவள் வீடு திரும்புகிறாள். மரபின் கண்களில் அவள் “கெட்டுப்போனவள்”. 70-களின் சினிமா தர்க்கத்தில், அந்த கார்க்காரனை கண்டுபிடித்து அவளையே அவனுக்கு கட்டி வைப்பதுதான் நீதி. சமூக ஊடகத் தர்க்கத்தில், கூட்டமாக சேர்ந்து அவனைக் கொல்ல வேண்டும் என்ற ஆர்ப்பாட்டமாக இருந்திருக்கும். ஜெயகாந்தன் ஒரு வேறு வழியைத் தேர்ந்தெடுக்கிறார். கங்காவின் அம்மா ஒரு குடம் தண்ணீரை அவள் தலையில் ஊற்றி அவளை வீட்டுக்குள் இழுத்துச் செல்கிறாள். “நீ தூய்மையானவள். எதுவும் நடக்கவில்லை.” ஒரு புதிய சடங்கு. சீதையின் அக்னி பரிக்ஷையை திருப்பி எழுதிய ஒரு கணம்.


ஜெயகாந்தன் இந்த சிறுகதையுடன் நிற்கவில்லை என்பதை நான் பிற்பாடுதான் உணர்ந்தேன். “சில நேரங்களில் சில மனிதர்கள்” நாவலில் கங்கா தன்னை வல்லுறவுக்கு உட்படுத்தியவனைத் தேடிச் செல்கிறாள். அங்கு அவள் என்ன கண்டறிகிறாள்? அவனை விடத் தன்னைச் சுற்றியுள்ள “கண்ணியமான” ஆண்கள் இன்னும் கேடுகெட்டவர்கள் என்று. அந்தக் கார்க்காரன் ஒரு கொடூரமான குடும்ப அமைப்பிற்குள் சிக்கி கேவலமான வாழ்க்கையை வாழ்வதைக் காண்கிறாள். அவளுக்கு அவன் மீது பரிதாபம் ஏற்படுகிறது. அவர்களுக்கிடையே நட்பு உருவாகிறது. “அக்னி பிரவேசத்தின்” தாய் சடங்கின் வாயிலாக கங்காவை வீட்டுக்குள் சேர்த்தாள்; இந்த நாவல் அந்த தாயின் சடங்கையும் கடந்து கங்காவை தன் வல்லுறவாளனின் நண்பியாக ஆக்குகிறது. இது குடும்ப நீதியை கடந்தது. சமூக நீதியை கடந்தது. பழி தீர்க்கும் நீதியை கடந்தது.

அடுத்து வந்த “கங்கா எங்கே போகிறாள்” நாவலில் கங்கா இன்னும் முன்னே செல்கிறாள். தனக்கான விடுதலையை சமூகத்தின் தயவின்றி தன்னந்தனியாகத் தேட வேண்டிய நிலைமைக்கு வருகிறாள். இந்த மூன்று படைப்புகளில் கங்கா மூன்று விதமான நவீன கணங்களை எதிர்கொள்கிறாள். முதலில் தாயின் புதுப்புரிதல். அடுத்தது பரஸ்பர மனிதாபிமானம். கடைசியில் தனிமை. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற ஒரு தொன்மையான கணத்திலிருந்து “யாதும் ஊரே யாவரும் நண்பர்” என்ற ஒரு புதுமையான sensibility-யை, கங்காவின் கதாபாத்திரம் நன்றாகத் தொட்டிருக்கிறது. இந்த கங்காவின் உதாரணத்தை நண்பர் எம்.டி.எம் முன்வைத்ததுதான்.


