மூடிய அறை
ஜே.பி. ராஜேந்திரன்
[ Picture Courtesy - Webdunia Site ]
[பகுதி 1 / 2 ]
மூடிய அறை - 'ரோஜாவின் பெயர்' - ஒரு கட்டமைப்பியல் வாசிப்பு -
படித்தவுடனேயே எளிதில் புரிந்துகொள்ள முடியாத நாவல்கள், சிறுகதைகள், திரைப்படங்கள் உண்டு. உம்பர்ட்டோ எக்கோவுடைய ( Umberto Eco) - The Name of the Rose அவற்றுள் ஒன்று. இரண்டு மூன்று முறை ஆங்கிலத்திலேயே படிக்க முயன்று கைவிட்ட நாவல்களிலும் ஒன்று.
மருத்துவக் கல்லூரி மாணவனாக ஏதோ ஒரு உந்துதலில் இதை வாங்கி வைத்துக்கொண்டேன். அப்போது Internet பரவலாக இல்லாத காலம். ஒரு நாவலை வாசிப்பதற்காக Internet centre-ல் உட்கார்ந்து குறிப்பெடுத்துப் படிக்கிற அளவுக்கு வசதி இல்லாத காலம். எப்படியோ இந்த முயற்சி கொஞ்சம் கொஞ்சமாகக் கை நழுவிவிட்டது .
ஐந்து கிருத்துவப் பள்ளிகளில் படித்தது, Bible class, moral class, Sunday sermons, கிருத்துவச் சடங்கு முறைகள், கிருத்துவப் பண்டிகைகள் — இவை கொடுத்த ஏதோ ஒரு தைரியத்தில்தான் இதை வாங்கி வைத்திருந்தேன் என்று நினைக்கிறேன். ஆனால் இந்த வகையான பரிச்சயமும் அந்நியோன்யமும் மட்டும் இந்த நாவலை வாசிக்கப் போதுமானதாக இல்லை என்பதைப் பின்னால்தான் தெரிந்துகொண்டேன். இதற்கு வேறொரு நூலகம் வேண்டும். அது என்னிடம் அப்போது இல்லை.
இன்னொரு நாள் இந்த நாவலைக் கையில் வைத்துக்கொண்டு திரிந்த சமயத்தில் என்னுடைய ஆசிரியர் ஒருவர் அதைக் கேட்டார். கொடுத்துவிட்டேன். ஒருவிதமாகப் பெருமையாக இருந்தது. இது என்னிடம் இருக்கிறதைவிட அவரிடம் இருந்தால்தான் நல்லது என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு அதை முற்றிலுமாக மறந்துவிட்டேன்.
இப்போது இது தமிழ் மொழியாக்கமாக வந்திருக்கிறது [ரோஜாவின் பெயர், தமிழில்: எம்.டி. முத்துக்குமாரசாமி, எதிர் வெளியீடு]. அந்தப் பிரதியை உன்னிப்பாகக் கவனித்தும் படித்தும் கொண்டிருக்கிறேன். ஆங்கிலத்துக்கும் தமிழுக்கும் இடையே பெரிய மொழித் தடை எதுவும் இல்லை. இருந்தும் இந்த நாவலுக்குள் எளிதாக நுழைந்துவிட முடியவில்லை. என்னுடைய முதல் வாசிப்பில் வெகு தூரம் செல்ல முடியவில்லை. இன்னும் சொல்லப்போனால், தலைப்பிலேயே நான் நின்றுகொண்டிருக்கிறேன்.
ரோஜா எதனுடைய குறியீடு? ஏன் ரோஜா மலரை இந்த நாவலின் தலைப்பாக வைத்திருக்கிறார்கள்? ரோஜாதான் இதன் மையக்கருத்தா?
ரோசிக்ரூஷியன் — ரோஜா மலரைச் சிலுவை போல மாற்றியும், சிலுவையை ரோஜா மலர் போல மாற்றியும். எத்தனையோ எழுத்துக்கள், எத்தனையோ உருமாற்றங்கள். இதைப் பற்றிய ஹாலிவுட் படங்கள் வேறு. இவை எல்லாம் இந்த நாவலுக்குள் நுழைய எனக்குப் பெரிய தடையாக இருந்திருக்கின்றன.
இது என்னுடைய அனுபவத்தை மட்டுமே பதிவு செய்யும் ஒரு முயற்சி. ஏதோ ஒரு soteriology, ஏதோ ஒரு இறையியல், தனிமனித விடுதலை எப்படிக் கிடைக்கும் என்ற அங்கலாய்ப்பு. எப்படி நமக்கு மெய்யுணர்வு ஏற்படக்கூடும்? கடவுள் அனுபூதி கிடைக்குமா, கிடைக்காதா? அந்தக் கோணங்களில்தான் நான் வெகு காலமாக நின்றுகொண்டிருக்கிறேன்.
