Wednesday, 6 May 2026

கணிப்பு, கோயில், சினிமா: தமிழக அரசியல் நம்பிக்கையின் நரம்பியல் வரலாறு

 கணிப்பு, கோயில், சினிமா: தமிழக அரசியல் நம்பிக்கையின் நரம்பியல் வரலாறு

ஜே.பி. இராஜேந்திரன்,  மே 2026


முன்னுரை (Primer)

இந்தக் கட்டுரை ஒரு கோட்பாட்டு பயிற்சியாக (theoretical exercise) மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட  வேண்டியது

லண்டன் யூனிவர்சிட்டி கல்லூரியில் (University College London) நரம்பியல் அறிவியலாளர் (Neuroscientist) கார்ல் ஃப்ரிஸ்டன் (Karl Friston) உருவாக்கிய சுதந்திர ஆற்றல் கோட்பாட்டை (Free Energy Principle) புலன் படுத்தக்கூடிய கண்ணாடியாக  (pair of spectacles)பயன்படுத்தி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) எழுச்சியை புரிந்துகொள்ள முயல்கிறது. இந்தக் கட்டுரையில் பயணிக்கும் வழி நேர்க்கோடானது  — மனித மூளை எவ்வாறு கணிப்புகளை உருவாக்குகிறது என்பதிலிருந்து தொடங்கி, கோயில் அமைப்பு, திராவிட இயக்கம், தமிழ் சினிமா, TVK எழுச்சி என்று கடந்து, ஜனநாயக முதிர்ச்சி என்றால் என்ன என்ற கேள்வியில் முடிகிறது.

இந்தக் கட்டுரையை படிக்கும் முன் மூன்று விஷயங்களை நான் தெளிவாக சொல்ல வேண்டும்.

முதலாவது — இது TVK அல்லது விஜயை ஆதரிக்கும் கட்டுரை இல்லை. இது எந்த அரசியல் கட்சியையும் எதிர்க்கும் கட்டுரையும் இல்லை. இங்கே நடக்கும் அலசல் அரசியல் நோக்கில் (political intent) இல்லை — நரம்பியல் அறிவியல் கண்ணோட்டத்தில் (neuroscientific perspective ) நடக்கிறது. பெரியார், திராவிட இயக்கம், சினிமா, TVK — இவை அனைத்தும் ஒரு கோட்பாட்டு கட்டமைப்பின் (theoretical framework) வழியாக பார்க்கப்படுகின்றன. இதில் வரும் வரலாற்று பார்வைகள் மதிப்பீடுகள் (value judgements) இல்லை — விளக்கங்கள் (explanations) மட்டுமே .

இரண்டாவது — இந்தக் கட்டுரை ஃப்ரிஸ்டனின் கோட்பாட்டை முழுமையாக ஏற்கவில்லை. ஒரு காட்சியை புலன் படுத்தக்கூடிய  கண்ணாடியாக  மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது . கட்டுரையின் இறுதியில் அந்த கண்ணாடியின் குறைபாடுகளையும் (limitations) நேர்மையாக பேசுகிறது. "எல்லாவற்றையும் விளக்கும் கோட்பாடு இறுதியில் எதையுமே  விளக்காமல் போகலாம்" என்ற அறிவியல் தத்துவத்தின் (philosophy of science) எச்சரிக்கையை மனதில் வைத்துக்கொண்டே இந்தப் பயணம் நடக்கிறது.

மூன்றாவது — இது ஒரு அணுகக்கூடிய (accessible) கட்டுரையாக எழுதப்பட்டிருக்கிறது. நரம்பியல் அறிவியல் அல்லது தத்துவம் (philosophy) பற்றிய முன் அறிவு தேவையில்லை. தமிழ் அரசியல் வரலாற்றில் ஆர்வம் மட்டும் போதும். ஆங்கில தொழில்நுட்ப வார்த்தைகள் (technical terms) அவற்றின் தமிழ் விளக்கங்களுடன் அடைப்புக்குறிகளில் (brackets) கொடுக்கப்பட்டிருக்கின்றன.ஒரு நண்பனிடம் பேசுவது போல் எழுதியிருக்கிறேன்  அப்படியே படிக்கவும் செய்யவும்.


மறுப்பு (Disclaimer)

இந்தக் கட்டுரையில் வரும் வரலாற்று குறிப்புகள், கலாச்சார விவரிப்புகள், அரசியல் கருத்துகள் ஆகியவை ஆசிரியரின் சொந்த கோட்பாட்டு அலசலின் (theoretical analysis) விளைவுகள். இவை எந்த அரசியல் கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் (official position) பிரதிநிதித்துவப்படுத்தவில்லை.

பெரியார், எம்.ஜி.ஆர்., விஜய் மற்றும் இதர நபர்கள் பற்றிய விவரிப்புகள் வரலாற்று அல்லது அரசியல் மதிப்பீடுகள் இல்லை — நரம்பியல் கோட்பாட்டின் (neurological theory) வழியாக நடந்த கோட்பாட்டு விவரிப்புகள் (theoretical descriptions). இதில் வரும் உவமைகள் (analogies) மற்றும் எடுத்துக்காட்டுகள் (examples) விளக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

இந்தக் கட்டுரை எந்த தனிப்பட்ட நோயாளியின் (patient) அல்லது சமூகக் குழுவின் (community group) மருத்துவ நலனையும் பற்றி பேசவில்லை. இது ஒரு பொது அறிவியல்-கலாச்சார கட்டுரை (public science-culture essay) மட்டுமே.

கார்ல் ஃப்ரிஸ்டனின் சுதந்திர ஆற்றல் கோட்பாடு (Free Energy Principle) பற்றிய விவரிப்புகள் நரம்பியல் அறிவியலின் (neuroscience) அடிப்படைக் கோட்பாட்டை எளிமையாக விளக்குவதற்காக சுருக்கப்பட்டிருக்கின்றன. நுணுக்கமான தொழில்நுட்ப விவரங்களுக்கு (technical details) ஃப்ரிஸ்டனின் அசல் ஆராய்ச்சி கட்டுரைகளை (original research papers) படிக்கவும்.







I. அறிமுகம் — இருட்டில் படி இறங்கும் அனுபவம்

இரவு நேரத்தில் உங்கள் வீட்டில் விளக்கு அணைந்த நிலையில் படிக்கட்டு இறங்கியிருக்கிறீர்களா? ஆயிரம் முறை இறங்கிய படிகள். கண்களுக்கு தெரியாவிட்டாலும் கால்களுக்கு தெரியும் — எத்தனாவது படி, எங்கே திரும்புவது , எங்கே தரை வருகிறது என்று. மூளை அந்த வரைபடத்தை (map) எப்போதோ தயார் செய்து வைத்திருக்கிறது. நம்பிக்கையுடன் இறங்குகிறோம். கடைசி படி வருகிறது என்று நினைக்கும்போது கால் தரையில் படுகிறது — ஒரு படி முன்னதாகவே. அந்த ஒரு நொடியில் வயிற்றில் ஏதோ கலைகிறது. முதுகெலும்பில் ஒரு அதிர்வு பாய்கிறது. அது என்ன?

அது வலி இல்லை. அது பயம் இல்லை. தெரிந்த இடத்தில் தெரியாத ஒன்று நடந்தது என்ற உணர்வு — ஒரு திடீர் முறிவு.

இந்த உணர்வுக்கு நரம்பியல் அறிவியலில் (neuroscience) ஒரு பெயர் இருக்கிறது. கணிப்பு பிழை (prediction error). மூளை ஒரு கணிப்பு வைத்திருந்தது — இன்னும் ஒரு படி இருக்கிறது என்று. உண்மை வேறாக இருந்தது — தரை ஏற்கனவே வந்துவிட்டது என்று. இந்த இடைவெளிதான் அந்த அதிர்வு. சின்ன நிகழ்வு, சின்ன பிழை. ஆனால் இந்த ஒரு அனுபவத்தில் மனித மூளையின் மிக அடிப்படையான செயல்பாடு ஒளிந்திருக்கிறது.

லண்டன் யூனிவர்சிட்டி கல்லூரியில் (University College London) பேராசிரியராக பணியாற்றும் கார்ல் ஃப்ரிஸ்டனுடன் (Karl Friston) என் நண்பர் அலெக்ஸ் ஹெம்மிங் (Alex Hemming) சில ஆராய்ச்சிகளில்  இணைந்து பணி செய்து கொண்டிருக்கிறார் — செயலின்  முன்னனுமானம் (active inference) , அரசியல் நம்பிக்கைகளின் உருவாக்கம் பற்றிய ஆராய்ச்சி பற்றிய உற்சாகத்தை என்னிடம் பகிர்ந்துகொண்டபோது ஒரு எண்ணம் தோன்றியது — இந்த கோட்பாட்டை தமிழ்நாட்டு அரசியல் நம்பிக்கை அமைப்புகளை புரிந்துகொள்வதற்கு பயன்படுத்தி பார்க்கலாமே என்று. இந்தக் கட்டுரை அந்த முயற்சியின் விளைவு.

ஃப்ரிஸ்டன் உருவாக்கிய சுதந்திர ஆற்றல் கோட்பாடு (Free Energy Principle) என்பது அந்த படிக்கட்டு அனுபவத்தை மட்டும் விளக்குவதில்லை. ஒரு தனி மனிதன் எப்படி நம்பிக்கைகளை உருவாக்குகிறான், ஒரு கலாச்சாரம் எப்படி அரசியல் விசுவாசங்களை கட்டி எழுப்புகிறது, ஒரு தேர்தலில் மக்கள் ஏன் அந்த குறிப்பிட்ட விதத்தில் வாக்களிக்கிறார்கள் என்பதையும் விளக்குகிறது என்று அவர் வாதிடுகிறார்.

இது கேட்கும்போது கொஞ்சம் அதிகமாக தோன்றலாம். ஒரே கோட்பாடு படிக்கட்டு அதிர்வையும் தேர்தல் முடிவையும் விளக்குகிறதா என்று. ஆனால் சற்று பொறுங்கள். இந்தக் கட்டுரை அந்த கோட்பாட்டை முழுமையாக ஏற்கவில்லை — ஒரு கண்ணாடியாக மட்டும் பயன்படுத்துகிறது. அந்த கண்ணாடி வழியாக  பார்க்கப்போவது 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) எழுச்சியை.

ஆனால் TVK வருவதற்கு முன்பு, அந்த படிக்கட்டு அதிர்வை இன்னும் கொஞ்சம் ஆழமாக புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் அந்த ஒரு நொடியில் — கால் தரையில் படும் அந்த நொடியில் — மனித மூளையின் முழு வரலாறும் இருக்கிறது.


II. ஃப்ரிஸ்டனின் கோட்பாடு — மூளை என்னும் கணிப்பு எந்திரம்

மூளை என்பது என்ன செய்கிறது என்று கேட்டால், பெரும்பாலான மனிதர்கள் சொல்வது இதுதான் — பார்க்கிறது, கேட்கிறது, நினைக்கிறது, உணர்கிறது. உலகம் நம்மை தொடும்போது நாம் பதில் சொல்கிறோம் என்று. ஆனால் ஃப்ரிஸ்டன் சொல்வது வேறு. மூளை உலகை பெறுவதில்லை — மூளை உலகை கணிக்கிறது. உலகம் என்ன சொல்லப் போகிறது என்று தொடர்ந்து, இடைவிடாது, ஒவ்வொரு நொடியும் முன்கூட்டியே சொல்லிக் கொண்டிருக்கிறது. அந்த கணிப்பு தவறும்போது மட்டுமே — படிக்கட்டு தரை சீக்கிரம் வந்தது போல — திடீரென விழிப்படைகிறது.

இந்த புரிதல் ஒரு சின்ன வித்தியாசம் போல தோன்றலாம். ஆனால் இதுதான் எல்லாவற்றையும் மாற்றுகிறது.

மூளை ஒரு செயலற்ற சேகரம் செய்யும் சாதனம் (passive receiver) இல்லை. அது ஒரு தொடர்ச்சியான கணிப்பு எந்திரம் (prediction machine). நாம் கண் திறப்பதற்கு முன்பே, காதில் சப்தம் வருவதற்கு முன்பே, மூளை ஏற்கனவே தயார் நிலையில் இருக்கிறது — இப்போது என்ன வரும், அடுத்த நொடி என்ன நடக்கும், இந்த மனிதன் என்ன சொல்வான் என்று ஒரு வரைபடம் (generative model) மனதுக்குள் இயங்கிக்கொண்டே இருக்கிறது.

இந்த வரைபடம் எங்கிருந்து வந்தது? வாழ்க்கையின் ஒவ்வொரு அனுபவத்திலிருந்தும். பிறந்த நாளிலிருந்து தொடங்கி, ஒவ்வொரு முறையும் தீ சுட்டது, ஒவ்வொரு முறையும் அம்மா அழைத்தது, ஒவ்வொரு முறையும் ஒரு சூழ்நிலை எப்படி முடிந்தது என்று — இவை அனைத்தும் திரண்டு ஒரு நுட்பமான உள்-வரைபடமாக ஆகியிருக்கின்றன. இந்த வரைபடம் தொடர்ந்து இயங்குகிறது, தொடர்ந்து கணிக்கிறது.

இப்போது தகவல் கோட்பாட்டின் (information theory) மொழியில் சொல்ல வேண்டும் என்றால் — ஒரு கணிப்பு மிகவும் நடக்காத ஒன்றாக இருக்கும்போது, அது வியப்பை (surprise) உருவாக்குகிறது. இங்கே வியப்பு என்பது நம் அன்றாட அர்த்தத்தில் இல்லை — திடீர் மகிழ்ச்சி என்று இல்லை. தகவல் கோட்பாட்டில் வியப்பு என்பது ஒரு கணிப்பின் தோல்வி — ‘எதிர்பார்த்ததிற்கும்  - நடந்ததிற்கும்’  இடையே உள்ள இடைவெளி. அந்த இடைவெளி எத்தனை பெரிதோ, வியப்பு அத்தனை அதிகம்.

ஃப்ரிஸ்டன் சொல்வது இதுதான்: உயிரினங்கள் — ஒரு அணு உயிரி (single-celled organism) முதல் ஒரு கலாச்சாரம் வரை — இந்த வியப்பை தொடர்ந்து குறைக்க முயல்கின்றன. வியப்பை நேரடியாக அளவிட முடியாது என்பதால், மூளை அதற்கு மாற்றாக ஒரு கணக்கீட்டை பயன்படுத்துகிறது — அதை அவர் சுதந்திர ஆற்றல் (free energy) என்று அழைக்கிறார். இது வியப்பின் மேல் எல்லை (upper bound) அளவீடு. படிக்கட்டை அனுமானித்த  கால் எதிர்பாராமல் தரையில் படும் போது சுதந்திர ஆற்றல் திடீரென உயர்கிறது. மூளை உடனே ஒரு சமிக்ஞை அனுப்புகிறது — கணிப்பு தவறிவிட்டது, ஏதோ சரியில்லை, கவனி.

இப்போது ஒரு முக்கியமான கேள்வி வருகிறது. சுதந்திர ஆற்றல் உயர்ந்தால் — கணிப்பு பிழை ஏற்பட்டால் — அதை எப்படி சரி செய்வது? ஃப்ரிஸ்டன் சொல்கிறார்: இரண்டே இரண்டு வழிகள் மட்டுமே இருக்கின்றன. வேறு எந்த வழியும் இல்லை.

முதல் வழி — உள்ளே இருக்கும் வரைபடத்தை மாற்றுவது. புதிய தகவலை ஏற்று, புரிந்துகொண்டு, நம்மை நாமே புதுப்பித்துக் கொள்வது. இதைத்தான் நாம் கற்றல் (learning) என்று சொல்கிறோம். படிக்கட்டில் தரை சீக்கிரம் வந்தால், அடுத்த முறை கொஞ்சம் கவனமாக இறங்குகிறோம் — வரைபடம் புதுப்பிக்கப்பட்டது.

இரண்டாம் வழி — உலகையே மாற்றுவது. வரைபடம் சொல்வதை பொய்யாக்காமல், உலகை அந்த வரைபடத்திற்கு ஏற்றபடி மாற்றுவது. இதை செயல் (action) என்கிறோம்.

இதற்கு ஒரு எளிய உதாரணம் சொல்கிறேன். தாகம் எடுக்கிறது என்று வையுங்கள். உடலில் நீர் குறைகிறது என்ற உணர்வு வருகிறது. இந்த உணர்வை மறுக்கலாம் — "இல்லை, நான் நீர்ச்சத்து மிக்கவன், என்னிடம் எல்லாம் சரியாக இருக்கிறது" என்று மனதுக்குள் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் அந்த முன்னனுமானம் (inference) மற்ற சமிக்ஞைகளுடன் ஒத்துப்போவதில்லை — வாய் வறண்டிருக்கிறது, தொண்டை எரிகிறது என்று உடல் வேறு விதமாக சொல்கிறது. இந்த இடைவெளிதான் கணிப்பு பிழை (prediction error) என்று அழைக்கப்படுகிறது. அதன் விளைவாக சுதந்திர ஆற்றல் (free energy) உயர்கிறது.

இப்போது என்ன நடக்கும்? என் முன்னனுமான வரைபடத்தை மாற்றி, சரி, நான் ஒரு வறண்டு போகும் மனிதன் என்று ஏற்றுக்கொண்டு அமைதியாக இருக்கலாம். ஆனால் அது உயிர்வாழும் உள்ளுணர்வு  (survival) வரைபடத்திற்கு முரணானது. அதனால் என்ன ஆகிறது? எழுந்து, சமையலறைக்கு போகிறோம், தண்ணீர் குடிக்கிறோம். திரண்டு வரும் ஒரு சிதைவை  ஒரு செயலால் மாற்றுகிறோம்   —இந்த செயலால் உடலில் நீரின் அளவு  கூடுகிறது , இது வரைபடம் சொன்னது போல நடக்கிறது , கணிப்பு பிழை மறைகிறது , சுதந்திர ஆற்றல் குறைகிறது .

வாழ்க்கை முழுவதும் இந்த இரண்டு நகர்வுகளுக்கிடையில்தான் நடக்கிறது. வரைபடத்தை மாற்றுவதா, உலகை மாற்றுவதா? கற்றலா, செயலா? ஒவ்வொரு நொடியும் இந்த பேரம்பேசுதல் (negotiation) நடக்கிறது — நரம்புகளில், உணர்வுகளில், முடிவுகளில், உறவுகளில்.

இதை ஃப்ரிஸ்டன் செயலில் முன்னனுமானம் (active inference) என்று அழைக்கிறார். இந்த செயல்முறை ஒரு தனி நரம்பில் நடப்பது மட்டுமல்ல — ஒரு குடும்பத்தில், ஒரு கலாச்சாரத்தில், ஒரு தேசத்தில் கூட நடக்கிறது. ஒரு சமூகமும் தன்னுடைய வரைபடத்தை வைத்திருக்கிறது. அந்த வரைபடம் தவறும்போது அந்த சமூகமும் அதிர்கிறது — படிக்கட்டு அதிர்வு போல. அந்த அதிர்வை தாங்காத சமூகம் ஒன்றை செய்கிறது — புதிய வரைபடம் தேடுகிறது.

இதுதான் தமிழக அரசியலின் ஆழமான கதை.


III. கோயில் அமைப்பு — சிதைவை குறைக்கும் கருவி

நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் வாழ்ந்த ஒரு சாதாரண விவசாயியை கற்பனை செய்துகொள்ளுங்கள். காலை எழுந்திருக்கும்போது வானத்தை பார்க்கிறான். மழை வருமா வராதா என்று தெரியவில்லை. வயலில் விதை போட்டிருக்கிறான் — அது முளைக்குமா என்று தெரியவில்லை. குழந்தைக்கு காய்ச்சல் வந்திருக்கிறது — தணியுமா என்று தெரியவில்லை. தன் சாதிக்கு கிடைக்கும் நிலம் எவ்வளவு, கிடைக்காத உரிமை எவ்வளவு என்று தெரியும் — ஆனால் ஏன் என்று தெரியவில்லை. வாழ்க்கை முழுவதும் தெரியாமைகளின் (uncertainties) தொகுப்பு.

ஃப்ரிஸ்டன் மொழியில் சொன்னால் — அந்த மனிதனின் மூளை தொடர்ந்து உயர் சிதைவில் (high entropy) இருக்கிறது. கணிப்பு பிழைகள் ஒன்றன்மேல் ஒன்று குவிகின்றன. சுதந்திர ஆற்றல் தாங்கமுடியாத அளவுக்கு அதிகரிக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால் மனித மனம் உடைந்துவிடும். அது உயிரியல் (biological) உண்மை — நிரந்தர வியப்பை தாங்கும் சக்தி எந்த நரம்பு மண்டலத்திற்கும் இல்லை.

அப்போது என்ன நடந்தது? கோயில் வந்தது.

இங்கே நான் ஒரு இறையியல் (theological) விவாதம் செய்யவில்லை. கோயிலில் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்வி இந்தக் கட்டுரையின் கேள்வி இல்லை. நான் பார்க்கப்போவது வேறு — ஒரு பழைய விவசாய சமூகத்தில் கோயில் அமைப்பு என்ன செய்தது என்று. நரம்பியல் அறிவியலின் கண்ணோட்டத்தில் பார்த்தால், கோயில் அமைப்பு ஒரு மிகத் திறமையான வியப்பு-குறைப்பு கருவி (surprise-minimising tool) ஆக செயல்பட்டது.

எப்படி என்று பார்ப்போம்.