இப்போது ப்ரம்மராக்‌ஷஸுக்கும் கங்காவிற்கும் இடையே ஒரு இழையை காண்கிறேன். இது எம்.டி.எம் அவர்கள் சொன்னதல்ல. இது என் சொந்த வாசிப்பு. ப்ரம்மராக்‌ஷஸ் பழைய நரபலியின் மூடத்தனத்தை அம்பலப்படுத்துகிறான். ஆனால் அதே கதையில் அவன் கோரும் புதிய அமைப்பும் ஒரு பலியையே கோருகிறது. ஜெயகாந்தனின் கங்கா மரபின் நரபலியிலிருந்து வெளியே வருகிறாள் — அக்னி பரிக்ஷை என்ற பழைய சடங்கிலிருந்து. ஆனால் அவள் வெளியே வந்த இடம் ஒரு தனி வெளியல்ல. அது ஒரு புதிய அமைப்பு. அந்த புதிய அமைப்பு கங்காவிடம் என்ன கோருகிறது? “கங்கா எங்கே போகிறாள்”-இல் அந்தக் கேள்வி வெளிப்படுகிறது. தனிமை. தன்னந்தனியே விடுதலையைத் தேடும் கடமை. யாரும் கூட வராத ஒரு பாதை. பழைய சமூகம் அவளைக் கைவிட்டது. புதிய சமூகம் அவளைத் தனித்துவிட்டது. ஒரு விடுதலை, ஆனால் ஒரு தனிமையான விடுதலை.


கங்காவின் அம்மா ஒரு குடம் தண்ணீரால் தன் மகளை ஏற்றுக்கொண்டாள். 2026-ல் கங்காவின் பேத்திக்கு ஒரு குடம் தண்ணீர் ஊற்றுவதற்கு ஒரு அம்மா இல்லை. அவள் தன்னந்தனியே ஒரு கிளினிக்கில் உட்கார்ந்து ஒரு counselor-இடம், “I feel violated, I feel overwhelmed” என்று சட்டமொழியில் சொல்கிறாள். “என் உடல், என் வாழ்வு, என் தேர்வு” என்ற சட்டமொழி அவளுடையது. அவள் விடுதலை பெற்றவள். ஆனால் அந்த விடுதலையின் எடை அவள் ஒருத்தியின் மீது மட்டுமே. இது ஒரு குற்றச்சாட்டு அல்ல, ஒரு சாட்சியமே. நவீனத்துவம் ஒரு வெற்றி, அதே நேரத்தில் ஒரு விலை. இரண்டும் ஒரே நவீனத்தின் இரு முகங்கள்.

ப்ரம்மராக்‌ஷஸின் கட்டமைப்பை புரிந்துகொள்ள, அது எதில் கட்டப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். அதற்கு பல அடித்தளங்கள் உள்ளன. அதில் முக்கியமான மூன்றாக நான் நேரம், கிருமி, தொழில்-அறிவியல் கூட்டணி என்பதை மட்டும் எடுத்துக்கொள்கிறேன். இது ஒரு சுயபரிசீலனைக்கான முயற்சி என்று எடுத்துக்கொள்ளலாம்.


நேரத்தை முதலில் எடுத்துக்கொள்கிறேன். பழைய சமூகத்தில் நேரம் சுழற்சியானது. பருவங்கள், விழாக்கள், மாதப் பிறப்பு, திதி, கிரகணம், அதிர்ஷ்டம், முகூர்த்தம் — இவை அனைத்தும் ஒரு சுழற்சியின் பகுதி. காலம் மீண்டும் மீண்டும் திரும்பக்கூடியது. ஒரு இழப்பு ஒரு சுழற்சியில் வந்தால், அடுத்த சுழற்சியில் ஒரு ஆறுதல் வரும். ஒரு திருவிழா வந்தால், அது பன்னிரண்டு மாதங்களில் திரும்பவும் வரும். சடங்குகள் இந்தச் சுழற்சியைக் குறிக்கின்றன — ஒரு குலதெய்வ வழிபாடு வருடத்துக்கு ஒருமுறை; ஒரு கார்த்திகை விளக்கு மாதத்துக்கு ஒருமுறை; ஒரு ஏகாதசி விரதம் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை. நேரம் ஒரு rhythm. உடல் அந்த rhythm-இல் பங்குகொள்கிறது.