இந்த நாவலைப் படித்து முடித்த பிறகு ஒன்றுமே இல்லை என்று சொல்ல வருகிறார்களா? இல்லை, இதில் ஏதோ ஒரு பெரிய மர்மம் இருக்கிறது, அதைப் புரிந்துகொள்ளும்போது பெரிய சக்தி கிடைக்கும் என்று சொல்ல வருகிறார்களா? இல்லை, இது ஆசையையும் வேதனையையும் மறப்பதற்கான ஒரு மருந்தா? தெரியவில்லை.
இந்த ஒன்றுமில்லாமையைப் பற்றி எனக்கு நினைவுக்கு வருவது ஒரு சிறுவர்களுக்கான படம்தான் — Kung Fu Panda. அதில் அனைவரும் தேடுவது டிராகன் சுருள்; அதைப் பெற்றவனுக்கு எல்லையற்ற சக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. கடைசியில் அது திறக்கப்படும்போது உள்ளே எதுவும் இல்லை. வெறும் மின்னும் தளம்; பார்ப்பவனுடைய முகம் மட்டுமே அதில் தெரிகிறது. இரகசியம் என்று ஒன்று இல்லை. இரண்டு பேர் அதைப் பார்க்கிறார்கள் — பாண்டாவும், அவனுடைய எதிரியான பனிச் சிறுத்தையும். ஒருவனால் அதை ஏற்றுக்கொள்ள முடிகிறது; இன்னொருவனால் முடியவில்லை. ஏற்றுக்கொள்ள முடியாதவனுக்கு அது ஏமாற்று; ஏற்றுக்கொள்பவனுக்கு அதுவே விடுதலை. ஒரே வெறுமை, இரு வரவேற்புகள். இதை நான் அப்போது எக்கோவோடு (Umberto Eco) தொடர்புபடுத்தவில்லை. பின்னால் தொடர்புபடுத்த வேண்டியிருந்தது.
தாமரையைப் போல ரோஜாவும் ஒரு மலர்தான். ஆனால் ரோஜாவுக்கு என்று ஒரு பழம் நமக்குத் தெரியாது. முள் தெரியும். ரோஜாச் செடி பழம் தராது என்றும் தெரியும். தன்னிகரற்ற அழகும், பல வண்ணங்களும், குறுகிய ஆயுளும் உடைய மலர்கள் என்பதும் தெரியும். முழுக்க முழுக்க முள். பழம் தராத செடி. குறுகிய ஆயுள். இது எதைக் குறிக்க வருகிறது என்ற சிந்தனையிலேயே நான் நிறைய காலம் தங்கிவிட்டேன்.
நமக்குத்தான் தாமரை இருக்கிறது. சகதியாக இருந்தாலும் சரி, தெளிந்த நீராக இருந்தாலும் சரி, எப்படியும் மேலே வந்து மலரும். ஒரு நிரந்தர அமைதி சாத்தியம் என்று சொல்கிற ஒரு பெருமலர் அது.
இந்த இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கப் போய் என் கவனம் சிதறி, இங்குமங்கும் சுற்றிக்கொண்டிருந்தேன். இதற்குப் பெரிய முரணாக இருந்தது கதையின் அமைப்பு — ஏதோ ஒரு மர்ம நாவல் போல. இந்தக் கதை என்ன சொல்ல வருகிறது? இந்தக் குறியீடு என்ன சொல்ல வருகிறது? இரண்டுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறதா, இல்லையா? ஒரு துப்பறிவாளன் போல deductive reasoning செய்துகொண்டிருந்தால் கடவுளை அடைய முடியாது, அமைதியை அடைய முடியாது என்று சொல்ல வருகிறார்களா? அப்படி யோசித்துக்கொண்டு, புரியாமல் விட்டுவிட்டேன்.
மிகவும் பிரயத்தனப்பட்டு ஒரு சிறிய நாவல் எழுதிக்கொண்டிருந்த காலத்தில், மனித நாகரிகங்கள் எப்படி உருவாகின்றன என்பதைப் படித்துக்கொண்டிருந்தேன். அதில் வருகிற தொன்மங்களையும் குறியீடுகளையும் எப்படிப் புரிந்துகொள்வது, எப்படித் தொடர்புபடுத்திப் பார்ப்பது என்று தெரியாமல் லெவி-ஸ்திராஸ் ( Levi Strauss ) படிக்க ஆரம்பித்தேன். எடுத்த எடுப்பிலேயே, myth is like music என்று சொல்லி, இசையை வைத்துத்தான் தொன்மங்களைப் புரிந்துகொள்வதற்கான பயிற்சியை விளக்கிக்கொண்டிருந்தார். இசையும் எனக்கு மிகவும் புரியாத ஒரு விஷயமாக இருந்ததனால், அவர் சொல்கிற முறையையும் என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை.