மழை பெய்யவில்லை என்றால் — கணிப்பு பிழை, சுதந்திர ஆற்றல் உயர்கிறது, பதட்டம் வருகிறது. ஆனால் கோயில் அமைப்பு ஒரு விடை தயாராக வைத்திருந்தது. கடவுள் கோபப்பட்டு இருக்கிறார், குறிப்பிட்ட சடங்கு செய்யவில்லை என்பதால். அந்த சடங்கை செய்தால் மழை வரும். இப்போது என்ன நடந்தது என்று பாருங்கள் — கணிப்பு பிழை விளக்கப்பட்டுவிட்டது. வரைபடம் பொருந்தியது. சுதந்திர ஆற்றல் குறைந்தது.

குழந்தைக்கு நோய் வந்தால் — முந்தைய பிறவியின் கர்மா விளைவு, தோஷம் இருக்கிறது, இந்த பரிகாரம் செய். விளக்கம் தயார். வரைபடம் பொருந்தியது.

ஏன் அந்த மனிதன் தரையில் தூங்க வேண்டும், அடுத்தவன் மாளிகையில் வாழ வேண்டும் என்று கேட்டால் — தர்மம் அப்படி, ஜாதி அப்படி, பிறவி அப்படி. விளக்கம் தயார். வரைபடம் பொருந்தியது.

இந்த வரைபடத்தின் மிக முக்கியமான தன்மை என்னவென்றால் — அது எந்த தரவையும் தள்ளுபடி செய்யவில்லை. எந்த நிகழ்வும் அதற்கு எதிரான சாட்சியாக மாறவில்லை. மழை பெய்தால் — கடவுள் அருள் புரிந்தார். மழை பெய்யவில்லை என்றால் — நாம் போதுமான அளவு பக்தியாக இருக்கவில்லை. குழந்தை குணமடைந்தால் — சடங்கு பலித்தது. குணமடையவில்லை என்றால் — கர்மா அதிகம் இருந்தது. எல்லா  விடைகளும்  வரைபடத்திற்கு உள்ளே பொருந்தியது.

இதை தர்க்க ரீதியில் (logically) தவறு என்று சொல்லலாம். ஆனால் நரம்பியல் ரீதியில் இது மிகவும் திறமையான வடிவமைப்பு. ஒரு மாதிரி (model) எந்த சூழ்நிலையிலும் சிதையாமல் இருந்தால், அந்த மாதிரி வைத்திருக்கும் மனிதனின் சுதந்திர ஆற்றல் எப்போதும் குறைவாக இருக்கும். அவன் மன அமைதியாக இருப்பான். அவன் செயல்படுவான். குடும்பம் நடத்துவான். சமூகம் ஒன்றாக இயங்கும்.

இந்த அர்த்தத்தில் கோயில் அமைப்பு ஒரு கூட்டு மனவமைப்பாக (collective generative model) செயல்பட்டது. ஒரு தனி மனிதனின் மூளையில் வரைபடம் இருப்பதுபோல, ஒரு முழு சமூகத்தின் கூட்டு மனதில் இந்த வரைபடம் இருந்தது. எல்லோரும் ஒரே வரைபடத்தை பகிர்ந்து கொண்டதால் — ஒரே விளக்கங்கள், ஒரே சடங்குகள், ஒரே அமைப்பு — சமூகம் ஒன்றாக குறைந்த சிதைவில் (low entropy) இயங்கியது. ஃப்ரிஸ்டன் இதை உயர் நுட்ப முன்கணிப்புகள் (high-precision predictions) என்று அழைப்பார் — அனைவரும் நம்பும், அனைவரும் பின்பற்றும், யாரும் கேள்வி கேட்காத கணிப்புகள்.

இதுவரை சொன்னது ஒரு ஈரமற்ற, கோட்பாட்டு (theoretical) விவரிப்பு. ஆனால் நிதானமாக நினைத்துப் பாருங்கள் — இந்த வரைபடம் என்ன விலை கொடுத்து வியப்பை குறைத்தது என்று. ஒரு மனிதன் தரையில் தூங்குவதை அவனது தர்மம் என்று ஏற்றுக்கொண்டான். ஒரு பெண் தனக்கு நேர்ந்த அநீதியை தன் பிறவி என்று தலை குனிந்தாள். ஒரு சமூகம் தனது அடக்குமுறையை (oppression) கடவுளின் விருப்பம் என்று அமைதியாக தாங்கியது. சுதந்திர ஆற்றல் குறைவாக இருந்தது, ஆம். ஆனால் அந்த குறைவு உண்மையான நீதியால் வரவில்லை — அடக்குமுறையை கண்ணுக்கு தெரியாமல் செய்த திறமையான வரைபடத்தால் வந்தது.

ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் — கோயில் அமைப்பு வெப்பவியல் ரீதியில் திறமையான (thermodynamically efficient) ஒடுக்குமுறையாக இருந்தது. மனிதர்களை அமைதியாக, கீழ்ப்படிவாக, நம்பிக்கையோடு வைத்திருந்தது — ஏனென்றால் அவர்களின் மூளை கேள்விகள் கேட்காமலே பதில்களை பெற்றுக்கொண்டது.

ஆனால் நூற்றாண்டுகளாக இயங்கிய இந்த வரைபடத்தை யாரோ ஒருவர் தகர்க்க வந்தார். அவர் வந்தது அன்பால் இல்லை — கோபத்தால். கருணையால் இல்லை — கணக்கால். அவர் கேட்ட கேள்விகள் சிறியவை அல்ல. அவை கோயில் அமைப்பின் அடித்தளத்தையே அசைத்தன.

அவர் பெரியார்.


IV. பெரியாரின் சிதைவு — அவசியமான அழிவு

பெரியார் என்ற மனிதரை அரசியல் வரலாற்றில் பலவிதங்களில் விவரிக்கலாம். சமூக சீர்திருத்தவாதி, நாத்திகர், திராவிட இயக்கத்தின் தந்தை என்று. இவை அனைத்தும் சரிதான். ஆனால் ஃப்ரிஸ்டனின் கண்ணோட்டத்தில் பார்த்தால் அவர் வேறு ஒன்றாக தெரிகிறார் — நூற்றாண்டுகளாக குறைவாக இருந்த கூட்டு சுதந்திர ஆற்றலை வேண்டுமென்றே, திட்டமிட்டு, அதிகரித்தவர்.

இதை சாதனை என்று சொல்கிறேன், குற்றம் என்று இல்லை.

பெரியார் செய்தது என்னவென்றால் — நூற்றாண்டுகளாக இயங்கிய வரைபடத்தை நேருக்கு நேர் நிறுத்தி, "இந்த வரைபடம் உண்மையை சொல்வதில்லை" என்று காட்டினார். ஒவ்வொரு பேச்சும், ஒவ்வொரு போராட்டமும், ஒவ்வொரு சிலை உடைத்த செயலும் ஒரு கணிப்பு பிழை சமிக்ஞை (prediction error signal) ஆக செயல்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்களின் மனதில் தொடர்ந்து ஒரே செய்தியை அனுப்பினார் — உங்களுக்கு கொடுக்கப்பட்ட வரைபடம் தவறானது, அதை நம்பாதீர்கள்.

அவர் கேட்ட கேள்விகள் நினைவிருக்கிறதா? பெரிய அலமாரியில் யாருடைய பொருட்கள் நிரம்பியிருக்கின்றன? தரையில் யார் தூங்குகிறார்கள்? அதை ஏன் தர்மம் என்று சொல்கிறார்கள்?

இந்த கேள்விகள் வெறும் அரசியல் கேள்விகள் இல்லை. இவை நரம்பியல் தாக்குதல்கள் (neurological strikes). ஒரு மனிதன் தன் வரைபடத்தை நம்பி வாழ்ந்துகொண்டிருக்கும்போது, "உன் வரைபடம் உன்னையே ஏமாற்றுகிறது" என்று சொல்வது அவன் மூளைக்கு ஒரு ஆழமான அதிர்வை கொடுக்கிறது. படிக்கட்டு அதிர்வை விட பல மடங்கு ஆழமான அதிர்வு — ஏனென்றால் இங்கே தவறுவது ஒரு படி அல்ல, வாழ்க்கை முழுவதும் நம்பிய ஒரு முழு அமைப்பு.

அவர் தன் உரைகளில் நேரடியாக செய்தது இதுதான். மக்களுக்கு கொடுக்கப்பட்ட துன்பத்தை அவர்களுக்கே காட்டினார். "இது உன் தலைவிதி இல்லை, இது மனிதர்கள் உருவாக்கிய அமைப்பு" என்று சொன்னார். அந்த ஒரு வாக்கியத்தில் ஆயிரம் ஆண்டுகளாக குறைவாக இருந்த சுதந்திர ஆற்றல் திடீரென உயர்ந்தது. பழைய வரைபடம் இனி பொருந்தவில்லை. புதிய வரைபடம் இன்னும் தயாராகவில்லை. அந்த இடைவெளியில் ஒரு கூட்டு விழிப்பு (collective awakening) நடந்தது.

இது அவசியமானது. மிகவும் அவசியமானது.

ஒரு வீட்டை கற்பனை செய்துகொள்ளுங்கள். வெளியில் பார்க்க அழகாக இருக்கிறது. கதவுகள் திடமாக இருக்கின்றன. உள்ளே குடும்பம் வாழுகிறது. ஆனால் அடித்தளத்தில் (foundation) கறையான் (termites) அரித்துக் கொண்டிருக்கிறது. சுவர்கள் உள்ளிருந்து பொடியாகி கொண்டிருக்கின்றன. வீட்டில் வாழ்பவர்களுக்கு தெரியவில்லை — ஏனென்றால் வெளியில் எல்லாம் சரியாக தெரிகிறது.

பெரியார் அந்த வீட்டை இடிக்க வந்தவர். அது வலிக்கும். அது பயமாக இருக்கும். வீட்டை இழந்த உணர்வு வரும். ஆனால் கறையான் அரித்த வீட்டில் தொடர்ந்து வாழ்வதை விட அது அவசியம்.

ஆனால் இங்கே ஒரு முக்கியமான கேள்வி வருகிறது. வீடு இடிந்தது. கறையான் ஓடிப்போனது. ஆனால் குடும்பம் இப்போது திறந்த வெளியில் நிற்கிறது. மழை பெய்கிறது. குளிர் அடிக்கிறது. கையில் ஒரு நல்ல வீட்டின் வரைபடம் (blueprint) இருக்கிறது — பகுத்தறிவின் வரைபடம், சமத்துவத்தின் வரைபடம். ஆனால் இப்போது உடனடியாக தலையின் மேல் கூரை இல்லை.

இந்த நிலையில் மனித மூளை என்ன செய்யும்?

பதட்டப்படும். ஏனென்றால் திறந்த வெளியில் நிற்பது உயர் சிதைவு நிலை. மழையில் நனைவது கணிப்பு பிழை. குளிரில் நடுங்குவது சுதந்திர ஆற்றல் உயர்வு. மூளை உயிரியல் ரீதியில் (biologically) ஒரு புதிய கூரையை தேடும் — எத்தனை விரைவில் முடியுமோ அத்தனை விரைவில்.

இதுதான் தூய பகுத்தறிவின் (pure rationalism) வெப்பவியல் முழுமையின்மை (thermodynamic incompleteness).

பெரியாரின் பகுத்தறிவு இயக்கம் பழைய வரைபடத்தை அழிப்பதில் அறுவை சிகிச்சை துல்லியத்துடன் (surgical precision) செயல்பட்டது. கோயில் அமைப்பின் ஒவ்வொரு தூணையும் தர்க்கரீதியாக (logically) சாய்த்தது. கடவுளில்லை என்று காட்டியது. சாதி மனிதர்கள் உருவாக்கியது என்று நிரூபித்தது. பழைய வரைபடம் பொய்யானது என்று தெளிவாக சொன்னது.

ஆனால் நரம்பியல் அர்த்தத்தில் ஒரு முக்கியமான விஷயம் நடக்கவில்லை — பழைய வரைபடம் கொடுத்த உணர்வு அரவணைப்பை (emotional warmth) எதுவும் மாற்றியில்லை.

கோயில் அமைப்பு என்ன கொடுத்தது என்று நினைத்துப்பாருங்கள். மழை வராவிட்டாலும் — யாரோ கவலைப்படுகிறார்கள், கடவுள் இருக்கிறார், சடங்கு செய்தால் சரியாகும் என்ற உணர்வு. நோய் வந்தாலும் — இது ஏன் நடக்கிறது என்று தெரிகிறது, என்ன செய்ய வேண்டும் என்று தெரிகிறது என்ற உணர்வு. மரணம் வந்தாலும் — இது ஒரு பெரிய திட்டத்தின் (larger plan) ஒரு பகுதி என்ற உணர்வு. எல்லாவற்றிலும் ஒரு விசுவரூப  (cosmic) அர்த்தம் இருக்கிறது என்ற உணர்வு.

இந்த உணர்வுகள் தவறானவை என்று சொல்லலாம். ஆனால் அவை மூளைக்கு கொடுத்த உயர் நுட்ப முன்கணிப்புகளை (high-precision predictions) — எல்லாம் கட்டுக்குள் இருக்கிறது, யாரோ கவனித்துக் கொள்கிறார்கள், அர்த்தம் இருக்கிறது என்ற கணிப்புகளை — பகுத்தறிவு மட்டுமே மாற்ற போதுமானதாக இல்லை.

தர்க்கம் (logic) ஒரு குளிர்ந்த ஈரமற்ற கருவி. அது உண்மையை சொல்லும். அது தவறை சுட்டிக்காட்டும். ஆனால் இரவில் மனிதன் தனியாக நடுங்கும்போது அவனுக்கு வேண்டியது தர்க்கம் மட்டுமல்ல — அரவணைப்பும் வேண்டும், அர்த்தமும் வேண்டும், நாளை சரியாகும் என்ற உணர்வும் வேண்டும்.

பெரியார் இந்த இடைவெளியை நிரப்பவில்லை என்று சொல்வது அவரை விமர்சிப்பதற்காக இல்லை. ஒரு மனிதர் பழைய கட்டிடத்தை இடிப்பதற்கும் புதிய கட்டிடத்தை கட்டுவதற்கும் ஒரே நேரத்தில் முயல்வது இயலாத காரியம். அவர் செய்த அழிவு அவசியமானது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் அந்த அழிவுக்குப் பிறகு திறந்த வெளியில் நின்ற மக்களின் மூளை ஒரு புதிய கூரையை தேடியது — அது இயல்பானது, அது தவிர்க்க முடியாதது.

அந்த தேடல் ஒரு இருட்டான திரையரங்கை (cinema hall) கண்டுபிடித்தது.


V. சினிமா — புதிய மனவமைப்பின் கோயில்

1950களில் தமிழ்நாட்டில் என்ன நடந்தது என்று யோசியுங்கள். பெரியாரின் இயக்கம் பழைய வரைபடத்தை கலைத்திருந்தது. சாதி தர்மம் என்பது கடவுளின் விருப்பம் இல்லை என்று பலருக்கு தெரிந்திருந்தது. கோயில் அமைப்பின் மீதான நம்பிக்கை — குறைந்தபட்சம் அதன் சமூக அதிகாரத்தின் மீதான நம்பிக்கை — சிதைந்திருந்தது . ஆனால் மனித மூளை இன்னும் அதே மூளைதான். வியப்பை குறைக்கும் வரைபடம் வேண்டும். அர்த்தம் வேண்டும். நாயகன் வேண்டும். நம்பிக்கை வேண்டும்.

அந்த தேவை நிரப்பப்படாமல் இருக்கவில்லை.

திரையரங்கின் விளக்குகள் அணைந்தன. திரை வெளிச்சமானது. எம்.ஜி.ஆர். நடந்தார்.

இப்போது ஒரு நிமிடம் நிறுத்துங்கள். தமிழ் சினிமாவை வேறு எங்காவது உள்ள நடிகர்-அரசியல்வாதி நிகழ்வுடன் ஒப்பிடுவது சரியில்லை. அமெரிக்காவில் ரொனால்ட் ரீகன் (Ronald Reagan) நடிகராக இருந்து அரசியலுக்கு வந்தார். யுக்ரைனில் ஜெலென்ஸ்கி (Zelensky) நகைச்சுவை நடிகராக இருந்து ஜனாதிபதியானார். அவை புகழ் பெற்ற முகம் பொது வாழ்வில் நுழைந்த கதைகள். ஆனால் தமிழ்நாட்டில் நடந்தது அடிப்படையிலேயே வேறு — ஒரு கட்டமைப்பு மாற்றம் (structural transformation), வெறும் தனிநபர் மாற்றம் அல்ல.

ஃப்ரிஸ்டன் மொழியில் சொன்னால் — தமிழ் சினிமா பெரியாரின் திராவிட முன்கணிப்புகளில் (Dravidian priors) இயங்கியது, ஆனால் கோயில் அமைப்பின் முழு உணர்வு கட்டமைப்புடன் (emotional architecture) செயல்பட்டது. இது மிக முக்கியமான புரிதல். உள்ளடக்கம் (content) மாறியது — கதையில் இனி கடவுள் இல்லை, ஊழல் அதிகாரி இருக்கிறான், சாதி அட்டூழியம் இருக்கிறது, ஏழை விவசாயி நியாயம் கேட்கிறான். ஆனால் கட்டமைப்பு (architecture) அப்படியே இருந்தது — கோயிலில் இருந்த அதே உணர்வு வடிவங்கள் திரையில் தொடர்ந்தன.

என்ன வடிவங்கள் என்று பாருங்கள்.

கோயிலில் ஒரு தூய்மையான, ஊழலற்ற தெய்வீக சக்தி இருந்தது — திரையில் அது ஊழலற்ற நாயகனாக (incorruptible hero) மாறியது. கோயிலில் அதிசயங்கள் (miracles) நடந்தன — திரையில் ஒரு மனிதன் ஐம்பது பேரை தனியாக வீழ்த்தும் காட்சி அதிசயமாக மாறியது. கோயிலில் பக்தனின் துன்பத்தை தெய்வம் சுமந்து கொண்டது — திரையில் நாயகன் தன் சொந்த இன்பத்தை தியாகம் செய்து சமூகத்திற்காக கஷ்டப்படுவது அந்த துன்பப்படும் சேவகனாக (suffering servant) மாறியது. கோயிலில் இறுதியில் தர்மம் வெல்லும், அதர்மம் அழியும் என்ற கூட்டு மீட்பு (collective redemption) வாக்குறுதி இருந்தது — திரையில் கடைசி காட்சியில் வில்லன் வீழ்ந்து, ஊரில் அமைதி திரும்பி, மக்கள் சிரிக்கும்போது அதே மீட்பு நடந்தது.

இது தற்செயல் அல்ல. இது ஒரு ஆழமான, உள்ளுணர்வான (intuitive) மாற்றம் — திராவிட கொள்கையின் புதிய உரையை (new text) பழைய கோயில் உணர்வின் பழைய இசையில் (old music) பாடியது.

திரையரங்கில் என்ன நடந்தது என்று இப்போது நரம்பியல் அர்த்தத்தில் யோசியுங்கள். ஒரு மனிதன் தன் அன்றாட வாழ்க்கையின் கணிப்பு பிழைகளுடன் — வேலை இல்லாமை, அநீதி, ஏழ்மை, அவமானம் — திரையரங்கிற்கு வருகிறான். இரண்டு அல்லது மூன்று மணி நேரம் திரையில் என்ன நடக்கிறது என்று பாருங்கள். முதலில் அவனுடைய வாழ்க்கையில் உள்ள அதே அநீதி திரையில் வருகிறது — கணிப்பு பிழை அறிமுகமாகிறது, சுதந்திர ஆற்றல் உயர்கிறது. பின்னர் நாயகன் அதை சரியாக அடையாளம் காண்கிறான். பின்னர் நாயகன் செயல்படுகிறான். இறுதியில் அநீதி தீர்கிறது, சுதந்திர ஆற்றல் சரிகிறது, திரையரங்கில் இருந்த நூறு பேரின் மூளையும் ஒரே நேரத்தில் ஒரு நிறைவை உணர்கிறது.

இது மனநல சிகிச்சை (therapy) போன்று செயல்கிறது — ஒரு கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் (controlled environment), கணிப்பு பிழை அறிமுகமாகி, தீர்க்கப்பட்டு, மூளை ஒரு நிறைவான வரைபடத்துடன் வெளியே வருகிறது.

ஆனால் இங்கே மிக முக்கியமான ஒரு விஷயம் நடக்கிறது — இந்த சிகிச்சை ஒரு முறை, இரண்டு முறை மட்டுமல்ல. பத்து வயதிலிருந்து தொடங்கி, வாரம் ஒரு முறை, மாதம் இரண்டு முறை, வருடம் பல முறை என்று திரும்பத்திரும்ப நடக்கிறது. நூறு திரைப்படங்கள், ஐநூறு திரைப்படங்கள், ஆயிரம் மணி நேரங்கள். மூளையின் நரம்பிணைப்புகள் (neural pathways) இந்த திரும்பத் திரும்பும் அனுபவத்தால் பயிற்றுவிக்கப்படுகின்றன (conditioned). ஒரு ஆழமான, உயர் நுட்பமான (high-precision) கணிப்பு மெல்ல மெல்ல உருவாகிறது — ஊழலற்ற, தியாகமான, நேர்மையான ஒரு நாயகன் வந்தால் அநீதி தீரும். அது உறுதி. அது நிச்சயம்.

இப்போது ஒரு முக்கியமான கேள்வியை கேட்கிறேன்.