நவீனத்துவம் இந்த நேரத்தை நேர்க்கோடாக்கியது. நேர்க்கோடு மட்டுமல்ல — அதைத் துண்டாக்கி, ஒவ்வொரு துண்டையும் பணமாக மாற்றியது. “Time is money.” ஒரு மணி நேரம் ஒரு unit. அதற்கு ஒரு விலை — விற்கப்படக்கூடியது, வாங்கப்படக்கூடியது, சேமிக்கப்படக்கூடியது, வீணடிக்கப்படக்கூடியது. “Spend time, save time, waste time, invest time” — எல்லா வினைச்சொற்களும் பண வார்த்தைகள். இந்த மாற்றமே தொழில் புரட்சியின் தேவை. தொழிற்சாலை தினமும் ஒரு துல்லியமான நேர அளவீட்டை கோருகிறது — worker எட்டு மணி நேரம் இயந்திரத்தின் முன் நிற்க வேண்டும், துல்லியமான நேரத்தில் வந்து நிற்க வேண்டும், துல்லியமான நேரத்தில் கிளம்ப வேண்டும். கடிகாரம் தேவாலய மணியை மாற்றியது. Stopwatch முகூர்த்தத்தை மாற்றியது.


இதில் ஒரு பெரும் இழப்பு உள்ளது, இன்னும் சரியாக உச்சரிக்கப்படாத ஒரு பெரும் இழப்பு. சுழற்சியின் இழப்பு என்பது வெறும் சடங்கின் இழப்பு அல்ல — அது rhythm-இன் இழப்பு. ஒரு நோயாளி துக்கத்தில் இருக்கிறார். பழைய கட்டமைப்பு அவருக்கு ஒரு கார்த்திகை, ஒரு பிதுர் தர்ப்பணம், ஒரு மண்டல விரதம் — இந்த சுழற்சிகள் வழியாகத் துக்கத்தைக் கட்டமைத்துக் கொடுத்தது. நவீனம் அவருக்கு என்ன கொடுக்கிறது? ஆறு வாரங்கள் SSRI, ஆறு sessions CBT, “review in six weeks”. துக்கம் ஒரு கால அலகு ஆகிறது — billable hours. ஒரு நோயாளி “I need more time” என்கிறார். நான் “We have twenty minutes” என்கிறேன். அந்த இருபது நிமிடமே எங்கள் இருவருக்கும் கிடைத்த நேரம். அதைப் பங்கீடு செய்ய வேண்டும் — sleep hygiene-க்கு ஐந்து நிமிடம், medication review ஐந்து நிமிடம், safety plan ஐந்து நிமிடம், paperwork ஐந்து நிமிடம். இது ஒரு clinic மட்டுமல்ல. இது நவீனத்தின் தர்க்கம். நேரம் ஒரு resource. உடல் அந்த resource-இன் user.

வேகம் இதனுடைய அடுத்த நீட்சியான கட்டம். சுழற்சி இல்லாத நேரம், துண்டாக்கப்பட்ட நேரம், பணமாக்கப்பட்ட நேரம் — இவை இயல்பாக வேகத்தைக் கோருகின்றன. “Faster” என்பது நவீனத்தின் prayer. Fast food, fast fashion, fast medicine, fast psychiatry. ஒரு mentally ill நோயாளி admit ஆனால் “length of stay” ஒரு metric. Shorter is better. ஒரு குழந்தை கவனக்குறைவாக இருந்தால் Ritalin — immediate onset. ஒரு துக்கம் நீடித்தால் “complicated grief” — pathology. நாம் எல்லாவற்றுக்கும் ஒரு fast solution தேடுகிறோம். Slowness என்பது inefficiency. Patience என்பது ஒரு clinical problem. பழைய 


சமூகத்தில் ஒரு துக்கம் ஆண்டு சார்ந்ததாக இருந்தது — ஓராண்டு திதி, ஓராண்டு சடங்கு. நவீனம் அதை ஆறு வாரத்திற்குள் “resolve” செய்ய விரும்புகிறது. ஏழு வயது சிறுவனின் சிரிப்பு இங்கு எதிரொலிக்கிறது — அம்மாவுக்கும் தெரியவில்லை, அப்பாவுக்கும் தெரியவில்லை, doctor-க்கும் தெரியவில்லை, ஒரு துக்கத்துக்கு அதற்கான சுழற்சி இருக்கிறது என்பது.