தொன்மங்களையும் குறியீடுகளையும் எத்தனையோ முறைகளில் வாசிக்கலாம் என்ற புரிதல் மட்டுமே இருந்தது. இந்தத் தொன்மம் என்ன சொல்கிறது, இதில் நமக்குத் தெரிந்தவை எத்தனை, தெரியாதவை எத்தனை, தெரிந்துகொள்ள வேண்டியவை எத்தனை என்று தனித்தனியாக மேலோட்டமாகப் பார்க்க மட்டுமே தெரிந்திருந்தது. ஒன்றோடு ஒன்று ஆழமாகத் தொடர்புபடுத்திப் பார்க்கத் தெரியவில்லை.
மிகவும் சமீபத்தில்தான் இசைப் பயிற்சியும் music theory-யும் பயின்றுகொண்டிருக்கிறேன். அப்போதுதான் லெவி-ஸ்திராஸ் என்ன சொல்ல வருகிறார் என்பது புரிந்தது. இடமிருந்து வலமாக, ஒவ்வொரு சத்தமாக, ஒவ்வொரு வாத்தியமாக, தனித்தனியாக இசையை வாசிப்பது ஒரு சாத்தியம். எல்லாவற்றையும் ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கி வைத்து, எங்கெல்லாம் இசை ஒலிக்கிறது, எங்கெல்லாம் அதிர்கிறது, எங்கெல்லாம் மீறுகிறது என்று பார்ப்பது இன்னொரு சாத்தியம். ஒரு இசைத் தாளை மேலிருந்து கீழாகவும் வாசிக்க வேண்டும் என்கிறார் [லெவி-ஸ்திராஸ், 'The Raw and the Cooked '- 'பச்சையும் சமைத்ததும்' — முன்னுரை]. தொன்மங்களை ஆராயும் முறையாக அவர் சொல்வது இரண்டாவதை. Chords, resonances — இவை அப்போதுதான் புரிய ஆரம்பித்தன.
இதை முதலில் படித்துப் புரிந்துகொள்ள முயற்சித்ததற்கும், லெவி-ஸ்திராஸ் என்ன சொல்ல வருகிறார் என்று புரிந்ததற்கும் இடையே கிட்டத்தட்ட இருபது வருடங்கள் ஓடிவிட்டன.
அந்தப் புரிதலைக் கையில் வைத்துக்கொண்டு மீண்டும் எக்கோவிடம் திரும்பினேன். திரும்பியவுடன் தெரிந்தது, இருபது வருடங்களுக்கு முன்னால் நான் ஒரு அடிப்படைத் தவறு செய்திருக்கிறேன் என்பது.
வில்லியம் deduction செய்யவில்லை. அவன் செய்வது abduction. இரண்டுக்கும் உள்ள வேறுபாடு சிறியதல்ல. Deduction என்பது விதியிலிருந்து விளைவுக்குச் செல்வது — எல்லா மனிதர்களும் இறப்பார்கள், இவன் மனிதன், எனவே இவன் இறப்பான். Abduction என்பது தலைகீழானது. விளைவை முதலில் பார்க்கிறோம், விதியை ஊகிக்கிறோம். நாவலின் தொடக்கத்திலேயே எக்கோ இதைக் காட்டிவிடுகிறார். பனியில் குளம்படிச் சுவடுகள்; ஒரு புதரில் சிக்கியிருக்கும் சில முடிகள்; ஒரு குறிப்பிட்ட உயரத்தில் ஒடிந்திருக்கும் கிளைகள். இவற்றை வைத்து வில்லியம், தான் பார்க்கவே இல்லாத ஒரு குதிரையை — அதன் நிறத்தையும், உயரத்தையும், அது மடாதிபதியின் செல்லக் குதிரை என்பதையும் — சொல்லிவிடுகிறான். இது நிரூபணம் அல்ல; ஊகம். சுவடுகளிலிருந்து குதிரை தானாக வரவில்லை. குதிரையை முதலில் ஊகித்து, பிறகு சுவடுகளோடு பொருத்திப் பார்க்கிறான்.
அதாவது, ஊகிப்பவன் தவறவும் செய்யலாம். அதுவே abduction-ன் விலை. வில்லியமும் தவறுகிறான் — திருவெளிப்பாட்டு நூலின் ஏழு எக்காளங்களை வைத்து அவன் கட்டிய கோட்பாடு பொய்யாகிறது; கொலைகளுக்குப் பின்னால் அப்படி ஒரு திட்டம் இல்லை. இருந்தும் அந்தத் தவறான ஊகம் வழியாகவே அவன் உண்மையை அடைகிறான். எக்கோ ஒரு குறியியல் அறிஞர்; இதை அவர் தற்செயலாகச் செய்யவில்லை.
இந்த வேறுபாட்டைப் புரிந்துகொண்டவுடன் நாவலின் மையம் நகர்ந்தது. ஏனென்றால் ஊகம் என்பது எப்போதும் வெளியிலிருந்து வருகிற ஒன்று. கையில் இல்லாத ஒன்றை நோக்கி எடுக்கப்படும் ஒரு தாவல். ஒரு மூடிய அறை செய்கிற வேலையே அந்தத் தாவலைத் தடுப்பதுதான்.