பதினெட்டு வயதில் முதல் முறை வாக்களிக்கச் செல்லும் ஒரு இளைஞனின் மூளை எப்படி இருக்கிறது?

அவன் வெறுமனே ஒரு புதிய அரசியல் கட்சியை மதிப்பிட போவதில்லை. அவன் மூளை ஏற்கனவே பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. கொள்கை என்னவென்று தெரியாவிட்டாலும் கரைசேர்ந்திருக்கிறது — நாயகன் இப்படி தெரிவான், இப்படி பேசுவான், இப்படி செயல்படுவான் என்று. வாக்குச்சாவடி அவனுக்கு ஒரு புதிய தேர்வை கொடுப்பதில்லை. ஏற்கனவே உருவான ஒரு உயர் நுட்ப முன்கணிப்பை உறுதிப்படுத்த வழி கொடுக்கிறது.

தேர்தல் நம்பிக்கையை உருவாக்கவில்லை. ஏற்கனவே உருவான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

இந்த ஒரு வாக்கியத்தில் TVK எழுச்சியின் முழு இரகசியமும் இருக்கிறது. ஆனால் அந்த இரசகசியத்தை  முழுமையாக புரிந்துகொள்ள, விஜய் மேடையில் நின்று என்ன சொல்கிறார் என்று கேட்க வேண்டும். அவர் வார்த்தைகள் தேர்ந்தெடுக்கும் விதம், அவர் பேசும் முறை — இவை தற்செயலானவை இல்லை. மூன்று வெவ்வேறு கதவுகள் வழியாக மூளையின் மூன்று வெவ்வேறு அறைகளை திறக்கும் திறவுகோல்கள்.

அந்த திறவுகோல்களை இப்போது பார்ப்போம்.


VI. மூன்று பேச்சு வடிவங்கள் — மூளையின் மூன்று கதவுகள்

ஒரு அரசியல் பேச்சை கேட்கும்போது நாம் என்ன கேட்கிறோம் என்று நினைக்கிறோம்? கொள்கைகள், வாக்குறுதிகள், திட்டங்கள் என்று நினைக்கிறோம். ஒரு தர்க்கரீதியான மதிப்பீடு நடக்கிறது என்று நினைக்கிறோம் — இவர் சொல்வது சரியா, இவரை நம்பலாமா, இவர் திட்டம் செயல்படுமா என்று. ஆனால் மூளை உண்மையில் என்ன செய்கிறது என்று பார்த்தால் வேறு ஒன்று தெரிகிறது.

மூளை பேச்சை மூன்று வெவ்வேறு அளவுகளில் (levels) ஒரே நேரத்தில் செயலாக்குகிறது (process). ஒரு அளவு தர்க்கம் (logic) — இவர் சொல்வது பொருளாதார ரீதியில் சரியா என்று. இரண்டாம் அளவு உணர்வு (emotion) — இவர் என்னை புரிந்துகொள்கிறாரா என்று. மூன்றாம் அளவு, மிக ஆழமான அளவு — இவர் யார், இவர் என்னுடன் எந்த உறவில் இருக்கிறார், இவரை நம்பலாமா என்று. இந்த மூன்றாம் அளவு பெரும்பாலும் வார்த்தைகளுக்கு கீழே, விழிப்புணர்வுக்கு (conscious awareness) கீழே நடக்கிறது.

விஜயின் பேச்சுகள் இந்த மூன்று அளவுகளையும் தனித்தனியாக, ஒரே நேரத்தில் இயக்குகின்றன. அது எப்படி என்று பார்ப்போம்.

முதல் கதவு — உறவினர் வடிவம் (intimate familial register)

விஜய் மேடையில் நிற்கிறார். முன்னால் லட்சக்கணக்கான மக்கள். அவர் பேசத் தொடங்குகிறார். "அம்மாக்களே, அக்காக்களே..." என்று. "அண்ணன்மார்களே, தம்பிமார்களே, தாய்மாமன்மார்களே..." என்று.

இதை கேட்கும்போது சாதாரணமாக தோன்றலாம். அரசியல்வாதிகள் எப்போதும் இப்படி சொல்வார்கள் என்று நினைக்கலாம். இந்த வார்த்தைகள் ஏன் வேலை செய்கின்றன என்று யோசியுங்கள்.

பரிணாம வளர்ச்சியின் (evolution) அடிப்படையில் மனித மூளையில் மிக ஆழமாக, மிக பழமையாக பொறிக்கப்பட்ட (encoded) நரம்பிணைப்புகள் எவை என்று தெரியுமா? உறவுமுறை கணிப்புகள் (kinship predictions). அம்மா என்பவர் என்னை பாதுகாப்பார் என்ற கணிப்பு. அண்ணன் என்பவர் என்னுடன் நிற்பார் என்ற கணிப்பு. இந்த கணிப்புகள் வெறும் கலாச்சார (cultural) கண்டுபிடிப்புகள் இல்லை — இவை லட்சக்கணக்கான ஆண்டுகளாக உயிர்வாழல் (survival) உறுதி செய்த நரம்பியல் அமைப்புகள். வனத்தில் வாழ்ந்த மனிதனுக்கு அம்மா இருக்கிறாள் என்று தெரிந்தால் பாதுகாப்பு இருக்கிறது என்று தெரியும். அண்ணன் இருக்கிறான் என்று தெரிந்தால் ஆபத்தில் உதவி வரும் என்று தெரியும். இந்த கணிப்புகள் மூளையின் மிக ஆழமான, மிக பழமையான அடுக்குகளில் (layers) இருக்கின்றன. அவை விழிப்புணர்வுக்கு கீழே இயங்குகின்றன. அவற்றை தர்க்கத்தால் எளிதில் மாற்ற முடியாது.

விஜய் "அண்ணன்மார்களே" என்று சொல்லும்போது என்ன நடக்கிறது? அவர் தர்க்கரீதியான மதிப்பீடுக்கு (logical evaluation) அழைப்பு விடுப்பதில்லை. அவர் நேரடியாக அந்த பழமையான, ஆழமான உறவு நரம்பிணைப்புகளை தொடுகிறார். மூளை உடனே வகைப்படுத்துகிறது (categorises) — இவர் அரசியல்வாதி இல்லை, இவர் உறவினர். உறவினரை நம்பலாம். உறவினர் கைவிட மாட்டார். உறவினர் சொல்வதை கேட்கலாம்.

இந்த மாற்றம் — அரசியல்வாதி என்பதிலிருந்து உறவினர் என்பதற்கு — ஒரு நொடியில் நடக்கிறது. விழிப்புணர்வுக்கு கீழே நடக்கிறது. யாரும் கவனிக்காமல் நடக்கிறது.

இதற்கு ஒரு குறிப்பிட்ட வாக்கியம் இருக்கிறது. "உங்க வீட்டு ரேஷன் கார்டுல (ration card) வேணா என் பேர் இல்லாம இருக்கலாம். ஆனா நாம் எல்லாரும் ஒன்னுதான்."

இந்த வாக்கியத்தில் என்ன நடக்கிறது என்று யோசியுங்கள். ரேஷன் கார்டு என்பது அரசின் (state) ஆவணம் — உங்கள் குடும்பம் யார், உங்கள் வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று அரசு வரையறுக்கும் ஆவணம். அதை விஜய் நேரடியாக சுட்டிக்காட்டி, "அந்த காகிதம் சொல்வதை விட நம்முடைய உறவு அதிகமானது" என்கிறார். அரசு வரையறுத்த எல்லைகளை தாண்டி, தனக்கும் கேட்பவருக்கும் இடையே ஒரு நேரடி உறவு கட்டமைப்பை (kinship structure) நிறுவுகிறார். இது முன்-அரசியல் (pre-political) நரம்பியல் அடித்தளத்தில் கட்டப்பட்ட நம்பிக்கை. இதை கொள்கை விவாதத்தால் உடைப்பது மிகவும் கடினம்.

இரண்டாம் கதவு — தீர்க்கதரிசன வடிவம் (prophetic register)

விஜய் வாக்குறுதிகளில் பேசுவதில்லை என்று கவனித்திருக்கிறீர்களா?

பெரும்பாலான அரசியல்வாதிகள் சொல்வது இப்படி இருக்கும் — "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதை செய்வோம்", "முயற்சிப்போம்", "திட்டமிட்டிருக்கிறோம்". இந்த மொழி வாக்குறுதியின் மொழி. வாக்குறுதி என்பது நரம்பியல் அர்த்தத்தில் ஒரு குறைந்த நுட்ப முன்கணிப்பு (low-precision prediction) — ஏனென்றால் வாக்குறுதி தோல்வியடையலாம் என்ற சாத்தியம் எப்போதும் இருக்கிறது. மூளை அதை கேட்கும்போது ஒரு துணை கணிப்பை (backup prediction) தயாராக வைத்திருக்கிறது — ஒருவேளை நடக்காவிட்டால் என்ன செய்வது என்று. அது ஒரு குறிப்பிட்ட அளவு சுதந்திர ஆற்றலை தொடர்ந்து உயர்வாக வைத்திருக்கிறது.

ஆனால் விஜய் வேறுவிதமாக பேசுகிறார். "TVK ஆட்சி வரும். திமுக வீட்டுக்கு போகும். இது நடக்கும்." நிபந்தனை இல்லை. சந்தேகம் இல்லை. "முயற்சிப்போம்" இல்லை. எதிர்காலம் ஏற்கனவே நடந்தது போல் பேசுகிறார்.

இது தீர்க்கதரிசனத்தின் (prophecy) மொழி.

தீர்க்கதரிசனம் வாக்குறுதியிலிருந்து எப்படி வேறுபடுகிறது என்று பாருங்கள். வாக்குறுதி பொறுப்புணர்வை (accountability) அழைக்கிறது. "நீங்கள் சொன்னீர்கள், ஆனால் செய்யவில்லை" என்று சொல்ல இடம் கொடுக்கிறது. ஆனால் தீர்க்கதரிசனம் நம்பிக்கையை (belief) மட்டுமே அழைக்கிறது. அது சந்தேகத்திற்கு இடம் விடுவதில்லை. யாரோ ஒருவர் நடக்கப்போவதை அறிவிக்கிறார் — கேட்பவர் வெறும் அதை ஏற்றுக்கொள்ளவேண்டும் அல்லது மறுக்கவேண்டும்.

நரம்பியல் அர்த்தத்தில் தீர்க்கதரிசனம் மிக உயர் நுட்ப முன்கணிப்பை (very high-precision prediction) உருவாக்குகிறது. மூளை அதை கேட்கும்போது சுதந்திர ஆற்றல் குறைகிறது — ஏனென்றால் எதிர்காலம் தெரிகிறது, நிச்சயமில்லாமை இல்லை, கட்டுக்குள் இருக்கிறது என்ற உணர்வு வருகிறது.

இந்த மொழி தமிழ் மக்களுக்கு புதிதானதில்லை. ஆயிரம் ஆண்டுகளாக கோயிலில் கேட்டது இதுதான் — கடவுள் வாக்குறுதி கொடுப்பதில்லை, கடவுள் அறிவிக்கிறார். நடக்கப்போவது நடக்கும், அது நிச்சயம். இந்த மொழி அமைப்பை தமிழ் மக்களின் கூட்டு மனவமைப்பு ஆயிரம் ஆண்டுகளாக அடையாளம் கண்டு, நம்பி, பின்பற்றியிருக்கிறது.

விஜய் அந்த பழமையான மொழி அமைப்பை திரையரங்கின் திரையிலிருந்து மேடைக்கு கொண்டு வருகிறார். கேட்பவர்களின் மூளை அதை அடையாளம் காண்கிறது — இது நான் ஏற்கனவே அறிந்த மொழி, இது நான் ஏற்கனவே நம்பிய குரல்.

மூன்றாம் கதவு — விதை உவமை (seeds parable)

விஜயின் உரைகளின் இறுதியில் ஒரு கதை வருவதை கவனித்திருக்கிறீர்களா? ஒரு நாட்டுப்புற கதை, ஒரு உவமை, ஒரு பழமொழி. இது தற்செயல் அல்ல. இது மூளையின் மூன்றாம் கதவை திறக்கும் திறவுகோல்.

அவர் அடிக்கடி சொல்லும் ஒரு கதை இருக்கிறது — விதை உவமை.

ஒரு வயதான ராஜா இருக்கிறார். தன் படைக்கு புதிய தளபதி தேர்ந்தெடுக்க வேண்டும். பத்து தகுதியான வீரர்களை அழைக்கிறார். ஒவ்வொருவருக்கும் ஒரு கைப்பிடி விதைகளை கொடுக்கிறார். "இதை வீட்டுக்கு கொண்டு போங்கள், நட்டு வளருங்கள், யார் மிக அழகான செடியை வளர்க்கிறார்களோ அவர்தான் என் தளபதி" என்று சொல்கிறார்.

ஆனால் ராஜா ரகசியமாக ஒரு விஷயம் செய்திருக்கிறார் — அனைத்து விதைகளையும் கொதிக்க வைத்திருக்கிறார். அவித்த விதைகள் முளைக்காது. இது பரிட்சை — விவசாய திறமையை அளவிடுவதற்காக இல்லை, நேர்மையை அளவிடுவதற்காக.

வாரங்கள் கடக்கின்றன. ஒன்பது பேர் தங்கள் தொட்டியில் எதுவும் முளைக்கவில்லை என்று பார்க்கிறார்கள். பதட்டம் வருகிறது. ராஜாவுக்கு முன்னால் வெற்று தொட்டியுடன் நிற்க முடியாது என்று நினைக்கிறார்கள். கடைசியில் வேறு விதைகளை வாங்கி, பூத்துக்குலுங்கும் செடிகளை வளர்க்கிறார்கள்.

ஒரே ஒருவன் மட்டும் வெறும் தொட்டியுடன் — வெறும் மண்ணுடன் — ராஜாவின் முன் நிற்கிறான். தலை குனிந்து சொல்கிறான் — "ராஜாவே, தினமும் நீர் ஊற்றினேன், வெயில் காட்டினேன், எல்லாம் செய்தேன். ஆனால் ஒன்றும் முளைக்கவில்லை. வெற்று தொட்டியுடன் வந்திருக்கிறேன்."

ராஜா உடனே அவனை நோக்கி சொல்கிறார் — "நீதான் என் தளபதி."

இந்த கதையை விஜய் சொல்லி முடித்த பிறகு ஒரு நொடி நிறுத்துகிறார். பின்னர் மக்களை நோக்கி சொல்கிறார் — "நான் அந்த வெறும் தொட்டி."

இந்த வாக்கியம் என்ன செய்கிறது என்று ஃப்ரிஸ்டன் மொழியில் பார்ப்போம்.

ஒன்பது பேர் என்ன செய்தார்கள்? தங்கள் மனவமைப்பை யதார்த்தத்துடன் சோதிக்க மறுத்தார்கள். "நான் ஒரு வெற்றிகரமான வீரன்" என்ற மனவமைப்பு தொடர்ந்து பொருந்த வேண்டும் என்பதற்காக உலகை மாற்றினார்கள் — பொய்யான செடிகளை கொண்டு வந்தார்கள். கணிப்பு பிழையை மறைத்தார்கள். ஆனால் மறைக்கப்பட்ட கணிப்பு பிழை மறைந்துவிடவில்லை — உள்ளே திரண்டது.

பத்தாவது வீரன் என்ன செய்தான்? தன் மனவமைப்பை யதார்த்தத்துடன் சோதித்தான். விதைகள் முளைக்கவில்லை என்ற கணிப்பு பிழையை ஏற்றுக்கொண்டான். அந்த வலிக்கும், அவமானத்திற்கும் வழி கொடுத்தான். பின்னர் அந்த யதார்த்தத்தை பொது இடத்தில் — ராஜாவின் முன்னால் — நேர்மையாக அறிவித்தான்.

"நான் அந்த வெறும் தொட்டி" என்று விஜய் சொல்லும்போது மக்களுக்கு சொல்வது என்னவென்றால் — மற்ற அனைத்து அரசியல்வாதிகளும் பொய்யான பூக்கும் செடிகளை கொண்டு வருகிறார்கள். கணிப்பு பிழைகளை — ஊழலை, வறுமையை, உடைந்த அமைப்புகளை — மறைக்கிறார்கள். நான் மட்டும் யதார்த்தத்தை அங்கீகரிக்கிறேன். மண்ணை மண் என்று சொல்கிறேன். அது வலிக்கிறது, ஆனால் உண்மை.

இந்த வாக்கியம் மக்களின் மூளையில் ஒரு ஆழமான நிவாரணத்தை (relief) கொடுக்கிறது. ஏனென்றால் அவர்களுடைய வாழ்க்கையின் கணிப்பு பிழைகள் — வேலையில்லாமை, ஊழல், உடைந்த சாலைகள், நிறைவேறாத வாக்குறுதிகள் — இதுவரை யாரும் நேர்மையாக அங்கீகரிக்கவில்லை. இப்போது யாரோ ஒருவர் அங்கீகரிக்கிறார். கணிப்பு பிழை மறுக்கப்படவில்லை, மறைக்கப்படவில்லை — ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அந்த ஒரு அங்கீகாரத்தில் ஒரு பெரிய சுதந்திர ஆற்றல் வெளியேறுகிறது.

இப்போது ஒரு நிமிடம் பின்னால் நின்று பாருங்கள்.

உறவினர் வடிவம் — பரிணாம வளர்ச்சியின் ஆழத்திலிருந்து வரும் உறவு நரம்பிணைப்புகளை தொடுகிறது. தீர்க்கதரிசன வடிவம் — ஆயிரம் ஆண்டுகளாக கோயில்களில் கேட்ட, நம்பிய மொழி அமைப்பை இயக்குகிறது. விதை உவமை — சங்க காலத்திலிருந்து வரும் நாட்டுப்புற நீதிக்கதை (folk moral tradition) மரபை அழைக்கிறது.

இந்த மூன்றும் தனித்தனியாக இயங்கினால் கூட வலிமையானவை. ஆனால் ஒரே தருணத்தில், ஒரே மேடையில், ஒரே பேச்சில் ஒரே திசையில் இயங்கும்போது என்ன நடக்கிறது என்று யோசியுங்கள். மூளையின் மூன்று வெவ்வேறு அடுக்குகள் — பரிணாம வளர்ச்சியின் ஆழமான அடுக்கு, கலாச்சார வரலாற்றின் நடுத்தர அடுக்கு, தனிநபர் மீதான உணர்வின் மேல் அடுக்கு — ஒரே நேரத்தில் ஒரே திசையில் சாய்கின்றன. இதை ஒருங்கிணைந்த நுட்பம் (integrated precision) என்று அழைக்கலாம்.

இந்த ஒருங்கிணைந்த நுட்பம் உருவாகும்போது ஒரு மனவமைப்பு கிட்டத்தட்ட தாக்குப்பிடிக்க முடியாத (impenetrable) ஒன்றாக மாறுகிறது. கொள்கை விவாதங்களால் உடைக்க முடியாது. எதிர்க்கட்சி விமர்சனங்களால் ஆட்டிப்படைக்க முடியாது. ஏனென்றால் அந்த மனவமைப்பு தர்க்கத்தின் மட்டத்தில் (level of logic) கட்டப்படவில்லை — உணர்வின், உறவின், வரலாற்றின் மட்டத்தில் கட்டப்பட்டிருக்கிறது.

இதை புரிந்துகொண்டால் TVK ஏன் கணிப்பாளர்களையும் ஊடகங்களையும் திடுக்கிட வைத்தது என்று புரியும். அவர்கள் கொள்கையை மதிப்பிட்டார்கள். மக்கள் வரைபடத்தை உறுதிப்படுத்தினார்கள். இரண்டும் வெவ்வேறு விஷயங்கள்.

அந்த வரைபடம் எப்படி ஓட்டுச்சாவடியில் வெளிப்பட்டது என்று இப்போது பார்ப்போம்.


VII. TVK எழுச்சி — ஒரு ஃப்ரிஸ்டனியன் வாசிப்பு

TVK கட்சி அறிவிக்கப்பட்டபோது ஒரு விசித்திரமான நிகழ்வு நடந்தது. விஜயின் ரசிகர் சங்கங்களில் யாரும் வியக்கவில்லை.

இது சின்ன விஷயமாக தோன்றலாம். ஆனால் யோசியுங்கள் — ஒரு புதிய அரசியல் கட்சி, ஒரு புதிய தலைவர், ஒரு புதிய திசை என்று அறிவிக்கப்படும்போது சாதாரணமாக என்ன நடக்கும்? மக்கள் கேள்விகள் கேட்பார்கள். கொள்கைகள் என்ன, அமைப்பு எப்படி இருக்கும், யார் இணைவார்கள் என்று யோசிப்பார்கள். ஒரு குறிப்பிட்ட அளவு நிச்சயமின்மை (uncertainty) இருக்கும், ஒரு குறிப்பிட்ட அளவு சுதந்திர ஆற்றல் உயரும்.

ஆனால் TVK அறிவிப்பு வந்தபோது அந்த நிச்சயமின்மை இல்லை. ரசிகர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது — விஜய் அரசியலுக்கு வருவார் என்று. அவர் வராமல் இருந்ததுதான் கேள்வியாக இருந்தது, வந்தது கேள்வியாக இல்லை.

ஃப்ரிஸ்டன் சொல்வதை நினைவுகூருங்கள் — நன்கு பொருந்தும் மனவமைப்பின் (well-fitted generative model) அடையாளம் வியப்பின் இல்லாமை (absence of surprise). TVK அறிவிப்பில் வியப்பு இல்லாமல் போனது என்பது மிக முக்கியமான நரம்பியல் சமிக்ஞை. மக்களின் மனவமைப்பு ஏற்கனவே இந்த நிகழ்வை உள்ளடக்கியிருந்தது. TVK வந்தது மனவமைப்பை உடைக்கவில்லை — மனவமைப்பை நிறைவு செய்தது.