கிருமிக் கோட்பாடு அடுத்தது. Pasteur, Koch, Lister — பத்தொன்பதாம் நூற்றாண்டின் பெருமை. அவர்கள் பிசாசு கோட்பாட்டை — bad air, miasma, possession states — வெளியேற்றினார்கள். ஒரு specific organism, ஒரு specific disease. TB-க்கு tubercle bacillus. Cholera-வுக்கு Vibrio cholerae. இந்த ஒற்றை காரண-காரிய தர்க்கம் ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியது. Antibiotics, vaccines, surgical antisepsis — இவை modern medicine-இன் அடித்தளம். நான் அதை நம்புகிறேன், தினமும் பயன்படுத்துகிறேன். அவற்றின் பயன்பாடுகளை தினசரி காண்கிறேன்.


ஆனால் கிருமிக் கோட்பாடு ஒரு epistemology-ஐயும் கொண்டு வந்தது. உலகின் எல்லாத் துன்பத்தையும் ஒரே காரண-காரியத்திற்கு தள்ளும் தர்க்கம். மனச்சோர்வு ஒரு serotonin imbalance. Schizophrenia ஒரு dopamine dysregulation. ADHD ஒரு prefrontal cortex issue. Obesity ஒரு leptin resistance. இந்த reduction-ல் சில சந்தர்ப்பங்களில் உண்மை, சில சந்தர்ப்பங்களில் மிகைப்படுத்தல். ஒரு சமூகத்தின் வறுமை, ஒரு குடும்பத்தின் trauma, ஒரு ஊரின் சிதைவு — இவை ஒரு மனிதரின் மனநோயை உருவாக்கலாம். ஆனால் அந்த complexity-யை குறிப்பிட ஒரு billing code இல்லை. “Socioeconomic deprivation-induced depressive adjustment reaction in the context of intergenerational trauma” என்று நான் எழுதினால் insurance company reject செய்யும். F33.1 என்று எழுதினால் அதை உடனே ஒத்துக்கொள்ளும். கிருமிக் கோட்பாட்டின் அழகை நான் மறுக்கவில்லை. அதன் imperial nature — அனைத்தையும் ஒரு வரைவிற்குள் நெறிக்கும் முனைப்பு — அதைத்தான் குறிக்கிறேன்.


தொழில்-அறிவியல் கூட்டணி மூன்றாவது அடித்தளம். அறிவியல் ஒரு முறை. தொழில் ஒரு வணிகம். நவீனத்துவம் இரண்டையும் ஒன்றாக இணைத்தது. ஒரு randomised controlled trial ஒரு அறிவியல் கருவி; அது ஒரு மருந்துக் கம்பெனியால் நடத்தப்படும்போது அது ஒரு வணிகக் கருவியாகவும் ஆகிறது. DSM (Diagnostic and Statistical Manual of Mental Disorders) ஒரு மனநோய் வகைப்பட்டியல்; அது ஒரு insurance billing framework-ஆகவும் உள்ளது. ஒரு guideline ஒரு clinical tool; அது ஒரு liability protection-ஆகவும் செயல்படுகிறது. இந்த இரட்டை இயல்பு பிழையல்ல. அது நவீனத்தின் கட்டமைப்பு. அறிவியல் அறிவியலுக்காகவே நடத்தப்படக்கூடிய ஒரு pure practice இல்லை. அது ஒரு political-economic system-த்திற்குள் நடக்கிறது.


இந்த மூன்று அடித்தளங்களின் மேலேதான் seclusion போன்ற கட்டமைப்புகள் நிற்கின்றன. மிகவும் ஆக்ரோஷத்துடனும், மூர்க்கத்துடனும் நடந்துகொள்ளும் ஒரு சில உள்நோயாளிகளைத் தனி அறையில் வைத்து, தீவிர சிகிச்சைக் கண்காணிப்பு செய்யும் முறையே seclusion treatment எனப்படும் ஒரு அமைப்பு. இது அன்றாடம் மிகச் சாதாரணமாக புழக்கத்தில் இருக்கும் ஒரு உள்நோய் சிகிச்சை முறை. ஒருவரைத் தீவிர சிகிச்சை கண்காணிப்புக்கு உட்படுத்தும்போது அவருடைய நெருங்கிய உறவுகளிலிருந்தும், மற்ற நோயாளிகளிடமிருந்தும் தனித்து வைப்பது, மற்றும் வேறு எந்த வகையான பிரச்சினையும் நேர்ந்துவிடக் கூடாது என்ற ஒரு தகுந்த பாதுகாப்பை அமைப்பது — மிகவும் சாதாரண ஒரு வழக்கம்தான் இது. இதையே உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம்.


நேர அலகு — ஒவ்வொரு 15 நிமிடம் special observation, ஒவ்வொரு நான்கு மணி நேரம் review. கிருமிக் கோட்பாட்டின் logic — ஒரு patient, ஒரு diagnosis, ஒரு treatment plan. தொழில்-அறிவியல் — evidence base, regulatory compliance, audit trail. ஒவ்வொன்றும் individually defensible. ஒவ்வொன்றையும் கூட்டிச் சேர்த்துப் பார்த்தால் இது ஒரு ராக்‌ஷச கட்டமைப்பாக மிக எளிதாகப் புலனாகும். இந்த இரு முகங்களையும் எந்த உள்நோயாளிப் பிரிவில் வேலை செய்யும் ஒரு மருத்துவரோ, செவிலியோ தினமும் சந்திக்க வேண்டிய விஷயம்தான்.


நானும் ஒரு inpatient psychiatric unit-ல் வேலை செய்யும் ஒரு consultant. கடுமையான மனநிலையில் உள்ள நோயாளிகளை கவனிக்கிறோம். ஒரு நோயாளி தனக்கோ பிறருக்கோ ஆபத்தாக நடந்துகொள்ளும்போது அவனையோ அவளையோ அந்த அறைக்குள் தனியாக வைக்கிறோம். கதவு வெளியிலிருந்து பூட்டப்படுகிறது. அவர்களை 24 மணி நேரமும் தொடர்ந்து ஒரு Health Care Assistant அமர்ந்து கண்காணிப்பார். ஒவ்வொரு மணி நேரமும் அந்தக் கண்காணிப்புப் பணியை மற்றொருவர் வந்து ஓய்வு கொடுப்பார். இப்படித் தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கிற ஒரு கண்காணிப்பு அமைப்புதான். அவர்களை மேற்பார்வையிட ஒரு nurse மேலதிகாரியாக நடந்துகொள்வார். கண்காணிக்கும் நிகழ்வுகளை ஒரு தாளில் குறித்துக்கொண்டே இருப்பார்கள். தாள்களை நிரப்பிக்கொண்டே இருப்பார்கள். ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கும் ஒரு மருத்துவரும் ஒரு nurse-ம் கூட்டாகச் சேர்ந்து ஒரு medical review. ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் சிகிச்சைக் குழு, ஒரு consultant தலைமையில் நடக்கும் ஒரு review. சட்டம் இதற்கு framework தருகிறது. Regulatory body இதை audit செய்கிறது. Seclusion policy இதை எப்படிச் செய்ய வேண்டும் என்று வரையறுக்கிறது.