இன்னும் ஆழமாக யோசியுங்கள். விஜய் இருபது ஆண்டுகளாக திரையில் என்ன செய்தார்? அநீதியை கண்டான், அடையாளம் கண்டான், செயல்பட்டான், தீர்த்தான். திரும்பத்திரும்ப, படத்திற்கு படம், இந்த சுழல் நடந்தது. ஒவ்வொரு முறையும் மூளையில் ஒரு கணிப்பு ஆழமாகியது — இந்த மனிதன் செயல்படுவான், இந்த மனிதன் தீர்ப்பான், இந்த மனிதன் நிறுத்தமாட்டான்.

ஆனால் திரையிலிருந்து வெளியே கால் வைக்காத வரை ஒரு திரண்ட சுதந்திர ஆற்றல் (accumulated free energy) இருந்தது. திரையில் அநீதியை தீர்க்கும் மனிதன் நிஜ உலகில் அமைதியாக இருக்கிறான் என்ற கணிப்பு பிழை. அந்த இடைவெளி — திரையில் செயல்படும் நாயகன், நிஜத்தில் பேசாத மனிதன் — ஒரு தொடர்ச்சியான உணர்வு அழுத்தத்தை உருவாக்கியது.

TVK அறிவிப்பு அந்த அழுத்தத்தை ஒரே நொடியில் விடுவித்தது. செயல் சுழல் (action loop) முடிந்தது. சுதந்திர ஆற்றல் குறைந்தது. மனவமைப்பு நிறைவடைந்தது.

இதை புரிந்துகொண்டால், தேர்தல் பேரணிகளில் (election rallies) என்ன நடந்தது என்று வேறு விதமாக தெரியும்.

ஊடகங்கள் என்ன பார்த்தன? மிகப்பெரிய கூட்டங்கள், ஆர்வமான ரசிகர்கள், சினிமா பார்க்க வந்த மனிதர்கள் என்று. அவர்கள் இதை கவலையின்றி கழித்தனர் — "இது வெறும் ரசிகர் உணர்ச்சி, ஓட்டுச்சாவடியில் நிலைக்காது" என்று சொன்னனர். அனுபவமிக்க அரசியல் ஆய்வாளர்கள் (political analysts) கூட இதே தவறை செய்தனர். TVK கட்சி வெற்றி பெறும் என்று முன்கணிப்பு செய்யத் தயங்கினர்.

ஏன் அவர்கள் தவறினார்கள்?

ஏனென்றால் அவர்கள் தவறான கேள்வியை கேட்டார்கள். "இந்த மக்கள் விஜயை ஒரு அரசியல்வாதியாக மதிப்பிடுகிறார்களா?" என்று கேட்டனர். ஆனால் உண்மையான கேள்வி வேறு — "இந்த மக்களின் மனவமைப்பில் விஜய் ஏற்கனவே என்னவாக இருக்கிறார்?" என்பது.

பேரணியில் வந்த மக்கள் புதிய தகவலை (new information) தேடி வரவில்லை. ஏற்கனவே இருந்த மனவமைப்பை உறுதிப்படுத்த (confirm) வந்தார்கள். அவர்களுக்கு கொள்கை விவரம் தேவையில்லை — அவர்களுக்கு அந்த ஒரு உணர்வு தேவை, நாயகன் வந்துவிட்டான், செயல் தொடங்கிவிட்டது என்ற உணர்வு.

இங்கே ஒரு 60, 70 வயதுடைய பாட்டியை பாருங்கள். அவர் பேரணியில் நிற்கிறார். கண்களில் நீர். "நம்ம வீட்டுப் பையன்" என்று சொல்கிறார். ஊடகங்கள் இதை கண்ணீர் உணர்ச்சி என்று கழித்துவிட்டன. ஆனால் ஃப்ரிஸ்டன் மொழியில் பார்த்தால் என்ன தெரிகிறது?

அந்த பாட்டியின் மூளையில் உறவினர் வடிவம் வெற்றிகரமாக பதிந்திருக்கிறது. "நம்ம வீட்டுப் பையன்" என்பது வெறும் அன்பான வார்த்தை இல்லை — அது மிக உயர் நுட்ப முன்கணிப்பின் வெளிப்பாடு. குடும்ப உறவு என்ற மிக ஆழமான நரம்பியல் வகைப்படுத்தலில் (neural categorisation) விஜய் இடம் பெற்றிருக்கிறார். அவர் குடும்பத்தை கைவிட மாட்டார் என்ற கணிப்பு — அது மிக உயர் நுட்பம் கொண்டது, அதை மாற்றுவது மிகவும் கடினம்.

அதே நேரத்தில் அரியலூர், பெரம்பலூர் போன்ற சிறு மாவட்டங்களில் இளைஞர்களை பாருங்கள். அவர்களில் பலரால் TVK கொள்கை ஆவணத்தை (policy document) விவரிக்க முடியாது. TVK பொருளாதாரத் திட்டம் என்ன என்று கேட்டால் தெளிவாக சொல்ல முடியாது. ஊடகங்கள் இதை அரசியல் அறியாமை என்று சொன்னன.

ஆனால் இது அறியாமை இல்லை. இது வேறு ஒரு விதமான அறிவு.

அந்த இளைஞர்களின் மூளையில் ஒரு மிக தெளிவான, மிக உயர் நுட்பமான மனவமைப்பு இருக்கிறது — இந்த மனிதன் நேர்மையானவன், இந்த மனிதன் நம்மை புரிந்துகொள்கிறான், இந்த மனிதன் செயல்படுவான். அந்த மனவமைப்பு கொள்கை ஆவணத்திலிருந்து வரவில்லை — ஆயிரம் மணி நேர சினிமாவிலிருந்து வந்தது, மேடை பேச்சுகளிலிருந்து வந்தது, "நம்ம வீட்டுப் பையன்" என்ற உணர்விலிருந்து வந்தது.

அவர்கள் கொள்கையை மதிப்பிடவில்லை என்பது சரிதான். ஆனால் அவர்கள் மனவமைப்பை உறுதிப்படுத்தினார்கள் — அது மூளையின் அடிப்படை செயல்பாடு.

இப்போது ஒரு முக்கியமான கேள்வி — இந்த மனவமைப்பு இவ்வளவு வலிமையாக இருக்கும்போது, கணிப்பாளர்கள் மட்டுமல்ல, எதிர்க்கட்சிகளும் ஏன் தோற்றன?

ஏனென்றால் அவர்கள் தவறான போர்க்களத்தில் (battlefield) சண்டையிட்டனர். தர்க்கத்தின் மட்டத்தில் (level of logic) விஜயை சவால் செய்தனர் — அவருக்கு அனுபவம் இல்லை என்று, கட்சிக்கு கட்டமைப்பு இல்லை என்று, கொள்கை தெளிவில்லை என்று. இந்த விமர்சனங்கள் எல்லாம் தர்க்கரீதியாக சரியாக இருந்திருக்கலாம். ஆனால் அவை தர்க்கத்தின் மட்டத்தில் வேலை செய்கின்றன. மக்களின் மனவமைப்பு தர்க்கத்தின் மட்டத்தில் கட்டப்படவில்லை — உணர்வின், உறவின், வரலாற்றின் மட்டத்தில் கட்டப்பட்டிருக்கிறது.

ஒரு கல்லை தண்ணீரால் அடிக்கிறார்கள் என்று வையுங்கள். தண்ணீர் கல்லை சுற்றி ஓடுகிறது, கல் அசையவில்லை. தர்க்க விமர்சனங்கள் உயர் நுட்ப மனவமைப்பை சந்திக்கும்போது இப்படிதான் நடக்கிறது — விமர்சனம் சுற்றி ஓடுகிறது, மனவமைப்பு அசையவில்லை.

ஆனால் மனவமைப்பு எப்போதும் அசையாமல் இருக்காது. ஏனென்றால் திரையரங்கில் நடப்பதை நிஜ உலகில் நடத்துவது வேறு விஷயம். சினிமாவில் அநீதி இரண்டு மணி நேரத்தில் தீர்கிறது. நிஜ ஆட்சியில் அதே அநீதியை தீர்க்க ஐந்து ஆண்டுகள் பற்றாது. அந்த இடைவெளியில் என்ன நடக்கும்?

அதற்கான விடை மிகவும் முக்கியமானது — மற்றும் மிகவும் கவலைப்படத்தக்கது.


VIII. பெரம்பலூர் தந்தை — உயர் நுட்ப முன்கணிப்பின் நிலைத்தன்மை

பெரம்பலூரில் ஒரு இளைஞன் இருக்கிறான். படித்தவன், யோசிக்கத் தெரிந்தவன். அவன் ஒரு விஷயத்தை சொன்னான் — வருத்தத்துடன், சிறிது கோபத்துடன்.

"என் அப்பாவுக்கு அரசு வேலை கிடைச்சது ஒரு குறிப்பிட்ட கட்சி ஆட்சியில். அன்னிக்கிருந்து இன்னிக்கு வரைக்கும் அவரு அந்த கட்சிக்கே போடுவார். எவ்வளவு ஊழல் நடந்தாலும், எவ்வளவு தோல்வி வந்தாலும், யாரு என்ன சொன்னாலும் — மாறவே மாட்டார். இதுக்கு என்ன அர்த்தம் இருக்கு?"

அந்த இளைஞன் இதை புரிந்துகொள்ள முடியாமல் தவித்தான். அவனுக்கு இது அறியாமையாக தெரிந்தது, குருட்டு விசுவாசமாக தெரிந்தது, முட்டாள்தனமாக கூட தெரிந்தது.

ஆனால் ஃப்ரிஸ்டன் மொழியில் பார்த்தால் — அந்த தந்தை முட்டாள் இல்லை. அவர் மூளை சரியாகச் செய்வதையே செய்கிறது.

என்ன நடந்தது என்று யோசியுங்கள்.

பல தசாப்தங்களுக்கு முன்பு அந்த மனிதர் ஒரு கடுமையான நிச்சயமின்மையில் (uncertainty) வாழ்ந்தார். வேலை இல்லை. குடும்பம் நடத்த வழி இல்லை. சமூகத்தில் நிலை இல்லை. அவரது மூளை உயர் சிதைவில் இருந்தது. கணிப்பு பிழைகள் ஒன்றன்மேல் ஒன்று குவிந்தன — நாளை என்ன நடக்கும் என்று தெரியவில்லை, குழந்தைகளுக்கு என்ன கொடுப்பேன் என்று தெரியவில்லை, என் வாழ்க்கை எங்கே போகிறது என்று தெரியவில்லை.

அந்த நிலையில் — மிக ஆழமான பாதிப்பிற்குரிய (vulnerable) தருணத்தில் — ஒரு கட்சி அவருக்கு அரசு வேலை கொடுத்தது.

ஒரே நொடியில் என்ன நடந்தது என்று பாருங்கள். வேலை கிடைத்தது — பொருளாதார நிச்சயமின்மை தீர்ந்தது. குடும்பம் காப்பாற்றப்பட்டது — உயிர்வாழல் (survival) உறுதியானது. சமூகத்தில் நிலை கிடைத்தது — அடையாளம் (identity) உருவானது. மிகப்பெரிய, மிகக் கொடுமையான கணிப்பு பிழைகள் ஒரே அடியில் தீர்ந்தன. சுதந்திர ஆற்றல் திடீரென குறைந்தது.

அந்த தருணம் அவர் மூளையில் என்ன செய்தது?

மூளை ஒரு மிக ஆழமான, மிக உயர் நுட்பமான (high-precision) பாடத்தை கற்றுக்கொண்டது — இந்த கட்சி இருந்தால் எனக்கு பாதுகாப்பு இருக்கிறது. இந்த கட்சி என் குடும்பத்தை காப்பாற்றியது. இந்த கட்சி என் வாழ்க்கையின் மிக இருண்ட தருணத்தில் வெளிச்சம் கொண்டு வந்தது.

இந்த கணிப்பு வெறும் அரசியல் கருத்து இல்லை. இது உயிர்வாழல் நினைவு (survival memory). மூளையின் மிக ஆழமான அடுக்கில் பதிந்த ஒன்று — "இது இருந்தால் நான் வாழ்வேன், இது போனால் என்ன ஆவேனோ தெரியாது" என்ற அடிப்படை உணர்வுடன் இணைந்தது.

இப்போது ஒரு முக்கியமான விஷயம் புரிகிறது. உயர் நுட்ப முன்கணிப்புகளை (high-precision priors) மாற்றுவது மிகவும் கடினம் — ஏனென்றால் அவை சாதாரண கருத்துகள் இல்லை. அவை உயிர்வாழலுடன் இணைந்த நினைவுகள். மூளை அவற்றை மாற்றுவதை ஒரு அச்சுறுத்தலாக (threat) உணர்கிறது. "இந்த கட்சி தவறு செய்கிறது" என்று சொல்வது தர்க்கரீதியான கருத்தல்ல — அது "என் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகிறோம்" என்ற நரம்பியல் அலாரத்தை (neural alarm) ஒலிக்கிறது.

அதனால் என்ன நடக்கிறது? புதிய தகவல்கள் வருகின்றன — ஊழல் நடந்தது, கட்சி தோற்றது, வாக்குறுதிகள் நிறைவேறவில்லை. இந்த தகவல்கள் கணிப்பு பிழைகள். சாதாரண சூழ்நிலையில் மனவமைப்பை மாற்றும் தகவல்கள். ஆனால் உயர் நுட்ப முன்கணிப்பு இருக்கும்போது என்ன நடக்கிறது? மூளை அந்த தகவல்களை தள்ளுபடி செய்கிறது (discounts). அல்லது விளக்கம் கண்டுபிடிக்கிறது — கட்சி தோற்றாலும் என் தலைவர் நல்லவர், சூழ்நிலை கஷ்டமாக இருந்தது, எதிரிகள் சதி செய்தார்கள் என்று. மனவமைப்பை காப்பாற்றுவதற்காக யதார்த்தம் மறுக்கப்படுகிறது.

இது முட்டாள்தனம் இல்லை என்று மீண்டும் சொல்கிறேன். இது மூளையின் சுய பாதுகாப்பு (self-protection) செயல்பாடு. ஒரு முறை வியப்பை வெற்றிகரமாக குறைத்த மனவமைப்பை மூளை பேணுகிறது, காக்கிறது, அதை விட்டுக் கொடுக்க மறுக்கிறது — ஏனென்றால் அதை விட்டுக் கொடுப்பது அந்த இருண்ட தருணத்திற்கு திரும்புவதற்கான அபாயத்தை உணர வைக்கிறது.

இந்த பெரம்பலூர் தந்தையின் கதை TVK ரசிகர்களுக்கும் பொருந்துகிறது — ஆனால் நேர் எதிர் திசையில்.

தந்தையின் உயர் நுட்ப முன்கணிப்பு பழையது, பல தசாப்தங்கள் பழமையானது, ஒரு குறிப்பிட்ட வெற்றி அனுபவத்திலிருந்து உருவானது. TVK ரசிகர்களின் உயர் நுட்ப முன்கணிப்பு புதியது, ஆனால் சினிமாவின் ஆயிரம் மணி நேரங்களால் கட்டப்பட்டது, மேடை பேச்சுகளால் உறுதிப்படுத்தப்பட்டது. இரண்டும் ஒரே நரம்பியல் செயல்முறையின் (neurological process) வெளிப்பாடுகள் — அனுபவம் மனவமைப்பை உருவாக்கியது, மனவமைப்பு உயர் நுட்பம் பெற்றது, உயர் நுட்ப மனவமைப்பு தன்னைத்தானே காக்கிறது.

ஆனால் இந்த இரண்டு மனவமைப்புகளுக்கும் இடையே ஒரு முக்கியமான வேறுபாடு இருக்கிறது.

தந்தையின் மனவமைப்பு ஏற்கனவே நடந்த ஒரு நிகழ்வை அடிப்படையாக வைத்திருக்கிறது — வேலை கிடைத்தது, குடும்பம் காப்பாற்றப்பட்டது என்ற உண்மையான அனுபவம். அந்த மனவமைப்பு தவறானது என்று சொல்லலாம், காலாவதியானது (outdated) என்று சொல்லலாம் — ஆனால் அதன் அடித்தளம் (foundation) உண்மையான நிகழ்வு.

TVK ரசிகர்களின் மனவமைப்பு ஒரு நிகழவிருக்கும் வாக்குறுதியை அடிப்படையாக வைத்திருக்கிறது — விஜய் ஆட்சிக்கு வந்தால் அநீதி தீரும் என்ற எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பு எவ்வளவு ஆழமானதோ, எவ்வளவு உயர் நுட்பமானதோ — அந்த அளவுக்கு ஆட்சி நிஜத்தில் என்ன நடக்கிறது என்பது முக்கியமாகிறது.

ஏனென்றால் நிஜ ஆட்சி திரையரங்கு இல்லை.

திரையரங்கில் கணிப்பு பிழைகள் எப்போதும் தீர்க்கப்படுகின்றன — இரண்டு மணி நேரத்தில், மூன்று மணி நேரத்தில். ஆனால் நிஜ உலகில் சில கணிப்பு பிழைகள் தீர்க்கப்படாமலேயே போகலாம். சில வாக்குறுதிகள் நிறைவேறாமல் போகலாம். சில அநீதிகள் தொடரலாம்.

அப்போது என்ன நடக்கும்?

இரண்டு வழிகள் இருக்கின்றன. இரண்டுமே ஆபத்தானவை.


IX. இரண்டு அபாயங்கள் — மறுப்பும் வீழ்ச்சியும்

ஆட்சி தொடங்கிவிட்டது என்று வையுங்கள். முதல் ஆண்டு கடந்தது. இரண்டாம் ஆண்டு கடந்தது. நிஜ உலகின் சிக்கல்கள் ஒன்றன்மேல் ஒன்று குவிகின்றன. ஒரு வாக்குறுதி நிறைவேறவில்லை — நியாயமான காரணங்களால் கூட இருக்கலாம். ஒரு கீழ் நிலை அதிகாரி ஊழல் செய்தான். ஒரு திட்டம் தாமதமானது. ஒரு கோரிக்கை புறக்கணிக்கப்பட்டது.

சிறிய நிகழ்வுகள். நிஜ ஆட்சியில் தவிர்க்க முடியாதவை.

ஆனால் மக்களின் மனவமைப்பு சிறியதல்ல. அது மிக உயர் நுட்பமானது — திரும்பத்திரும்ப, ஆயிரம் மணி நேரங்களால், ஆழமாக பயிற்றுவிக்கப்பட்டது. அந்த உயர் நுட்ப மனவமைப்பும் நிஜ ஆட்சியின் சிறு தோல்வியும் சந்திக்கும்போது மூளை ஒரு கணிப்பு பிழையை உணர்கிறது. அந்த பிழையை என்ன செய்வது என்று மூளை தீர்மானிக்கும் விதத்தில் இரண்டு வழிகள் மட்டுமே இருக்கின்றன.

முதல் அபாயம் — மறுப்பு (denial)

முதல் வழி — கணிப்பு பிழையை ஏற்றுக்கொள்ளாமல் மறுப்பது.

இது எப்படி நடக்கிறது என்று விதை உவமையில் பார்த்தோம் — ஒன்பது வீரர்கள் வெறும் தொட்டியை வேறு விதைகளால் மூடினர். கணிப்பு பிழை நடந்தது என்று தெரியும், ஆனால் அதை ஒப்புக்கொள்ள மனம் மறுக்கிறது. ஏனென்றால் ஒப்புக்கொண்டால் மனவமைப்பே உடைந்துவிடும் என்ற ஆழமான பயம் இருக்கிறது.

TVK ஆட்சியில் இது எப்படி வெளிப்படும்?

ஒரு கீழ் நிலை அதிகாரி ஊழல் செய்தால் — "அவன் தலைவரை ஏமாற்றினான், தலைவருக்கு தெரியாது" என்று சொல்வார்கள். ஒரு திட்டம் தோல்வியடைந்தால் — "எதிர்க்கட்சிகள் சதி செய்தனர், மத்திய அரசு தடை போட்டது" என்று சொல்வார்கள். ஒரு வாக்குறுதி நிறைவேறாவிட்டால் — "நேரம் வரும், பொறுமை வேண்டும், எல்லாம் நடக்கும்" என்று சொல்வார்கள்.

இந்த விளக்கங்கள் தவறானவை என்று சொல்லவில்லை. சில நேரங்களில் உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் ஃப்ரிஸ்டன் மொழியில் இவை என்ன செய்கின்றன என்று பாருங்கள் — கணிப்பு பிழை வந்தது என்று ஒப்புக்கொள்ளாமல், மனவமைப்பை மாற்றாமல், உலகை மாற்றினது போல் தோன்றவைத்து சுதந்திர ஆற்றலை தற்காலிகமாக குறைக்கின்றன. பிழை மறைக்கப்படுகிறது — தீர்க்கப்படவில்லை.

இது தொடர்ந்தால் என்ன ஆகும்?

மறைக்கப்பட்ட பிழைகள் திரளும். ஒவ்வொரு முறையும் "அது அவன் தப்பு, தலைவரின் தப்பு இல்லை" என்று சொல்லும்போது மனவமைப்பும் யதார்த்தமும் இடையே உள்ள இடைவெளி சிறிது சிறிதாக அதிகரிக்கும். மக்கள் படிப்படியாக உண்மையிலிருந்து விலகி, தங்கள் மனவமைப்பை காப்பாற்றுவதற்காக யதார்த்தத்தை மாற்றி மாற்றி பார்க்கத் தொடங்குவார்கள்.

இதன் முடிவு என்ன என்று தெரியுமா? இது ஜனநாயக தோல்வி (democratic failure). ஏனென்றால் ஜனநாயகம் செயல்படுவதற்கு மக்கள் தங்கள் தலைவர்களை யதார்த்தமான கண்ணோட்டத்தில் மதிப்பிட வேண்டும். வாக்காளர்கள் கணிப்பு பிழைகளை ஏற்றுக்கொண்டு மனவமைப்பை புதுப்பிக்கத் தயாராக இருக்க வேண்டும். ஆனால் மறுப்பு என்ற செயல்முறை அந்த திறனையே (capacity) மழுங்கடிக்கிறது.

அந்த நிலையில் தலைவன் ஒரு பொறுப்புணர்வற்ற (unaccountable) நிலைக்கு தள்ளப்படுகிறான் — தவறு செய்தாலும் ஆதரவாளர்கள் காப்பாற்றுவார்கள் என்று. இது தலைவனுக்கும் தீமை, சமூகத்திற்கும் தீமை. ஒரு வழிபாட்டு அரசியல் (cult politics) உருவாகிறது — அங்கே விமர்சனம் துரோகமாக தெரிகிறது, கேள்வி கேட்பது எதிர்ப்பாக தெரிகிறது.

விதை உவமையில் ஒன்பது வீரர்கள் செய்தது நினைவிருக்கிறதா? தங்கள் தோல்வியை மறைக்க பொய்யான செடிகளை கொண்டு வந்தார்கள். மறுப்பு நிலையில் உள்ள ஆதரவாளர்கள் அதே விஷயம் செய்கிறார்கள் — ஆட்சியின் தோல்விகளை மறைக்க விளக்கங்களை கொண்டு வருகிறார்கள். இறுதியில் அவர்களே மோசமடைகிறார்கள் — ஏனென்றால் அவர்கள் தங்கள் வாழ்க்கையின் கணிப்பு பிழைகளை இனி யதார்த்தமாக பார்க்க முடியாத நிலைக்கு வருகிறார்கள்.

இரண்டாம் அபாயம் — முழுமையான வீழ்ச்சி (catastrophic collapse)

இரண்டாம் வழி மறுப்பை விட அதிக வலி தரக்கூடியது.

ஒரு கட்டத்தில் கணிப்பு பிழைகள் மிகவும் அதிகமாகிவிடுகின்றன. யதார்த்தம் மிகவும் தெளிவாகிவிடுகிறது. மறுப்பு இனி சாத்தியமில்லை — ஊழல் மிகவும் பெரியதாக இருக்கிறது, தோல்வி மிகவும் தெளிவாக இருக்கிறது, வாழ்க்கை மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

அந்த தருணத்தில் என்ன நடக்கிறது?

மிக உயர் நுட்ப முன்கணிப்பு — ஆயிரம் மணி நேர சினிமாவால் கட்டப்பட்டது, மேடை பேச்சுகளால் உறுதிப்படுத்தப்பட்டது, "நம்ம வீட்டுப் பையன்" என்ற அன்பால் நனைக்கப்பட்டது — திடீரென உடைகிறது. அந்த உடைவு (collapse) சாதாரண அரசியல் ஏமாற்றம் இல்லை. அது ஒரு நரம்பியல் நிகழ்வு (neurological event).

ஒரு உவமை சொல்கிறேன். ஒரு அணை கட்டுகிறார்கள் என்று வையுங்கள். பல ஆண்டுகளாக நீர் திரளுகிறது. அணை வலிமையாக இருக்கிறது என்று நம்பிக்கை இருக்கிறது. திடீரென ஒரு விரிசல் தெரிகிறது. அந்த விரிசல் விரைவாக அகலமாகிறது. திரண்ட நீர் வெடிப்போடு வெளியேறுகிறது. அணைக்கு கீழே இருந்த எல்லாம் அடித்துச் செல்லப்படுகிறது.

உயர் நுட்ப மனவமைப்பு உடையும்போது அப்படித்தான் இருக்கிறது. திரண்டிருந்த சுதந்திர ஆற்றல் ஒரே நேரத்தில் வெளியேறுகிறது. அது வலிக்கிறது — ஆழமாக, கடுமையாக வலிக்கிறது. ஏனென்றால் உடைந்தது வெறும் ஒரு கருத்து இல்லை — அம்மா என்று நம்பியது, அண்ணன் என்று நம்பியது, தெய்வீகமான நாயகன் என்று நம்பியது உடைந்தது.

இந்த வலி அரசியல் விமர்சனமாக மட்டுமில்லை வெளிவருகிறது. அது கோபமாக வருகிறது. ஆழமான, எரிக்கும் கோபமாக வருகிறது. ஏனென்றால் இங்கே ஒரு கலாச்சார கோட்பாடு இயங்குகிறது — நன்றிக்கடன் (nandri kadan).

தமிழ் சமூகத்தில் நன்றிக்கடன் என்பது ஆங்கிலத்தில் சொல்லும் "debt of gratitude" போல அல்ல. மேற்கத்திய கலாச்சாரத்தில் நன்றிக்கடன் என்பது ஒரு சமூக கடமை (social obligation) — நீ எனக்கு உதவினாய், நான் உனக்கு உதவுவேன். ஒரு கணக்கு, ஒரு பரிவர்த்தனை (transaction).

ஆனால் தமிழ் சமூகத்தில் நன்றிக்கடன் அதை விட ஆழமானது. அது ஒரு ஒழுக்க கணக்கேடு (moral ledger) — தலைமுறைகளாக கடத்தப்படும், கலாச்சார நீரோட்டத்தில் ஊறிய ஒன்று. ஒருவர் உங்களுக்கு உதவும்போது — குறிப்பாக மிக கடினமான தருணத்தில் உதவும்போது — அவரிடம் ஒரு ஆழமான நன்றிக்கடன் உருவாகிறது. அந்த கடனை திரும்ப செலுத்துவது ஒரு நீதிக் கடமை (moral obligation). திரும்ப செலுத்தாமல் போவது — குறிப்பாக வேண்டுமென்றே மறந்துவிடுவது — ஒரு ஆழமான தார்மீக மீறல் (moral transgression).

விஜய் மக்களிடம் என்ன வாங்கினார்? அவர்களின் முழு நம்பிக்கை. அவர்களின் உறவு அன்பு. அவர்களின் "நம்ம வீட்டுப் பையன்" என்ற இதயம். உறவினர் வடிவத்தில் பேசும்போது, தீர்க்கதரிசன மொழியில் அறிவிக்கும்போது — அவர் தன்னையறியாமலேயே ஒரு மிகப்பெரிய நன்றிக்கடனை (nandri kadan) ஏற்றுக்கொண்டார். "நான் உங்கள் அண்ணன், நான் உங்களை காப்பாற்றுவேன்" என்று சொன்னவர் — மக்களின் மொழியில் — அவர்களுக்கு கடன்பட்டவராகி விட்டார்.

அந்த கடன் திரும்ப செலுத்தப்படாவிட்டால் என்ன நடக்கும்?

ஒரு அரசியல்வாதி தோல்வியடைந்தால் மக்கள் வெறுமனே அவரை மறந்துவிடலாம், வேறு கட்சிக்கு போகலாம். அது மட்டுமே நடக்கிறது என்றால் சாதாரண ஜனநாயக செயல்பாடு. ஆனால் "நம்ம வீட்டுப் பையன்" என்று நம்பியவர் கைவிட்டுவிட்டார் என்று தெரிந்தால் — அது அரசியல் ஏமாற்றம் இல்லை. அது குடும்ப துரோகம் (familial betrayal). அண்ணன் கைவிட்டான் என்ற வலி, அம்மா மறந்துவிட்டாள் என்ற வலி — அந்த அளவு ஆழமான, அந்த அளவு எரிக்கும் வலி.

அந்த வலி கோபமாக மாறும். அந்த கோபம் ஆட்சியை மட்டும் தூக்கி எறியாது — அழிக்க முயலும்.

தமிழ்நாட்டில் தேர்தல் வரலாற்றை பாருங்கள். ஆட்சியில் இருந்த கட்சிகள் திரும்பத்திரும்ப மிகப்பெரிய படுதோல்விகளை (landslide defeats) சந்தித்திருக்கின்றன. இது வெறும் ஊஞ்சல் வாக்கு (swing vote) இல்லை — இது வெடிப்பு. எதிர்பார்ப்பின் தீவிரம் நிராகரிப்பின் (rejection) தீவிரத்தை தீர்மானிக்கிறது. ஒரு சாதாரண அரசியல்வாதியை நிராகரிப்பது ஒரு விஷயம். "நம்ம வீட்டுப் பையன்" என்று நம்பி கைவிடப்பட்ட அண்ணனை நிராகரிப்பது முற்றிலும் வேறு — அது ஒரு நரம்பியல் விடுதலை (neurological release), திரண்ட சுதந்திர ஆற்றல் முழுவதும் வெளியேறும் தருணம்.

ஃப்ரிஸ்டன் மொழியில் சொன்னால் — எதிர்பார்ப்பின் நுட்பம் (precision of expectation) எவ்வளவு உயர்வாக இருக்கிறதோ, வீழ்ச்சியின் ஆற்றல் வெளியீடு (energetic release of collapse) அவ்வளவு அதிகமாக இருக்கும். கணிதம் தெளிவானது. மக்களின் உணர்வு தெளிவானது.

ஆக மறுப்பும் தீர்வல்ல, வீழ்ச்சியும் தீர்வல்ல. இரண்டுமே அடிப்படை கேள்விக்கு — நல்ல ஆட்சி என்றால் என்ன, மக்கள் தங்கள் தலைவர்களை எவ்வாறு மதிப்பிட வேண்டும் — பதில் சொல்வதில்லை. அந்த கேள்விக்கான பதில் வேறு இடத்தில் இருக்கிறது.

அது பெரம்பலூர் பஸ் நிலையத்தில் இருக்கிறது.


X. பஸ் நிலையத்தின் நாற்றம் — யதார்த்தத்தின் அளவுகோல்

பெரம்பலூரில் ஒரு பஸ் நிலையம் இருக்கிறது.

அது சிறியது. கூரை கறையடைந்திருக்கிறது. மூலைகளில் குப்பை திரண்டிருக்கிறது. கழிப்பறை இருக்கிறது — கதவு சரியாக மூடாது, நாற்றம் வெளியே வரும். காலையில் வேலைக்கு போகும் மனிதர்கள் அங்கே காத்திருக்கிறார்கள். மாணவர்கள் காத்திருக்கிறார்கள். வயதான பெண்கள் கட்டுகளுடன் காத்திருக்கிறார்கள். வெயில் அடிக்கிறது. நிழல் போதுமானதாக இல்லை. நாற்றம் அடிக்கிறது.

இது ஒரு சிறிய விஷயம் என்று தோன்றலாம். ஒரு பஸ் நிலையம், ஒரு நாற்றம் — இதை ஒரு கட்டுரையில் ஏன் சொல்கிறேன் என்று யோசிக்கலாம்.

ஏனென்றால் இந்த பஸ் நிலையம் ஒரு அளவுகோல் (measuring instrument). மிக துல்லியமான, மிக நேர்மையான அளவுகோல். தர்க்கத்தால் மாற்ற முடியாத அளவுகோல். மேடை பேச்சால் மறைக்க முடியாத அளவுகோல். உறவினர் வடிவத்தால் தவிர்க்க முடியாத அளவுகோல்.

நாற்றம் அடிக்கிறதா இல்லையா என்று மூக்கு தெரியும். அவ்வளவுதான்.

திரையரங்கில் என்ன நடக்கிறது என்று நினைத்துப் பாருங்கள். திரையில் ஒரு ஊழல் நிறைந்த மாவட்ட ஆட்சியர் இருக்கிறான். ஊரின் பஸ் நிலையம் அழுகியிருக்கிறது, குப்பை திரண்டிருக்கிறது, மக்கள் கஷ்டப்படுகிறார்கள். நாயகன் வருகிறான். சண்டை நடக்கிறது. இரண்டு மணி நேரத்தில் ஊழல் அதிகாரி வீழ்கிறான். இறுதி காட்சியில் பஸ் நிலையம் சுத்தமாகிறது, மக்கள் சிரிக்கிறார்கள், இசை வருகிறது.

திரையரங்கில் இருந்த நூறு பேரின் மூளையும் ஒரே நேரத்தில் நிறைவடைகிறது. சுதந்திர ஆற்றல் சரிகிறது. அவர்கள் வெளியே வருகிறார்கள் — ஒரு இலகுவான உணர்வுடன், ஒரு நம்பிக்கையுடன்.

ஆனால் திரையரங்கிலிருந்து வெளியே வந்து பஸ் நிலையத்திற்கு போகும்போது நாற்றம் இன்னும் இருக்கிறது. காலையிலும் இருந்தது, மாலையிலும் இருக்கிறது. நேற்றும் இருந்தது, இன்றும் இருக்கிறது.

இந்த இடைவெளிதான் — திரையில் தீர்க்கப்படும் கணிப்பு பிழைக்கும் நிஜத்தில் தொடரும் கணிப்பு பிழைக்கும் இடையே உள்ள இடைவெளிதான் — அரசியல் வாக்குறுதியின் உண்மையான சோதனை.

சினிமா ஒரு கட்டுப்படுத்தப்பட்ட சூழல் (controlled environment). அங்கே கணிப்பு பிழைகள் எப்போதும் தீர்க்கப்படுகின்றன — ஏனென்றால் திரைக்கதை எழுதியவர் அப்படி எழுதியிருக்கிறார். ஆனால் நிஜ ஆட்சியில் திரைக்கதை எழுதுவது யாரும் இல்லை. மத்திய அரசு ஒரு வழியில் போகிறது. நீதிமன்றம் வேறு வழியில் போகிறது. பொருளாதார நெருக்கடி திடீரென வருகிறது. வேறு மாநிலங்களில் நடப்பது தமிழ்நாட்டை பாதிக்கிறது. இயற்கை சீற்றங்கள் வருகின்றன. நிஜ உலகில் தீர்க்கப்படாத கணிப்பு பிழைகள் எப்போதும் இருக்கும்.

இந்த யதார்த்தத்தை ஒரு தலைவர் எப்படி சமாளிக்கிறார் என்பதில் இரண்டு விதமான அணுகுமுறைகள் (approaches) இருக்கின்றன.

முதல் அணுகுமுறை — திரையரங்கு மனநிலை. சிக்கல்களை மறைக்கிறார், விளக்கங்கள் சொல்கிறார், நம்பிக்கை வார்த்தைகளில் மூழ்கடிக்கிறார். மக்களின் மனவமைப்பை காப்பாற்றுவதற்காக யதார்த்தத்தை திரிக்கிறார். குறுகிய காலத்தில் சுதந்திர ஆற்றல் குறையும் — ஆனால் திரண்ட பிழைகள் ஒரு நாள் வெடிக்கும்.

இரண்டாம் அணுகுமுறை — வெறும் தொட்டியின் மனநிலை. பஸ் நிலையத்தின் நாற்றத்தை நாற்றம் என்று சொல்கிறார். "இந்த சிக்கல் இருக்கிறது, இதை இப்படி தீர்க்கப் போகிறோம், இது நேரம் எடுக்கும்" என்று நேர்மையாக சொல்கிறார். மக்களின் மனவமைப்பை படிப்படியாக யதார்த்தத்திற்கு நெருங்க வைக்கிறார் — திடீரென உடைக்காமல், மெல்ல மெல்ல புதுப்பிக்கிறார்.

இரண்டாம் அணுகுமுறை கடினமானது. ஏனென்றால் நேர்மை குறுகிய காலத்தில் வலிக்கும். "இன்னும் ஆகவில்லை" என்று சொல்லும்போது மக்கள் கோபப்படுவார்கள். மனவமைப்பு கணிப்பு பிழையை உணரும். சுதந்திர ஆற்றல் தற்காலிகமாக உயரும்.

ஆனால் அந்த வலி தேவையான வலி. ஏனென்றால் அது மனவமைப்பை யதார்த்தத்திற்கு நெருங்கவைக்கிறது. அந்த நெருக்கம் நடக்கும்போது மக்களின் எதிர்பார்ப்புகள் மெல்ல மெல்ல யதார்த்தமாகின்றன. சிறிய வெற்றிகளை பெரிதாக பார்க்கத் தொடங்குகிறார்கள். தோல்விகளை அனுமதிக்கத் தொடங்குகிறார்கள். முழுமையான மீட்பை எதிர்பார்ப்பதை விட்டு, படிப்படியான முன்னேற்றத்தை மதிக்கத் தொடங்குகிறார்கள்.

இது ஒரு கடினமான, நீண்ட பயணம். ஆனால் இதுதான் ஒரே நிலையான பயணம்.

ஏனென்றால் பஸ் நிலையத்தின் நாற்றம் போகவில்லை என்றால் — ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும் இன்னும் நாற்றம் அடித்தால் — மக்களின் மூக்கு தெரியும். அவர்களின் மூளை தெரியும். கணிப்பு பிழை திரும்பும். சுதந்திர ஆற்றல் உயரும்.

அந்த தருணத்தில் மக்கள் ஒரு முடிவு எடுப்பார்கள். அது ஓட்டுச்சாவடியில் வெளிப்படும் — அமைதியாக, ஆனால் உறுதியாக.

ஒரு நடிகன் திரையில் பஸ் நிலையத்தை சுத்தம் செய்வது எளிது. ஒரு தலைவன் நிஜத்தில் பஸ் நிலையத்தை சுத்தம் செய்வது வேறு விஷயம். திரையில் இரண்டு நிமிடம் போதும். நிஜத்தில் — அதிகாரிகளை சரிசெய்ய வேண்டும், நிதி ஒதுக்க வேண்டும், கண்காணிக்க வேண்டும், திரும்பத்திரும்ப பின்தொடர வேண்டும். அது நாளாகும், மாதமாகும், சில நேரங்களில் ஆண்டுகளாகும்.

அந்த ஆண்டுகளில் ஒரு தலைவன் என்ன செய்கிறான் என்பதுதான் கேள்வி. திரையரங்கு மனநிலையில் இருக்கிறானா — நம்பிக்கை வார்த்தைகளால் நாற்றத்தை மூடுகிறானா? அல்லது வெறும் தொட்டியின் மனநிலையில் இருக்கிறானா — நாற்றம் இருக்கிறது என்று ஒப்புக்கொண்டு, மெல்ல மெல்ல, நாளுக்கு நாள் தீர்க்கிறானா?

இந்த கேள்விக்கான விடையில்தான் ஜனநாயகத்தின் முதிர்ச்சி (democratic maturity) பற்றிய பெரிய கதை இருக்கிறது.

அந்த கதையை இப்போது பார்ப்போம்.


XI. ஜனநாயக முதிர்ச்சி — கூட்டு சிகிச்சையின் நீண்ட பயணம்

மனநல மருத்துவத்தில் (psychiatry) ஒரு அடிப்படை உண்மை இருக்கிறது. நோயாளி ஒருவர் என்னிடம் வருகிறார் என்று வையுங்கள். அவர் வாழ்க்கையில் ஆழமான வலி இருக்கிறது. பழைய காயங்கள் இருக்கின்றன. உலகை பற்றிய சில திரிந்த மனவமைப்புகள் (distorted generative models) இருக்கின்றன — "யாரும் என்னை நம்பமாட்டார்கள்", "நான் எதிலும் வெற்றி பெற முடியாது", "எல்லாம் என் தப்பு" என்று.

இந்த மனவமைப்புகள் அவருக்கு வலியை தருகின்றன. அவை யதார்த்தத்துடன் (reality) பொருந்தவில்லை — ஆனால் அவரது மூளைக்கு அவை மிக உயர் நுட்பமான, மிக உண்மையான கணிப்புகளாக இருக்கின்றன. அவற்றை ஒரே நாளில் மாற்ற முடியாது. திடீரென "உன் மனவமைப்பு தவறு" என்று சொன்னால் என்ன நடக்கும்? அவர் மேலும் இறுகிக்கொள்வார். சுதந்திர ஆற்றல் திடீரென உயரும். பாதுகாப்பு அரண்கள் (defence mechanisms) வலிமையாகும்.

நல்ல சிகிச்சை அப்படி நடப்பதில்லை.

நல்ல சிகிச்சை என்னவென்றால் — மனவமைப்பை படிப்படியாக, பொறுமையாக, மிக கவனமாக யதார்த்தத்திற்கு நெருங்கவைப்பது. ஒவ்வொரு சந்திப்பிலும் ஒரு சிறிய கணிப்பு பிழையை அறிமுகப்படுத்துவது — மிகவும் சிறியதாக, அமைப்பு தாங்கக்கூடிய அளவில். "இந்த ஒரு சூழ்நிலையில் யாரோ உன்னை நம்பினார்கள் என்று சொன்னாயே — அதை என்னவென்று நினைக்கிறாய்?" என்று. அந்த சிறிய கணிப்பு பிழையை அவர் செயலாக்குகிறார் (process). மனவமைப்பு கொஞ்சம் நகர்கிறது. சுதந்திர ஆற்றல் மேலாண்மையான அளவில் (manageable level) மட்டுமே உயர்கிறது — வெடிக்காமல் இருக்கிறது.