இது ஒரு நவீன சடங்கு. மிகவும் துல்லியமான சடங்கு. பழைய சமூகம் இதே நோயாளியை என்ன செய்திருக்கும்? ஒரு கோயிலில் கட்டிவைத்திருக்கும். ஒரு மரத்தில் பிணைத்திருக்கும். பிசாசு பிடித்ததாக வகைப்படுத்தி ஒரு பூஜாரியை அழைத்திருக்கும். ஒரு பேயோட்டியை அழைத்திருக்கும். குடும்பத்தினரால் “பிச்சை எடுக்கத்தான் லாயக்கு” என்று கைவிடப்பட்டிருக்கும். இன்னும் சில பழைய mental hospital ward-களில் ஒரு warder ஒரு பிரம்புடன் நடந்து அமைதியை நிலைநாட்டிக்கொண்டே இருப்பார். அவரது பிரம்பு ஒரு நிர்வாகச் சட்டம் அல்ல. அது ஒரு medical protocol-ம் அல்ல. அது ஒரு dispensable authority. பழைய முறைகள் இன்றைய seclusion suite-ஐ விட அதிக இரக்கமற்றவை. இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. நான் நவீன மனநல மருத்துவத்தை நிராகரிக்கவில்லை. அது என் வேலை. அது என் அடையாளம். அது என் கடமை.


ஆனால் நவீனத்தின் கட்டமைப்பு ஒரு வகையான nuance-ஐ இழக்கிறது. ஒரு பெண் restraint-க்குப் பிறகு seclusion-ல் இருக்கிறாள் என்றே வைத்துக்கொள்வோம். Rapid tranquilisation கொடுக்கப்பட்டுவிட்டது. அவள் இப்போது அமைதியாக இருக்கிறாள். மருத்துவக் குழு வெளியே நின்று முழுக் கண்ணாடி ஜன்னல் வழியாகப் பார்க்கிறார்கள். அவள் மூலையில் சுருண்டு கிடக்கிறாள். அவர்களால் அவளைப் பார்க்க முடிகிறது. Nurse observation chart-ஐ காட்டுகிறார். மருத்துவர்கள் கையொப்பமிடுகிறார்கள். ஆவணத்தின் அடுத்த பக்கம் நிரப்பப்படுகிறது — “Patient resting. No signs of distress. Continue seclusion. Review in four hours.”


அந்த ஒவ்வொரு வார்த்தையும் சட்டரீதியாக மிகத் துல்லியமானது. “No signs of distress” — ஏனென்றால் distress என்பதற்கு ஒரு operational definition உள்ளது — self-harm behaviours, agitation, shouting, head-banging. அவள் மூலையில் சுருண்டு கிடப்பது distress அல்ல. அது “resting”. இந்த வார்த்தைத் தேர்வு ஒரு நூற்றாண்டின் psychiatric literature-ல் கட்டமைக்கப்பட்டது. RCT-கள், scales, guidelines, tribunal judgments, audit reports. ஒவ்வொரு வார்த்தையும் ப்ரம்மராக்‌ஷஸின் கட்டமைப்பு.


இந்த அமைப்பிற்கும் ஒரு பலி உள்ளது. ஆனால் அந்தப் பலி ஒரு உருக்கமான காட்சி அல்ல. ஒரு அம்மா பார்வையாளர்கள் அறையில் கண்ணீருடன் நிற்கும் காட்சி இல்லை. அது அப்படி நிகழ்வதில்லை. உண்மையில் பெரும்பாலான குடும்பங்கள் மருத்துவ care model-களை முழுமையாக நம்புகிறார்கள். Consent form-ல் விருப்பத்துடன் கையொப்பமிடுகிறார்கள். “Please update us” என்று சொல்லிவிட்டுத் திரும்புகிறார்கள். சில குடும்பங்கள் முற்றிலுமாகக் காணாமல் போகிறார்கள் — treatment planning meeting அல்லது discharge planning meeting-ல் phone எடுக்கமாட்டார்கள். இது அவர்களுடைய பிழை அல்ல. அவர்களுக்கு வேறு ஒரு தெரிவு இல்லை. Care model என்பது ஒரு முழு ecosystem. அதற்குள் நோயாளியை முழுமையாக ஒப்படைப்பது ஒரு நவீன சடங்கு. அம்மா தன் பொறுப்பை handover செய்கிறார். அது ஒரு வகையான modern ritual. நாம் “informed consent” என்கிறோம்.