இந்த செயல்முறை மாதங்கள் எடுக்கும். சில நேரங்களில் ஆண்டுகள் எடுக்கும். படிப்படியாக, திரும்பத் திரும்ப, நம்பிக்கையுடன். ஒவ்வொரு முறையும் மனவமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக புதுப்பிக்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் யதார்த்தத்துடன் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்குகிறது. ஒரு நாள் — எந்த ஒரு நாளில் என்று சொல்ல முடியாது, மெல்ல மெல்ல வருகிறது — அந்த மனிதர் உலகை கொஞ்சம் வேறுவிதமாக பார்க்கத் தொடங்குகிறார். கொஞ்சம் அதிக நெகிழ்வுடன் (flexibility). கொஞ்சம் அதிக யதார்த்தத்துடன். கொஞ்சம் அதிக வலிமையுடன்.

இதை நாம் சிகிச்சை என்று அழைக்கிறோம்.

இப்போது ஒரு நாட்டை பாருங்கள். ஒரு முழு சமூகத்தை பாருங்கள்.

தமிழ்நாட்டு மக்கள் ஆயிரம் ஆண்டுகளாக ஒரு கூட்டு மனவமைப்புடன் வாழ்ந்திருக்கிறார்கள் — கோயில் அமைப்பு, திராவிட இயக்கம், சினிமா என்று வழிவழியாக கடத்தப்பட்ட மனவமைப்புகள். இந்த மனவமைப்புகள் அவர்களுக்கு அர்த்தம் கொடுத்தன, பாதுகாப்பு உணர்வு கொடுத்தன, வியப்பை குறைத்தன. ஆனால் சில நேரங்களில் இந்த மனவமைப்புகள் யதார்த்தத்திலிருந்து விலகின — தலைவர்கள் கடவுளாகினார்கள், வாக்குறுதிகள் தீர்க்கதரிசனங்களாகின, எதிர்பார்ப்புகள் வானளாவ வளர்ந்தன.

அந்த இடைவெளியில் — மனவமைப்பும் யதார்த்தமும் இடையே — ஆட்சிகள் உடைந்தன, மக்கள் ஏமாற்றமடைந்தார்கள், சுழல் திரும்பியது.

ஃப்ரிஸ்டன் மொழியில் சொன்னால் — ஒரு சமூகமும் ஒரு நோயாளியைப் போல் இயங்குகிறது. அந்த சமூகத்தின் கூட்டு மனவமைப்பும் படிப்படியாக, யதார்த்தத்திற்கு நெருங்கவேண்டும். அந்த செயல்முறை மிகவும் வலிக்கும் நேரங்களில் நடக்கும். சிக்கல்கள் ஒப்புக்கொள்ளப்படும்போது வலிக்கும். வாக்குறுதிகள் நிறைவேறாமல் போகும்போது வலிக்கும். தலைவர்கள் மனிதர்களாக தெரியும்போது வலிக்கும்.

ஆனால் அந்த வலி தேவையானது. ஏனென்றால் அந்த வலியில்தான் மனவமைப்பு புதுப்பிக்கப்படுகிறது. தலைவர்களை மனிதர்களாக பார்க்கும் திறன் வருகிறது. வெற்றிகளை வெற்றிகளாகவும் தோல்விகளை தோல்விகளாகவும் பிரித்து பார்க்கும் முதிர்ச்சி வருகிறது.

இந்த செயல்முறைக்கு சிகிச்சை என்று பெயர் சொல்கிறோம் — தனிமனித அளவில். கூட்டு அரசியல் அளவில் இதே செயல்முறைக்கு வேறு பெயர் சொல்கிறோம்.

ஜனநாயக முதிர்ச்சி (democratic maturity).

ஜனநாயக முதிர்ச்சி என்பது வெறும் தேர்தல் நடத்துவது இல்லை. வெறும் வாக்களிப்பது இல்லை. ஜனநாயக முதிர்ச்சி என்பது ஒரு சமூகம் தன்னுடைய கூட்டு மனவமைப்பை யதார்த்தத்தின் தொடர்ச்சியான சோதனைக்கு (continuous testing) உட்படுத்துவது — திடீர் வெடிப்பில்லாமல், படிப்படியான புதுப்பிப்புடன், நம்பிக்கையை அழிக்காமல் யதார்த்தத்தை மறைக்காமல்.

இது மூன்று விஷயங்களை கேட்கிறது.

முதலில் மக்களிடமிருந்து. ஒரு தலைவரை தெய்வமாக பார்க்கும் எதிர்பார்ப்பை விட்டுவிட வேண்டும். அவர் மனிதன் என்று ஏற்றுக்கொள்ள வேண்டும் — தவறு செய்வான், சில நேரங்களில் தோல்வியடைவான், எல்லாவற்றையும் தீர்க்க முடியாது என்று. இந்த ஏற்றுக்கொள்ளல் வலிக்கும். ஆனால் இது இல்லாமல் ஜனநாயகம் ஒரு திரையரங்காகவே இருக்கும் — உணர்வு மட்டுமே இருக்கும், யதார்த்தம் இருக்காது.

இரண்டாவது தலைவர்களிடமிருந்து. விதை உவமையில் பத்தாவது வீரன் செய்தது நினைவிருக்கிறதா — வெறும் தொட்டியுடன் நின்றான். நாற்றம் அடிக்கும் பஸ் நிலையத்தை நாற்றம் அடிக்கிறது என்று சொல்ல தைரியம் வேண்டும். "ஐந்து ஆண்டுகளில் எல்லாம் சரியாகும்" என்று வாக்குறுதி கொடுப்பது எளிது. "இந்த சிக்கல் கடினமானது, இந்த வழியில் முயற்சிக்கிறோம், இது நேரம் எடுக்கும்" என்று நேர்மையாக சொல்வது கடினம் — ஆனால் அது மட்டுமே மக்களின் மனவமைப்பை யதார்த்தத்திற்கு மெல்ல நெருங்கவைக்கும்.

மூன்றாவது நிறுவனங்களிடமிருந்து (institutions). நீதிமன்றங்கள், ஊடகங்கள், சிவில் சமூகம் (civil society) — இவை ஒரு ஆரோக்கியமான சமூகத்தில் என்ன செய்கின்றன என்று தெரியுமா? கணிப்பு பிழைகளை சரியான நேரத்தில், சரியான அளவில் தெரிவிக்கின்றன. மிகவும் பெரிய பிழைகளாக வெடிப்பதற்கு முன்பு சிறிய பிழைகளாக அறிவிக்கின்றன. மனவமைப்பு திடீரென உடையாமல் படிப்படியாக புதுப்பிக்கப்படுவதற்கான சூழலை உருவாக்குகின்றன.

இந்த மூன்றும் சேரும்போது — யதார்த்தமான எதிர்பார்ப்புகள் கொண்ட மக்கள், நேர்மையான தலைவர்கள், வலிமையான நிறுவனங்கள் — ஒரு சமூகம் படிப்படியாக கற்றுக்கொள்கிறது. தோல்விகளை தாங்கிக்கொள்கிறது. வெற்றிகளை கொண்டாடுகிறது. மீண்டும் முயல்கிறது.

அந்த செயல்முறையில் திரண்ட சுதந்திர ஆற்றல் வெடிக்காமல் மெல்ல மெல்ல வெளியேறுகிறது. மிகப்பெரிய படுதோல்விகளின் (landslide defeats) சுழல் மெல்ல மெல்ல இடம் விடுகிறது. ஒரு நிலையான, நெகிழ்வான (resilient) அரசியல் கலாச்சாரம் உருவாகிறது.

இது கனவு அல்ல. இது நரம்பியல் அறிவியலின் கணிப்பு. மனவமைப்புகள் யதார்த்தத்துடன் படிப்படியாக ஒத்துவரும்போது (align gradually) அமைப்புகள் நிலையாகின்றன. இது தனிமனித மூளைக்கும் உண்மை, கூட்டு சமூகத்திற்கும் உண்மை.

ஆனால் இந்த நீண்ட பயணத்தில் ஒரு எச்சரிக்கை இருக்கிறது. நாம் பயன்படுத்திய கண்ணாடி — ஃப்ரிஸ்டனின் கோட்பாடு — மிகவும் சக்திவாய்ந்தது. ஆனால் எந்த கண்ணாடியிலும் குறைபாடுகள் இருக்கும். அந்த குறைபாட்டை நேர்மையாக பார்க்காமல் இந்தக் கட்டுரை முடியக்கூடாது.


XII. அறிவியல் எச்சரிக்கை — கண்ணாடியும் கண்ணும்

இந்தக் கட்டுரையை படிக்கும்போது ஒரு உணர்வு வரலாம். எல்லாம் தெளிவாகிவிட்டது என்ற உணர்வு. கோயில் ஏன் இப்படி செயல்பட்டது என்று புரிகிறது. பெரியார் ஏன் அவசியமானார் என்று புரிகிறது. சினிமா எப்படி இடைவெளியை நிரப்பியது என்று புரிகிறது. விஜய் ஏன் வெற்றி பெற்றார் என்று புரிகிறது. எல்லாவற்றிற்கும் ஒரு விடை இருக்கிறது, ஒரு கோட்பாடு எல்லாவற்றையும் விளக்குகிறது என்று.

அந்த உணர்வு வரும்போது நிறுத்துங்கள்.

அறிவியல் தத்துவத்தில் (philosophy of science) ஒரு மிக முக்கியமான எச்சரிக்கை இருக்கிறது. எல்லாவற்றையும் விளக்கும் ஒரு கோட்பாடு இறுதியில் எதையும் விளக்காமல் போகலாம் என்று. இதை அதி விரிவாக்கல் (overfitting) என்று அழைக்கலாம் — ஒரு கோட்பாடு மிகவும் நெகிழ்வானதாக (flexible) ஆகும்போது, மிகவும் பல விஷயங்களுக்கு பொருந்தும்போது, அதன் விளக்க சக்தி (explanatory power) மெல்ல மெல்ல வலுவிழக்கிறது.

ஃப்ரிஸ்டனின் சுதந்திர ஆற்றல் கோட்பாட்டிற்கு இந்த விமர்சனம் மிகவும் பொருந்துகிறது.

ஒரு அணு உயிரி (single-celled organism) ஊட்டச்சத்தை நோக்கி நகர்வதை விளக்குகிறது. ஒரு குழந்தை வலியிலிருந்து விலகுவதை விளக்குகிறது. ஒரு தனிமனிதன் அரசியல் நம்பிக்கை உருவாக்குவதை விளக்குகிறது. ஒரு முழு சமூகம் ஒரு தலைவரை தேர்ந்தெடுப்பதை விளக்குகிறது. நூறு கோடி மக்களின் நூற்றாண்டு வரலாற்றை விளக்குகிறது.

ஒரே கணக்கீடு. எல்லாவற்றிற்கும் ஒரே விடை.

இது சாத்தியமா என்று கேட்டால் — கோட்பாட்டு ரீதியில் (theoretically) நேர்மையாக சொல்ல வேண்டும், தெரியாது என்று.

அறிவியலில் ஒரு நல்ல கோட்பாட்டின் அடையாளம் என்னவென்றால் அது தவறு என்று நிரூபிக்கக்கூடியதாக (falsifiable) இருக்க வேண்டும். "இந்த சூழ்நிலையில் இந்த கோட்பாடு தவறு என்று நிரூபிக்கப்படும்" என்று சொல்ல முடியும்போதுதான் அது உண்மையிலேயே ஒரு சோதிக்கக்கூடிய (testable) கோட்பாடு. ஆனால் "எல்லாமே சுதந்திர ஆற்றல் குறைப்புதான்" என்று சொல்வதை எப்படி தவறு என்று நிரூபிப்பது? என்ன நடந்தாலும் அதை சுதந்திர ஆற்றல் குறைப்பு என்று சொல்லலாம் — திருமணம் செய்வதும் சுதந்திர ஆற்றல் குறைப்பு, விவாகரத்து செய்வதும் சுதந்திர ஆற்றல் குறைப்பு, வாக்களிப்பதும் வாக்களிக்காமல் இருப்பதும் சுதந்திர ஆற்றல் குறைப்பு.

எல்லாவற்றையும் விளக்கும் கோட்பாடு உண்மையில் எதையும் கணிக்காத (predicts nothing) கோட்பாடாக மாறலாம்.

இது கார்ல் ஃப்ரிஸ்டனை விமர்சிப்பதற்காக சொல்லவில்லை. அவர் நரம்பியல் அறிவியலில் செய்த பங்களிப்பு மிகவும் முக்கியமானது — குறிப்பாக மூளை எவ்வாறு கணிப்புகளை உருவாக்குகிறது, பிழைகளை செயலாக்குகிறது என்பதில். அந்த குறுகிய, குறிப்பிட்ட (specific) அளவில் அவரது கோட்பாடு மிகவும் வலிமையானது, நிறைய ஆராய்ச்சி சான்றுகளால் (empirical evidence) ஆதரிக்கப்படுகிறது.

ஆனால் அந்த குறிப்பிட்ட கோட்பாட்டை ஒரு முழு நாட்டின் அரசியல் வரலாற்றிற்கு நீட்டிக்கும்போது — கோயிலிலிருந்து TVK வரை, பெரியாரிலிருந்து பெரம்பலூர் பஸ் நிலையம் வரை — நாம் கோட்பாட்டின் எல்லைகளை (boundaries) தாண்டி நடக்கிறோம்.

அதை ஒப்புக்கொள்வது நேர்மை.

இந்தக் கட்டுரை முழுவதும் நான் சொல்ல முயன்றது ஒரு எளிய விஷயம் — இந்த கோட்பாடு ஒரு கண்ணாடி, முழு கண் அல்ல என்று.

கண்ணாடி என்பது என்ன செய்கிறது? ஒரு குறிப்பிட்ட தொலைவில் உள்ள விஷயங்களை தெளிவாக காட்டுகிறது. வேறு தொலைவில் உள்ள விஷயங்கள் மங்கலாக தெரியலாம் அல்லது தெரியாமல் போகலாம். கண்ணாடியை அணிந்திருப்பவர் தன் கண்ணாடியே தன் கண் என்று நம்பும் போது — தெளிவாக தெரியும் விஷயங்களை மட்டுமே யதார்த்தம் என்று நம்பும்போது — கண்ணாடி ஒரு கட்டுப்பாடாக மாறும்.

ஃப்ரிஸ்டனின் கண்ணாடி இந்தக் கட்டுரையில் சில விஷயங்களை மிக தெளிவாக காட்டியது. கூட்டு மனவமைப்புகள் எப்படி உருவாகின்றன என்று. அவை எப்படி அரசியல் நம்பிக்கைகளாக மாறுகின்றன என்று. உயர் நுட்ப முன்கணிப்புகள் எப்படி வெடிக்கின்றன என்று. இவை முக்கியமான, பயனுள்ள புரிதல்கள்.

ஆனால் இந்த கண்ணாடி சில விஷயங்களை காட்டாமல் போகலாம். தமிழக அரசியலில் சாதி என்ற தொடர்ச்சியான யதார்த்தம் இருக்கிறது — அதை வெறும் "சுதந்திர ஆற்றல் குறைப்பு" என்று சொல்லிவிட முடியாது. பொருளாதார அமைப்புகள் இருக்கின்றன, வரலாற்று அடக்குமுறைகள் இருக்கின்றன, சர்வதேச அரசியல் தாக்கங்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் ஒரு தனி கோட்பாட்டின் கண்ணோட்டத்தில் மட்டும் புரிந்துகொள்ள முடியாதவை.

உண்மையான புரிதல் (understanding) என்பது பல கண்ணாடிகளை அணிந்து, ஒவ்வொன்றும் என்ன காட்டுகிறது என்று பார்த்து, அவற்றை ஒன்றோடொன்று பேச வைத்து, எந்த ஒரு கண்ணாடியும் முழு யதார்த்தம் இல்லை என்று மனதில் வைத்துக்கொண்டு முன்னேறுவது.

ஃப்ரிஸ்டனின் கண்ணாடி இந்தக் கட்டுரையில் ஒரு முக்கியமான பயணத்தை கொடுத்தது. கோயிலிலிருந்து TVK வரை, தனி மூளையிலிருந்து கூட்டு சமூகம் வரை, படிக்கட்டு அதிர்விலிருந்து ஜனநாயக முதிர்ச்சி வரை ஒரு தொடர்ச்சியான நூலில் கோர்த்து பார்க்க உதவியது.

அந்த பயணம் முடிகிறது. கண்ணாடியை இறக்கிவைக்கலாம்.

ஆனால் ஒரு கேள்வி தொடர்கிறது.


கடைசி வார்த்தைகள்

சிதைவு (entropy) மீண்டும் அதிகரிக்கும்.

இது ஃப்ரிஸ்டனின் கணிப்பு மட்டுமல்ல — இது இயற்பியலின் (physics) அடிப்படை விதி. ஒழுங்கமைக்கப்பட்ட அறை மீண்டும் குழம்பும். கட்டப்பட்ட வீடு மீண்டும் தேய்மானமடையும். கட்டப்பட்ட மனவமைப்பு மீண்டும் சோதிக்கப்படும்.

TVK ஆட்சி தொடங்கியிருக்கிறது. முதல் நாள் உற்சாகம் இருக்கிறது. நம்பிக்கை இருக்கிறது. ஆயிரம் மணி நேர சினிமாவால் கட்டப்பட்ட, மேடை பேச்சுகளால் உறுதிப்படுத்தப்பட்ட, "நம்ம வீட்டுப் பையன்" என்ற அன்பால் நனைக்கப்பட்ட ஒரு மிக உயர் நுட்ப மனவமைப்பு இருக்கிறது.

அந்த மனவமைப்பும் யதார்த்தமும் இடையே என்ன நடக்கிறது என்பது வரும் ஆண்டுகளில் தெரியும்.

பெரம்பலூர் பஸ் நிலையம் இன்னும் இருக்கிறது. நாற்றம் இன்னும் இருக்கிறது. அது போகுமா என்று காலை எழுந்திருக்கும் மக்களுக்கு தெரியாது. ஆனால் அவர்களுக்கு தெரியும் — நாற்றம் இருக்கிறதா இல்லையா என்று.

மூக்கு தெரியும். மூளை தெரியும். மனவமைப்பு சோதிக்கப்படும்.

அதை சோதிக்கும் யதார்த்தத்தை — அந்த யதார்த்தத்திடம் தோல்வியை ஒப்புக்கொண்டு, மெல்ல மெல்ல புதுப்பிக்கும் திறனை — நாம் ஜனநாயக முதிர்ச்சி என்று அழைக்கிறோம். அந்த முதிர்ச்சி ஒரு நாளில் வராது. ஒரு தேர்தலில் வராது. தலைவர் ஒருவரால் மட்டும் வராது.

அது மக்களிலிருந்து வருகிறது. தலைவர்களிலிருந்து வருகிறது. நிறுவனங்களிலிருந்து வருகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக — நாற்றம் அடிக்கும் பஸ் நிலையத்தை நாற்றம் அடிக்கிறது என்று சொல்லும் தைரியத்திலிருந்து வருகிறது. வெறும் தொட்டியை தூக்கிக்கொண்டு நிற்கும் நேர்மையிலிருந்து வருகிறது.

அந்த தைரியம் — ஆட்சியாளனிடமும் மக்களிடமும் — இருக்கும்போது ஜனநாயகம் வெறும் ஓட்டு எந்திரம் (voting machine) இல்லை. அது ஒரு கூட்டு சிகிச்சை (collective therapy) — ஒரு சமூகம் மெல்ல மெல்ல, வலியுடன், நம்பிக்கையுடன், யதார்த்தத்தை நோக்கி நடக்கும் நீண்ட பயணம்.

சிதைவு மீண்டும் உயரும். அது எப்போதும் உயரும்.

கேள்வி அதுவல்ல.

கேள்வி — சிதைவு உயரும்போது, தமிழக அரசியல் என்ன செய்யும்? திரையரங்கில் புகுந்துகொள்ளுமா — இல்லை, வெறும் தொட்டியுடன் மைதானத்தில் நிற்குமா?

அந்த விடை வரும் ஆண்டுகளில் எழுதப்படும். அதை எழுதுவது நாயகன் இல்லை — மக்கள்.

எப்போதும் மக்கள்தான்.


ஜே.பி. இராஜேந்திரன் - மனநல மருத்துவர் - மே 2026

 

நன்றி (Acknowledgements)

இந்தக் கட்டுரை உருவாவதற்கு இரண்டு முக்கியமான மனிதர்களின் பங்களிப்பு இருக்கிறது.

அலெக்ஸ் ஹெம்மிங் (Alex Hemming) - கணக்கீட்டு நரம்பியல் உளவியலாளர் (Computational Neuroscientist) கார்ல் ஃப்ரிஸ்டனின் கோட்பாடுகளை என்னிடம் அறிமுகப்படுத்தியதற்கும், செயலில் முன்னனுமானம் (active inference) பற்றிய தன் ஆராய்ச்சி உற்சாகத்தை பகிர்ந்துகொண்டதற்கும் ஆழமான நன்றி.

M.D. முத்துகுமாரசாமி (MDM)  - எழுத்தாளர் மற்றும் நாட்டுப்புற ஆராய்ச்சியாளர்; பேச்சு வடிவங்கள் (speech registers), கதை நிலைப்பாடுகள் (narrative positions), நாட்டுப்புற மரபுகள் (folklore traditions) ஆகியவை குறித்த தன் மதிப்பமிக்க கருத்துகளை பகிர்ந்துகொண்டதற்கு சிறப்பான நன்றி.

Acknowledgements

Sincere thanks to Alex Hemming, Computational Neuroscientist, University College London, for introducing me to the conceptual world of Karl Friston and for generously sharing his enthusiasm and insights on active inference and the neuroscience of political belief formation.