பலி இங்குதான் உள்ளது — பலியே தெரியாமல் நடக்கிறது. அந்தப் பெண் cubicle-ல் தனியாக. அவளது அம்மா வீட்டில் phone-க்காகக் காத்திருக்கிறார். Ward-ல் observation chart-ல் நான் கையொப்பமிடுகிறேன். இந்த மூன்று இடங்களிலும் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்ள முடியாத ஒரு தூரத்தில்தான் இருக்கிறார்கள். இது ஒரு நவீன அமைப்பால் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதையே நாம் நன்கு வரையறுக்கப்பட்ட “structured care” என்கிறோம். மூர்க்கத்தையும் ஆக்ரோஷத்தையும் எதிர்கொள்ளும் மிகவும் பயனுள்ள ஒரு நவீன அமைப்பு. ஆனால் மிகவும் பயனுள்ள இந்த effectiveness-ல் ஒரு மெல்லிய absence உள்ளது. யாரும் அவளுக்குக் குடம் தண்ணீர் ஊற்றுவதில்லை. ஏனென்றால் அப்படி ஒரு சடங்கு இந்த model-ல் இல்லை. அம்மா ஊற்ற விரும்பவும் இல்லை — care team உள்ளதே, அவர்கள் “handle” செய்கிறார்கள். நானும் ஊற்றுவதில்லை — அது clinical boundary violation. Nurse-ம் ஊற்றுவதில்லை — அது protocol-ல் இல்லை. ஆனால் இந்த ஊற்றாமையே நவீன seclusion-ன் குணம். பலி என்பது ஒரு கண்ணீர் காட்சி அல்ல. பலி என்பது ஒரு ritual in absence.


ஏழு வயது சிறுவனின் சிரிப்பு இங்கு எதிரொலிக்கிறது — இந்த அம்மாவுக்கும் தெரியவில்லை, இந்த staff-க்கும் தெரியவில்லை, இந்த consultant-க்கும் தெரியவே இல்லை, இந்த regulator-க்கும் தெரியவில்லை, இந்த உலகம் இப்படி ஆகிவிட்டது என்று. எல்லோரும் நல்லெண்ணத்தில் செயல்படுகிறார்கள். System சரியாக வேலை செய்கிறது. Outcomes measurable. ஆனால் ஒரு பழைய சடங்கு — ஒரு தாய் மகளுக்குக் குடம் தண்ணீர் ஊற்றும் சடங்கு — எந்த நவீன வடிவத்திலும் நாம் replace செய்யவில்லை. அது ஒரு அறிவார்ந்த இழப்பு. இது ஒரு குற்றச்சாட்டு அல்ல. வெறும் சாட்சியம்.


இது ஒரு பிற்போக்குவாதமாகக் கேட்கக்கூடும். ஆனால் அப்படி அல்ல. ஒரு பிற்போக்குவாதம் “Seclusion-ஐ கலைப்போம், policy-ஐ கிழிப்போம், warder-ன் பிரம்படிக்குத் திரும்புவோம், கடிகாரத்தை உடைப்போம், antibiotics-ஐ வெளியேற்றுவோம்” என்று சொல்லும். நான் அதைச் சொல்லவில்லை. Seclusion ஒரு உயிர்காக்கும் intervention. கடிகாரம் ஒரு utility. Antibiotics ஒரு miracle. நான் இவற்றை நம்புகிறேன், தினமும் சரிபார்க்கிறேன். ஆனால் இவற்றின் கட்டமைப்புக்கு ஒரு விலை இருக்கிறது என்பதை நான் பார்க்க மறுத்தால், இதுவும் ஒரு ராக்‌ஷசத்தனமாக வளர்ந்துவிடும். அந்த absence cubicle கதவின் இரு புறங்களிலும் நிற்கும். அதைப் பார்க்க முடிந்தால் அந்த அமைப்பை சற்று மனிதமாக நடத்த முடியும். ஒரு small acknowledgement. ஒரு short update.