Deep gratitude to M.D. Muthukumaraswamy (MDM), writer, scholar, and Director of the National Folklore Support Centre, Chennai, for his invaluable insights on speech registers, narrative positions, and the rich traditions of Tamil folklore — perspectives that gave this article its cultural depth and linguistic texture.


ஆதாரங்கள் மற்றும் மேலும் படிக்க

(References and Further Reading) 

In Support — Key Web References:

Friston, K. et al. (2022). The free energy principle made simpler but not too simple. arXiv preprint. https://arxiv.org/pdf/2201.06387 — A concise formal description of the principle directly from Friston's team, accessible without specialist mathematics.

Active Inference in Psychology and Psychiatry: Progress to Date? (2024). MDPI Entropy. https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC11507080/ — A clinically relevant overview of how the framework applies to mental health conditions including psychosis and depression.

In Critique — Key Web References:

Stegemann, W. (2025). The Limits of the Free Energy Principle: A Systematic Critique. Neo-Cybernetics, Medium. https://medium.com/neo-cybernetics/the-limits-of-the-free-energy-principle  — A detailed philosophical critique identifying five fundamental problems including unfalsifiability, teleological category error, and the inadmissible analogy between thermodynamic and information-theoretic free energy.

Wikipedia — Free Energy Principle. https://en.wikipedia.org/wiki/Free_energy_principle — Useful for its ongoing synthesis of both supporting and critical literature, regularly updated by the scholarly community.

 


Monday, 27 April 2026

ப்ரம்மராக்‌ஷஸ் — ஒரு மறுவாசிப்பு

 ப்ரம்மராக்‌ஷஸ் — ஒரு மறுவாசிப்பு

———

ஜே.பி. ராஜேந்திரன்




ப்ரம்மராக்‌ஷஸ் என்ற வார்த்தையை முதன்முதலில் எனக்கு அறிமுகப்படுத்தியது ஓவியர் நடேஷ். ஆனால் அதைப் பற்றி சில கதைகள் இருந்திருக்கிறது என்பதை நான் தெரிந்துவைத்திருக்கவில்லை. தமிழ் எழுத்தாளர் எம்.டி. முத்துக்குமாரசாமி அவர்களுடைய சமீபத்திய YouTube பேச்சில், பட்டி விக்கிரமாதித்தன் கதைத் தொகுப்பிலிருந்து ஒரு கதையைச் சொன்னார். இந்தக் கதையின் மையக்கருத்து என் மனதில் ஆழமாகத் தங்கிவிட்டது. இக்கட்டுரை அந்தக் கதையை மையமாக வைத்து, நவீனத்துவம் என்பது என்ன என்பதை என் நிலையிலிருந்து — ஒரு மனநல மருத்துவனாக, ஜெயகாந்தனை வாசித்த ஒரு வாசகனாக — கொஞ்சம் விரித்துப் பார்க்க விரும்புகிறேன்.


எம்.டி.எம் அவர்கள் ப்ரம்மராக்‌ஷஸின் பார்வையில் இந்த உலகின் பல்வேறு நிலைப்பாடுகள் எப்படி இருக்கிறது என்று உரையாற்றினார். அதற்குப் பின்பு sensibility in modern times என்பதை விளக்குவதற்காக ஜெயகாந்தனின் கங்கா என்ற கதாபாத்திரம் எப்படி பயன்படுகிறது என்று ஃபேஸ்புக் குறிப்பில் சொல்லியிருந்தார். ப்ரம்மராக்‌ஷஸின் பார்வை ஏன் இப்படி இருக்கிறது என்பதைச் சொல்வதற்கும், கங்காவின் உதாரணத்தை வைத்துக்கொண்டு மேலும் என்ன சில புரிதல்களை கொண்டு வரலாம் என்றும் இக்கட்டுரையில் அலசியிருக்கிறேன்.


கதை இதுதான். ஒரு ராஜா வேட்டையாடச் சென்றபோது ஒரு ப்ரம்மராக்‌ஷஸிடம் சிக்கிக்கொள்கிறான். ப்ரம்மராக்‌ஷஸின் பிடியிலிருந்து தப்ப வேண்டுமென்றால், ராஜாவிற்கு பதிலாக ஏதாவது ஒரு பிரம்மச்சாரி சிறுவன் தன்னார்வத்துடன், தன் பெற்றோரின் சம்மதத்துடன் தன்னை பலியாக சம்மதித்தால், அவனை விடுவிப்பேன் என்று கூறுகிறான். ராஜா ஊருக்குச் சென்று தனக்குப் பதிலாக வேறு யாராவது பலிக்கு முன்வருவார்களா என்று அறிவிக்கிறான். ஒரு ஏழைக் குடும்பத்தில் ஏழு வயது சிறுவன் முன்வருகிறான். தாய் தந்தை கண்ணீருடன் அவனை அனுப்புகிறார்கள். பலித் தளத்தில் வாள் ஓங்கப்படும் கணத்தில் சிறுவன் சிரிக்கிறான். ஏன்? “என் அம்மாவுக்கும் தெரியவில்லை, அப்பாவுக்கும் தெரியவில்லை, இந்த ராஜாவுக்கும் தெரியவில்லையே, இந்த உலகம் ஏன் இப்படி இருக்கிறது என்று.” அது அவன் சிரிப்பின் அர்த்தம்.


ப்ரம்மராக்‌ஷஸ் என்ற பெயரே ஒரு சுட்டிக்காட்டல். ப்ரம்மன் + ராக்‌ஷஸ். படைப்பாலன் + காவலன். வேத மரபில் ஒரு அந்தணன் அவனுக்கு விதிக்கப்பட்ட தர்மத்திலிருந்து விலகினால் அவன் ப்ரம்மராக்‌ஷஸ் ஆகிறான் என்ற தொன்மம் இதைப் பிரதிபலிக்கிறது. அறிவின் காவலன் அறிவை ஆயுதமாக்கும்போது அவன் என்னவாக ஆகிறான் என்பதை. அசுரன் என்ற சொல்லுக்கும் ராக்‌ஷஸ் என்ற சொல்லுக்கும் இடையிலான எல்லை எப்போதும் மெல்லியதாக இருந்திருக்கிறது. அசுரர்கள் அளவற்ற வளர்ச்சிக்குப் பெயர் பெற்றவர்கள். ராக்‌ஷஸர்கள் அந்த வளர்ச்சியை காப்பவர்கள். ரக்ஷ் என்ற வேர்ச் சொல்லே “காப்பது, வேலியிட்டு பாதுகாப்பது” என்ற பொருளைத் தருகிறது. ப்ரம்மராக்‌ஷஸ் ஒரு அமைப்பை உருவாக்குகிறான். அதன் எல்லையற்ற வளர்ச்சிக்கு காவல் காக்கிறான். படைக்கிறான், காக்கிறான், விரிவடையச் செய்கிறான். அவனது பிரச்சினை ஒரு தனிப்பட்ட நெறிமை அல்ல; அவன் ஒரு அமைப்பின் உள்ளேயே இருக்கும் சிக்கல்.


இக்கதை மிகவும் கூர்மையாகவும், மிகவும் பொருத்தமானதாகவும் இன்றும் இருப்பது இதனால்தான். ப்ரம்மராக்‌ஷஸ் என்ன கோருகிறான்? நரபலி ஒன்றை. அது பழமையான சடங்கு. ஆனால் அதற்கு அவன் தரும் வடிவம் புதுமையானது. அரசன் இடைத்தரகராக நிற்க வேண்டும். சிறுவன் தன்னார்வத்துடன் முன்வர வேண்டும். பெற்றோர் சம்மதம் வேண்டும். ராஜ்யத்தின் பெயரில் நடக்க வேண்டும். இது ஒரு நகர்ப்புற, நிர்வாகப் பலி. பழைய ஊர்த் தெய்வத்துக்கான ரத்தக் கொடை அல்ல; இது ஒரு அரச சடங்கு. ப்ரம்மராக்‌ஷஸ் பழைய மூடத்தனத்தை அம்பலப்படுத்தியே புதிய மூடத்தனத்தை நிறுவுகிறான். அரசன் தலைமையிலான நாகரிகம் நரபலியை விட நாகரிகமானது என்ற தோற்றத்தில். ஆனால் பலி அதே பலிதான். உடல் அதே உடல். ரத்தமும் அதே ரத்தம். வெறும் பெயர் மாற்றம், சடங்கின் புதிய வடிவம்.


ஏழு வயது சிறுவனின் சிரிப்பு இந்த இரண்டு அமைப்புகளுக்கும் வெளியே நிற்கிறது. குடும்பம் அவனை காப்பாற்ற முடியாது — அம்மா, அப்பா அவனை அனுப்பிவிட்டார்கள். அரசு அவனை காப்பாற்றாது — ராஜாவே அவனை வாளுடன் அணுகுகிறான். சிறுவனுக்கு இரண்டு அமைப்புகளின் மூடத்தனமும் ஒரே கணத்தில் தெரிகிறது. அவனது சிரிப்பு நியாயம் கோரவில்லை, அமைப்பை மாற்றக் கேட்கவில்லை, கோபப்படவில்லை. அவன் வெறும் பார்க்கிறான். அந்தப் பார்வையின் தொனியே, அந்தப் பார்வையின் தெளிவே அவனது சிரிப்பாக வெளிப்படுகிறது. சாட்சியின் சிரிப்பு.


இங்கு எம்.டி.எம் அவர்கள் கூறிய modern sensibility-யை விளக்குவதற்கு ஜெயகாந்தனின் பாத்திரப் படைப்பான கங்கா ஒரு “அரதப்பழச உதாரணம்” என்று சொல்லியிருக்கிறார். அந்த அரதப்பழச உதாரணமாக இருந்தாலும், அதை வைத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கிறேன். ஜெயகாந்தனை ஒரு இளைஞனாக வாசித்தேன். இப்போது ஒரு மருத்துவனாக அவரைத் திரும்பப் படிக்கும்போது வேறு சில விஷயங்கள் தெரிகின்றன. 1966-ல் வெளியான “அக்னி பிரவேசம்” சிறுகதையில் கங்கா ஒரு இளம் பெண். பெருமழையில் மாட்டிக்கொண்ட அவளுக்கு ஒரு கார்க்காரன் lift தருகிறான். ஓரிடத்தில் அவளை வல்லுறவுக்கு உட்படுத்துகிறான். அவள் வீடு திரும்புகிறாள். மரபின் கண்களில் அவள் “கெட்டுப்போனவள்”. 70-களின் சினிமா தர்க்கத்தில், அந்த கார்க்காரனை கண்டுபிடித்து அவளையே அவனுக்கு கட்டி வைப்பதுதான் நீதி. சமூக ஊடகத் தர்க்கத்தில், கூட்டமாக சேர்ந்து அவனைக் கொல்ல வேண்டும் என்ற ஆர்ப்பாட்டமாக இருந்திருக்கும். ஜெயகாந்தன் ஒரு வேறு வழியைத் தேர்ந்தெடுக்கிறார். கங்காவின் அம்மா ஒரு குடம் தண்ணீரை அவள் தலையில் ஊற்றி அவளை வீட்டுக்குள் இழுத்துச் செல்கிறாள். “நீ தூய்மையானவள். எதுவும் நடக்கவில்லை.” ஒரு புதிய சடங்கு. சீதையின் அக்னி பரிக்ஷையை திருப்பி எழுதிய ஒரு கணம்.


ஜெயகாந்தன் இந்த சிறுகதையுடன் நிற்கவில்லை என்பதை நான் பிற்பாடுதான் உணர்ந்தேன். “சில நேரங்களில் சில மனிதர்கள்” நாவலில் கங்கா தன்னை வல்லுறவுக்கு உட்படுத்தியவனைத் தேடிச் செல்கிறாள். அங்கு அவள் என்ன கண்டறிகிறாள்? அவனை விடத் தன்னைச் சுற்றியுள்ள “கண்ணியமான” ஆண்கள் இன்னும் கேடுகெட்டவர்கள் என்று. அந்தக் கார்க்காரன் ஒரு கொடூரமான குடும்ப அமைப்பிற்குள் சிக்கி கேவலமான வாழ்க்கையை வாழ்வதைக் காண்கிறாள். அவளுக்கு அவன் மீது பரிதாபம் ஏற்படுகிறது. அவர்களுக்கிடையே நட்பு உருவாகிறது. “அக்னி பிரவேசத்தின்” தாய் சடங்கின் வாயிலாக கங்காவை வீட்டுக்குள் சேர்த்தாள்; இந்த நாவல் அந்த தாயின் சடங்கையும் கடந்து கங்காவை தன் வல்லுறவாளனின் நண்பியாக ஆக்குகிறது. இது குடும்ப நீதியை கடந்தது. சமூக நீதியை கடந்தது. பழி தீர்க்கும் நீதியை கடந்தது.

அடுத்து வந்த “கங்கா எங்கே போகிறாள்” நாவலில் கங்கா இன்னும் முன்னே செல்கிறாள். தனக்கான விடுதலையை சமூகத்தின் தயவின்றி தன்னந்தனியாகத் தேட வேண்டிய நிலைமைக்கு வருகிறாள். இந்த மூன்று படைப்புகளில் கங்கா மூன்று விதமான நவீன கணங்களை எதிர்கொள்கிறாள். முதலில் தாயின் புதுப்புரிதல். அடுத்தது பரஸ்பர மனிதாபிமானம். கடைசியில் தனிமை. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற ஒரு தொன்மையான கணத்திலிருந்து “யாதும் ஊரே யாவரும் நண்பர்” என்ற ஒரு புதுமையான sensibility-யை, கங்காவின் கதாபாத்திரம் நன்றாகத் தொட்டிருக்கிறது. இந்த கங்காவின் உதாரணத்தை நண்பர் எம்.டி.எம் முன்வைத்ததுதான்.


இப்போது ப்ரம்மராக்‌ஷஸுக்கும் கங்காவிற்கும் இடையே ஒரு இழையை காண்கிறேன். இது எம்.டி.எம் அவர்கள் சொன்னதல்ல. இது என் சொந்த வாசிப்பு. ப்ரம்மராக்‌ஷஸ் பழைய நரபலியின் மூடத்தனத்தை அம்பலப்படுத்துகிறான். ஆனால் அதே கதையில் அவன் கோரும் புதிய அமைப்பும் ஒரு பலியையே கோருகிறது. ஜெயகாந்தனின் கங்கா மரபின் நரபலியிலிருந்து வெளியே வருகிறாள் — அக்னி பரிக்ஷை என்ற பழைய சடங்கிலிருந்து. ஆனால் அவள் வெளியே வந்த இடம் ஒரு தனி வெளியல்ல. அது ஒரு புதிய அமைப்பு. அந்த புதிய அமைப்பு கங்காவிடம் என்ன கோருகிறது? “கங்கா எங்கே போகிறாள்”-இல் அந்தக் கேள்வி வெளிப்படுகிறது. தனிமை. தன்னந்தனியே விடுதலையைத் தேடும் கடமை. யாரும் கூட வராத ஒரு பாதை. பழைய சமூகம் அவளைக் கைவிட்டது. புதிய சமூகம் அவளைத் தனித்துவிட்டது. ஒரு விடுதலை, ஆனால் ஒரு தனிமையான விடுதலை.


கங்காவின் அம்மா ஒரு குடம் தண்ணீரால் தன் மகளை ஏற்றுக்கொண்டாள். 2026-ல் கங்காவின் பேத்திக்கு ஒரு குடம் தண்ணீர் ஊற்றுவதற்கு ஒரு அம்மா இல்லை. அவள் தன்னந்தனியே ஒரு கிளினிக்கில் உட்கார்ந்து ஒரு counselor-இடம், “I feel violated, I feel overwhelmed” என்று சட்டமொழியில் சொல்கிறாள். “என் உடல், என் வாழ்வு, என் தேர்வு” என்ற சட்டமொழி அவளுடையது. அவள் விடுதலை பெற்றவள். ஆனால் அந்த விடுதலையின் எடை அவள் ஒருத்தியின் மீது மட்டுமே. இது ஒரு குற்றச்சாட்டு அல்ல, ஒரு சாட்சியமே. நவீனத்துவம் ஒரு வெற்றி, அதே நேரத்தில் ஒரு விலை. இரண்டும் ஒரே நவீனத்தின் இரு முகங்கள்.

ப்ரம்மராக்‌ஷஸின் கட்டமைப்பை புரிந்துகொள்ள, அது எதில் கட்டப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். அதற்கு பல அடித்தளங்கள் உள்ளன. அதில் முக்கியமான மூன்றாக நான் நேரம், கிருமி, தொழில்-அறிவியல் கூட்டணி என்பதை மட்டும் எடுத்துக்கொள்கிறேன். இது ஒரு சுயபரிசீலனைக்கான முயற்சி என்று எடுத்துக்கொள்ளலாம்.


நேரத்தை முதலில் எடுத்துக்கொள்கிறேன். பழைய சமூகத்தில் நேரம் சுழற்சியானது. பருவங்கள், விழாக்கள், மாதப் பிறப்பு, திதி, கிரகணம், அதிர்ஷ்டம், முகூர்த்தம் — இவை அனைத்தும் ஒரு சுழற்சியின் பகுதி. காலம் மீண்டும் மீண்டும் திரும்பக்கூடியது. ஒரு இழப்பு ஒரு சுழற்சியில் வந்தால், அடுத்த சுழற்சியில் ஒரு ஆறுதல் வரும். ஒரு திருவிழா வந்தால், அது பன்னிரண்டு மாதங்களில் திரும்பவும் வரும். சடங்குகள் இந்தச் சுழற்சியைக் குறிக்கின்றன — ஒரு குலதெய்வ வழிபாடு வருடத்துக்கு ஒருமுறை; ஒரு கார்த்திகை விளக்கு மாதத்துக்கு ஒருமுறை; ஒரு ஏகாதசி விரதம் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை. நேரம் ஒரு rhythm. உடல் அந்த rhythm-இல் பங்குகொள்கிறது.

நவீனத்துவம் இந்த நேரத்தை நேர்க்கோடாக்கியது. நேர்க்கோடு மட்டுமல்ல — அதைத் துண்டாக்கி, ஒவ்வொரு துண்டையும் பணமாக மாற்றியது. “Time is money.” ஒரு மணி நேரம் ஒரு unit. அதற்கு ஒரு விலை — விற்கப்படக்கூடியது, வாங்கப்படக்கூடியது, சேமிக்கப்படக்கூடியது, வீணடிக்கப்படக்கூடியது. “Spend time, save time, waste time, invest time” — எல்லா வினைச்சொற்களும் பண வார்த்தைகள். இந்த மாற்றமே தொழில் புரட்சியின் தேவை. தொழிற்சாலை தினமும் ஒரு துல்லியமான நேர அளவீட்டை கோருகிறது — worker எட்டு மணி நேரம் இயந்திரத்தின் முன் நிற்க வேண்டும், துல்லியமான நேரத்தில் வந்து நிற்க வேண்டும், துல்லியமான நேரத்தில் கிளம்ப வேண்டும். கடிகாரம் தேவாலய மணியை மாற்றியது. Stopwatch முகூர்த்தத்தை மாற்றியது.


இதில் ஒரு பெரும் இழப்பு உள்ளது, இன்னும் சரியாக உச்சரிக்கப்படாத ஒரு பெரும் இழப்பு. சுழற்சியின் இழப்பு என்பது வெறும் சடங்கின் இழப்பு அல்ல — அது rhythm-இன் இழப்பு. ஒரு நோயாளி துக்கத்தில் இருக்கிறார். பழைய கட்டமைப்பு அவருக்கு ஒரு கார்த்திகை, ஒரு பிதுர் தர்ப்பணம், ஒரு மண்டல விரதம் — இந்த சுழற்சிகள் வழியாகத் துக்கத்தைக் கட்டமைத்துக் கொடுத்தது. நவீனம் அவருக்கு என்ன கொடுக்கிறது? ஆறு வாரங்கள் SSRI, ஆறு sessions CBT, “review in six weeks”. துக்கம் ஒரு கால அலகு ஆகிறது — billable hours. ஒரு நோயாளி “I need more time” என்கிறார். நான் “We have twenty minutes” என்கிறேன். அந்த இருபது நிமிடமே எங்கள் இருவருக்கும் கிடைத்த நேரம். அதைப் பங்கீடு செய்ய வேண்டும் — sleep hygiene-க்கு ஐந்து நிமிடம், medication review ஐந்து நிமிடம், safety plan ஐந்து நிமிடம், paperwork ஐந்து நிமிடம். இது ஒரு clinic மட்டுமல்ல. இது நவீனத்தின் தர்க்கம். நேரம் ஒரு resource. உடல் அந்த resource-இன் user.

வேகம் இதனுடைய அடுத்த நீட்சியான கட்டம். சுழற்சி இல்லாத நேரம், துண்டாக்கப்பட்ட நேரம், பணமாக்கப்பட்ட நேரம் — இவை இயல்பாக வேகத்தைக் கோருகின்றன. “Faster” என்பது நவீனத்தின் prayer. Fast food, fast fashion, fast medicine, fast psychiatry. ஒரு mentally ill நோயாளி admit ஆனால் “length of stay” ஒரு metric. Shorter is better. ஒரு குழந்தை கவனக்குறைவாக இருந்தால் Ritalin — immediate onset. ஒரு துக்கம் நீடித்தால் “complicated grief” — pathology. நாம் எல்லாவற்றுக்கும் ஒரு fast solution தேடுகிறோம். Slowness என்பது inefficiency. Patience என்பது ஒரு clinical problem. பழைய 


சமூகத்தில் ஒரு துக்கம் ஆண்டு சார்ந்ததாக இருந்தது — ஓராண்டு திதி, ஓராண்டு சடங்கு. நவீனம் அதை ஆறு வாரத்திற்குள் “resolve” செய்ய விரும்புகிறது. ஏழு வயது சிறுவனின் சிரிப்பு இங்கு எதிரொலிக்கிறது — அம்மாவுக்கும் தெரியவில்லை, அப்பாவுக்கும் தெரியவில்லை, doctor-க்கும் தெரியவில்லை, ஒரு துக்கத்துக்கு அதற்கான சுழற்சி இருக்கிறது என்பது.