எம்.டி.எம் அவர்கள் ஒரு வரி சொன்னார் — “ஒவ்வொரு சூழலுக்கும் சாட்சி நிற்பதின் கலையே நவீனமாகிறது.” இந்த வரி என்னை நிறுத்தியது. ஏனென்றால் நான் எழுதும் ஒவ்வொரு clinic குறிப்பும் ஒரு சாட்சியமாகவோ ஒரு வகைப்படுத்தலாகவோ இருக்கலாம். “Patient resting. No signs of distress. Continue seclusion” என்றால் அது ஒரு வகைப்படுத்தல். “அவள் மூலையில் சுருண்டு கிடக்கிறாள். இன்றும் அவளுடைய அம்மாவிடமிருந்து phone call இல்லை. எந்தவிதமான தகவலும் இல்லை. இந்த absence ஒரு clinical சிக்கல் அல்ல. ஆனால் இது ஒரு சாட்சியம்” என்று எழுதினால் அது witness. முதலாவதை ஒரு கணினி எழுத முடியும். இரண்டாவதை ஒரு மனிதனால் மட்டுமே எழுத முடியும். முதலாவது audit-க்குத் தேவை. இரண்டாவது நவீனத்துவத்தின் கோரப்பசிக்கு ஆளாகாமல் இருப்பதற்குத் தேவை. இந்த இரண்டிற்கும் இடையிலான வித்தியாசம்தான் நவீன sensibility.


ப்ரம்மராக்‌ஷஸ் என்ற கதையின் எழுத்தாளர் யாரென்று நமக்குத் தெரியாது. ஆனால் அவர் ஒரு அமைப்பின் உள்ளே நின்று அந்த அமைப்பின் மூடத்தனத்தை ஒரு ஏழு வயது சிறுவனின் சிரிப்பின் மூலம் அம்பலப்படுத்துகிறார். 


ஜெயகாந்தன் தன் காலத்தின் சமூக அமைப்பின் உள்ளே நின்று, அதன் மூடத்தனத்தைத் தாயின் குடம் தண்ணீரின் மூலம் அம்பலப்படுத்தினார். எனக்குத் தெரிந்த வரையில் யாரும் நவீன மனநல மருத்துவ அமைப்பின் போதாமைகளைச் சுட்டிக்காட்டியோ, அதனுள் புதைந்து கிடக்கும் நகைமுரண்களை எண்ணிச் சிரிக்கும் அந்த ஏழு வயது பையனின் சிரிப்புக் குரலைக் கேட்கும் யாரையும் நான் அதிகம் பார்த்ததில்லை. Policy வெற்றி பெறுகிறது. Paperwork முடிகிறது. Ward rounds நகர்கிறது. Clock ticks.


ஆனால் அந்த முயற்சிதான் எனக்கு இது இலக்கியத்திலிருந்து கற்ற பாடம் — அமைப்பை நிராகரிப்பதும் அல்ல, அதைக் கொண்டாடுவதும் அல்ல; அதற்குச் சாட்சியாக நிற்பது. ஏழு வயது சிறுவனின் சிரிப்பை மறக்காமல் இருப்பது. ஊற்றப்படாத குடம் தண்ணீரை மறக்காமல் இருப்பது. சுழற்சியின் இழப்பை மறக்காமல் இருப்பது.


பெரிய கோட்பாடுகள் எதுவும் இதற்குத் தேவையில்லை.


நன்றி: ப்ரம்மராக்‌ஷஸ் கதையை நான் கேட்கும்படியாய் செய்தது திரு எம்.டி. முத்துக்குமாரசாமி அவர்களுடைய ஸ்ருதி TV YouTube பேச்சு. “ஒவ்வொரு சூழலுக்கும் சாட்சி நிற்பதின் கலையே நவீனமாகிறது” என்பதும், கங்கா என்னும் ஜெயகாந்தனின் கதாபாத்திரம் modern sensibility-யை விளக்கப் பயன்படுத்தக்கூடிய ஒரு யுத்தி என்பதும் அவர் மூலம் அறிந்ததே. அவரே இதை மிகவும் “அரதப்பழசான” உதாரணம் என்று தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். நன்றி.


ஜே.பி. ராஜேந்திரன்