கிருமிக் கோட்பாடு அடுத்தது. Pasteur, Koch, Lister — பத்தொன்பதாம் நூற்றாண்டின் பெருமை. அவர்கள் பிசாசு கோட்பாட்டை — bad air, miasma, possession states — வெளியேற்றினார்கள். ஒரு specific organism, ஒரு specific disease. TB-க்கு tubercle bacillus. Cholera-வுக்கு Vibrio cholerae. இந்த ஒற்றை காரண-காரிய தர்க்கம் ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியது. Antibiotics, vaccines, surgical antisepsis — இவை modern medicine-இன் அடித்தளம். நான் அதை நம்புகிறேன், தினமும் பயன்படுத்துகிறேன். அவற்றின் பயன்பாடுகளை தினசரி காண்கிறேன்.


ஆனால் கிருமிக் கோட்பாடு ஒரு epistemology-ஐயும் கொண்டு வந்தது. உலகின் எல்லாத் துன்பத்தையும் ஒரே காரண-காரியத்திற்கு தள்ளும் தர்க்கம். மனச்சோர்வு ஒரு serotonin imbalance. Schizophrenia ஒரு dopamine dysregulation. ADHD ஒரு prefrontal cortex issue. Obesity ஒரு leptin resistance. இந்த reduction-ல் சில சந்தர்ப்பங்களில் உண்மை, சில சந்தர்ப்பங்களில் மிகைப்படுத்தல். ஒரு சமூகத்தின் வறுமை, ஒரு குடும்பத்தின் trauma, ஒரு ஊரின் சிதைவு — இவை ஒரு மனிதரின் மனநோயை உருவாக்கலாம். ஆனால் அந்த complexity-யை குறிப்பிட ஒரு billing code இல்லை. “Socioeconomic deprivation-induced depressive adjustment reaction in the context of intergenerational trauma” என்று நான் எழுதினால் insurance company reject செய்யும். F33.1 என்று எழுதினால் அதை உடனே ஒத்துக்கொள்ளும். கிருமிக் கோட்பாட்டின் அழகை நான் மறுக்கவில்லை. அதன் imperial nature — அனைத்தையும் ஒரு வரைவிற்குள் நெறிக்கும் முனைப்பு — அதைத்தான் குறிக்கிறேன்.


தொழில்-அறிவியல் கூட்டணி மூன்றாவது அடித்தளம். அறிவியல் ஒரு முறை. தொழில் ஒரு வணிகம். நவீனத்துவம் இரண்டையும் ஒன்றாக இணைத்தது. ஒரு randomised controlled trial ஒரு அறிவியல் கருவி; அது ஒரு மருந்துக் கம்பெனியால் நடத்தப்படும்போது அது ஒரு வணிகக் கருவியாகவும் ஆகிறது. DSM (Diagnostic and Statistical Manual of Mental Disorders) ஒரு மனநோய் வகைப்பட்டியல்; அது ஒரு insurance billing framework-ஆகவும் உள்ளது. ஒரு guideline ஒரு clinical tool; அது ஒரு liability protection-ஆகவும் செயல்படுகிறது. இந்த இரட்டை இயல்பு பிழையல்ல. அது நவீனத்தின் கட்டமைப்பு. அறிவியல் அறிவியலுக்காகவே நடத்தப்படக்கூடிய ஒரு pure practice இல்லை. அது ஒரு political-economic system-த்திற்குள் நடக்கிறது.


இந்த மூன்று அடித்தளங்களின் மேலேதான் seclusion போன்ற கட்டமைப்புகள் நிற்கின்றன. மிகவும் ஆக்ரோஷத்துடனும், மூர்க்கத்துடனும் நடந்துகொள்ளும் ஒரு சில உள்நோயாளிகளைத் தனி அறையில் வைத்து, தீவிர சிகிச்சைக் கண்காணிப்பு செய்யும் முறையே seclusion treatment எனப்படும் ஒரு அமைப்பு. இது அன்றாடம் மிகச் சாதாரணமாக புழக்கத்தில் இருக்கும் ஒரு உள்நோய் சிகிச்சை முறை. ஒருவரைத் தீவிர சிகிச்சை கண்காணிப்புக்கு உட்படுத்தும்போது அவருடைய நெருங்கிய உறவுகளிலிருந்தும், மற்ற நோயாளிகளிடமிருந்தும் தனித்து வைப்பது, மற்றும் வேறு எந்த வகையான பிரச்சினையும் நேர்ந்துவிடக் கூடாது என்ற ஒரு தகுந்த பாதுகாப்பை அமைப்பது — மிகவும் சாதாரண ஒரு வழக்கம்தான் இது. இதையே உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம்.


நேர அலகு — ஒவ்வொரு 15 நிமிடம் special observation, ஒவ்வொரு நான்கு மணி நேரம் review. கிருமிக் கோட்பாட்டின் logic — ஒரு patient, ஒரு diagnosis, ஒரு treatment plan. தொழில்-அறிவியல் — evidence base, regulatory compliance, audit trail. ஒவ்வொன்றும் individually defensible. ஒவ்வொன்றையும் கூட்டிச் சேர்த்துப் பார்த்தால் இது ஒரு ராக்‌ஷச கட்டமைப்பாக மிக எளிதாகப் புலனாகும். இந்த இரு முகங்களையும் எந்த உள்நோயாளிப் பிரிவில் வேலை செய்யும் ஒரு மருத்துவரோ, செவிலியோ தினமும் சந்திக்க வேண்டிய விஷயம்தான்.


நானும் ஒரு inpatient psychiatric unit-ல் வேலை செய்யும் ஒரு consultant. கடுமையான மனநிலையில் உள்ள நோயாளிகளை கவனிக்கிறோம். ஒரு நோயாளி தனக்கோ பிறருக்கோ ஆபத்தாக நடந்துகொள்ளும்போது அவனையோ அவளையோ அந்த அறைக்குள் தனியாக வைக்கிறோம். கதவு வெளியிலிருந்து பூட்டப்படுகிறது. அவர்களை 24 மணி நேரமும் தொடர்ந்து ஒரு Health Care Assistant அமர்ந்து கண்காணிப்பார். ஒவ்வொரு மணி நேரமும் அந்தக் கண்காணிப்புப் பணியை மற்றொருவர் வந்து ஓய்வு கொடுப்பார். இப்படித் தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கிற ஒரு கண்காணிப்பு அமைப்புதான். அவர்களை மேற்பார்வையிட ஒரு nurse மேலதிகாரியாக நடந்துகொள்வார். கண்காணிக்கும் நிகழ்வுகளை ஒரு தாளில் குறித்துக்கொண்டே இருப்பார்கள். தாள்களை நிரப்பிக்கொண்டே இருப்பார்கள். ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கும் ஒரு மருத்துவரும் ஒரு nurse-ம் கூட்டாகச் சேர்ந்து ஒரு medical review. ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் சிகிச்சைக் குழு, ஒரு consultant தலைமையில் நடக்கும் ஒரு review. சட்டம் இதற்கு framework தருகிறது. Regulatory body இதை audit செய்கிறது. Seclusion policy இதை எப்படிச் செய்ய வேண்டும் என்று வரையறுக்கிறது.


இது ஒரு நவீன சடங்கு. மிகவும் துல்லியமான சடங்கு. பழைய சமூகம் இதே நோயாளியை என்ன செய்திருக்கும்? ஒரு கோயிலில் கட்டிவைத்திருக்கும். ஒரு மரத்தில் பிணைத்திருக்கும். பிசாசு பிடித்ததாக வகைப்படுத்தி ஒரு பூஜாரியை அழைத்திருக்கும். ஒரு பேயோட்டியை அழைத்திருக்கும். குடும்பத்தினரால் “பிச்சை எடுக்கத்தான் லாயக்கு” என்று கைவிடப்பட்டிருக்கும். இன்னும் சில பழைய mental hospital ward-களில் ஒரு warder ஒரு பிரம்புடன் நடந்து அமைதியை நிலைநாட்டிக்கொண்டே இருப்பார். அவரது பிரம்பு ஒரு நிர்வாகச் சட்டம் அல்ல. அது ஒரு medical protocol-ம் அல்ல. அது ஒரு dispensable authority. பழைய முறைகள் இன்றைய seclusion suite-ஐ விட அதிக இரக்கமற்றவை. இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. நான் நவீன மனநல மருத்துவத்தை நிராகரிக்கவில்லை. அது என் வேலை. அது என் அடையாளம். அது என் கடமை.


ஆனால் நவீனத்தின் கட்டமைப்பு ஒரு வகையான nuance-ஐ இழக்கிறது. ஒரு பெண் restraint-க்குப் பிறகு seclusion-ல் இருக்கிறாள் என்றே வைத்துக்கொள்வோம். Rapid tranquilisation கொடுக்கப்பட்டுவிட்டது. அவள் இப்போது அமைதியாக இருக்கிறாள். மருத்துவக் குழு வெளியே நின்று முழுக் கண்ணாடி ஜன்னல் வழியாகப் பார்க்கிறார்கள். அவள் மூலையில் சுருண்டு கிடக்கிறாள். அவர்களால் அவளைப் பார்க்க முடிகிறது. Nurse observation chart-ஐ காட்டுகிறார். மருத்துவர்கள் கையொப்பமிடுகிறார்கள். ஆவணத்தின் அடுத்த பக்கம் நிரப்பப்படுகிறது — “Patient resting. No signs of distress. Continue seclusion. Review in four hours.”


அந்த ஒவ்வொரு வார்த்தையும் சட்டரீதியாக மிகத் துல்லியமானது. “No signs of distress” — ஏனென்றால் distress என்பதற்கு ஒரு operational definition உள்ளது — self-harm behaviours, agitation, shouting, head-banging. அவள் மூலையில் சுருண்டு கிடப்பது distress அல்ல. அது “resting”. இந்த வார்த்தைத் தேர்வு ஒரு நூற்றாண்டின் psychiatric literature-ல் கட்டமைக்கப்பட்டது. RCT-கள், scales, guidelines, tribunal judgments, audit reports. ஒவ்வொரு வார்த்தையும் ப்ரம்மராக்‌ஷஸின் கட்டமைப்பு.


இந்த அமைப்பிற்கும் ஒரு பலி உள்ளது. ஆனால் அந்தப் பலி ஒரு உருக்கமான காட்சி அல்ல. ஒரு அம்மா பார்வையாளர்கள் அறையில் கண்ணீருடன் நிற்கும் காட்சி இல்லை. அது அப்படி நிகழ்வதில்லை. உண்மையில் பெரும்பாலான குடும்பங்கள் மருத்துவ care model-களை முழுமையாக நம்புகிறார்கள். Consent form-ல் விருப்பத்துடன் கையொப்பமிடுகிறார்கள். “Please update us” என்று சொல்லிவிட்டுத் திரும்புகிறார்கள். சில குடும்பங்கள் முற்றிலுமாகக் காணாமல் போகிறார்கள் — treatment planning meeting அல்லது discharge planning meeting-ல் phone எடுக்கமாட்டார்கள். இது அவர்களுடைய பிழை அல்ல. அவர்களுக்கு வேறு ஒரு தெரிவு இல்லை. Care model என்பது ஒரு முழு ecosystem. அதற்குள் நோயாளியை முழுமையாக ஒப்படைப்பது ஒரு நவீன சடங்கு. அம்மா தன் பொறுப்பை handover செய்கிறார். அது ஒரு வகையான modern ritual. நாம் “informed consent” என்கிறோம்.

பலி இங்குதான் உள்ளது — பலியே தெரியாமல் நடக்கிறது. அந்தப் பெண் cubicle-ல் தனியாக. அவளது அம்மா வீட்டில் phone-க்காகக் காத்திருக்கிறார். Ward-ல் observation chart-ல் நான் கையொப்பமிடுகிறேன். இந்த மூன்று இடங்களிலும் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்ள முடியாத ஒரு தூரத்தில்தான் இருக்கிறார்கள். இது ஒரு நவீன அமைப்பால் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதையே நாம் நன்கு வரையறுக்கப்பட்ட “structured care” என்கிறோம். மூர்க்கத்தையும் ஆக்ரோஷத்தையும் எதிர்கொள்ளும் மிகவும் பயனுள்ள ஒரு நவீன அமைப்பு. ஆனால் மிகவும் பயனுள்ள இந்த effectiveness-ல் ஒரு மெல்லிய absence உள்ளது. யாரும் அவளுக்குக் குடம் தண்ணீர் ஊற்றுவதில்லை. ஏனென்றால் அப்படி ஒரு சடங்கு இந்த model-ல் இல்லை. அம்மா ஊற்ற விரும்பவும் இல்லை — care team உள்ளதே, அவர்கள் “handle” செய்கிறார்கள். நானும் ஊற்றுவதில்லை — அது clinical boundary violation. Nurse-ம் ஊற்றுவதில்லை — அது protocol-ல் இல்லை. ஆனால் இந்த ஊற்றாமையே நவீன seclusion-ன் குணம். பலி என்பது ஒரு கண்ணீர் காட்சி அல்ல. பலி என்பது ஒரு ritual in absence.


ஏழு வயது சிறுவனின் சிரிப்பு இங்கு எதிரொலிக்கிறது — இந்த அம்மாவுக்கும் தெரியவில்லை, இந்த staff-க்கும் தெரியவில்லை, இந்த consultant-க்கும் தெரியவே இல்லை, இந்த regulator-க்கும் தெரியவில்லை, இந்த உலகம் இப்படி ஆகிவிட்டது என்று. எல்லோரும் நல்லெண்ணத்தில் செயல்படுகிறார்கள். System சரியாக வேலை செய்கிறது. Outcomes measurable. ஆனால் ஒரு பழைய சடங்கு — ஒரு தாய் மகளுக்குக் குடம் தண்ணீர் ஊற்றும் சடங்கு — எந்த நவீன வடிவத்திலும் நாம் replace செய்யவில்லை. அது ஒரு அறிவார்ந்த இழப்பு. இது ஒரு குற்றச்சாட்டு அல்ல. வெறும் சாட்சியம்.


இது ஒரு பிற்போக்குவாதமாகக் கேட்கக்கூடும். ஆனால் அப்படி அல்ல. ஒரு பிற்போக்குவாதம் “Seclusion-ஐ கலைப்போம், policy-ஐ கிழிப்போம், warder-ன் பிரம்படிக்குத் திரும்புவோம், கடிகாரத்தை உடைப்போம், antibiotics-ஐ வெளியேற்றுவோம்” என்று சொல்லும். நான் அதைச் சொல்லவில்லை. Seclusion ஒரு உயிர்காக்கும் intervention. கடிகாரம் ஒரு utility. Antibiotics ஒரு miracle. நான் இவற்றை நம்புகிறேன், தினமும் சரிபார்க்கிறேன். ஆனால் இவற்றின் கட்டமைப்புக்கு ஒரு விலை இருக்கிறது என்பதை நான் பார்க்க மறுத்தால், இதுவும் ஒரு ராக்‌ஷசத்தனமாக வளர்ந்துவிடும். அந்த absence cubicle கதவின் இரு புறங்களிலும் நிற்கும். அதைப் பார்க்க முடிந்தால் அந்த அமைப்பை சற்று மனிதமாக நடத்த முடியும். ஒரு small acknowledgement. ஒரு short update.

எம்.டி.எம் அவர்கள் ஒரு வரி சொன்னார் — “ஒவ்வொரு சூழலுக்கும் சாட்சி நிற்பதின் கலையே நவீனமாகிறது.” இந்த வரி என்னை நிறுத்தியது. ஏனென்றால் நான் எழுதும் ஒவ்வொரு clinic குறிப்பும் ஒரு சாட்சியமாகவோ ஒரு வகைப்படுத்தலாகவோ இருக்கலாம். “Patient resting. No signs of distress. Continue seclusion” என்றால் அது ஒரு வகைப்படுத்தல். “அவள் மூலையில் சுருண்டு கிடக்கிறாள். இன்றும் அவளுடைய அம்மாவிடமிருந்து phone call இல்லை. எந்தவிதமான தகவலும் இல்லை. இந்த absence ஒரு clinical சிக்கல் அல்ல. ஆனால் இது ஒரு சாட்சியம்” என்று எழுதினால் அது witness. முதலாவதை ஒரு கணினி எழுத முடியும். இரண்டாவதை ஒரு மனிதனால் மட்டுமே எழுத முடியும். முதலாவது audit-க்குத் தேவை. இரண்டாவது நவீனத்துவத்தின் கோரப்பசிக்கு ஆளாகாமல் இருப்பதற்குத் தேவை. இந்த இரண்டிற்கும் இடையிலான வித்தியாசம்தான் நவீன sensibility.


ப்ரம்மராக்‌ஷஸ் என்ற கதையின் எழுத்தாளர் யாரென்று நமக்குத் தெரியாது. ஆனால் அவர் ஒரு அமைப்பின் உள்ளே நின்று அந்த அமைப்பின் மூடத்தனத்தை ஒரு ஏழு வயது சிறுவனின் சிரிப்பின் மூலம் அம்பலப்படுத்துகிறார். 


ஜெயகாந்தன் தன் காலத்தின் சமூக அமைப்பின் உள்ளே நின்று, அதன் மூடத்தனத்தைத் தாயின் குடம் தண்ணீரின் மூலம் அம்பலப்படுத்தினார். எனக்குத் தெரிந்த வரையில் யாரும் நவீன மனநல மருத்துவ அமைப்பின் போதாமைகளைச் சுட்டிக்காட்டியோ, அதனுள் புதைந்து கிடக்கும் நகைமுரண்களை எண்ணிச் சிரிக்கும் அந்த ஏழு வயது பையனின் சிரிப்புக் குரலைக் கேட்கும் யாரையும் நான் அதிகம் பார்த்ததில்லை. Policy வெற்றி பெறுகிறது. Paperwork முடிகிறது. Ward rounds நகர்கிறது. Clock ticks.


ஆனால் அந்த முயற்சிதான் எனக்கு இது இலக்கியத்திலிருந்து கற்ற பாடம் — அமைப்பை நிராகரிப்பதும் அல்ல, அதைக் கொண்டாடுவதும் அல்ல; அதற்குச் சாட்சியாக நிற்பது. ஏழு வயது சிறுவனின் சிரிப்பை மறக்காமல் இருப்பது. ஊற்றப்படாத குடம் தண்ணீரை மறக்காமல் இருப்பது. சுழற்சியின் இழப்பை மறக்காமல் இருப்பது.


பெரிய கோட்பாடுகள் எதுவும் இதற்குத் தேவையில்லை.

—


நன்றி: ப்ரம்மராக்‌ஷஸ் கதையை நான் கேட்கும்படியாய் செய்தது திரு எம்.டி. முத்துக்குமாரசாமி அவர்களுடைய ஸ்ருதி TV YouTube பேச்சு. “ஒவ்வொரு சூழலுக்கும் சாட்சி நிற்பதின் கலையே நவீனமாகிறது” என்பதும், கங்கா என்னும் ஜெயகாந்தனின் கதாபாத்திரம் modern sensibility-யை விளக்கப் பயன்படுத்தக்கூடிய ஒரு யுத்தி என்பதும் அவர் மூலம் அறிந்ததே. அவரே இதை மிகவும் “அரதப்பழசான” உதாரணம் என்று தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். நன்றி.


ஜே.பி. ராஜேந்திரன்

Tuesday, 8 October 2019

An Artist’s Golu of 2019


Stage 1: ‘Ahura Mazda’ and Persian Artefacts of all Deva and Asura etc..
Reason : Poor Aryans / Iranians were persecuted from their home terrain

Stage 2 : ‘Minotaur’ - Greek and Minoan Artefacts
Reason : Poor Minoan civilisation settlers from Greece had to flee from their home terrain and influence Indian trolls ( natives) giving rise to Nandi, Shiva cosmologies..

Stage 3: Dasamaha vidyas - Ten female prototype artefacts
Reason : Ten is good enough

Stage 4: 11 Avatars of Vishnu - Thanks to Iranian story makers. 
Reason: We got Abrahamic Jewish Matsya Avatar equivalent to Noah’s Ark and all other to unbelievable heart touching stories of world canons. Now you know why Iranian story makers are at the top stage 1

Stage 5 : Puranic artefacts - All characters from Ramayana and Mahabharata rank here.
Reason : Shhhhh.... Oral traditions and folklores rock.

Stage 6 : Buddhist and Jainist Artefacts. Starving Buddha , Laughing Buddha, Begging Buddha, Sleeping Buddha and Naked Mahavira etc...
Reason : Staunch Great Rebels claim their own merits

Stage 7: Islamic Artefacts
Varieties of Adi Seshans from Ophios Gana Sthana ( Land of snake worshippers ), Poppies , Kabul Apples etc..
Reason : Iran transmogrified to Afghanistan in a pre -postcolonial sense.

Stage 8: Post colonial Artefacts.
Darwin , Pavlov, Newton, Charles Marx, Engels, Samuel Johnson, James Boswell etc...
Reason: our lives depend on this. 

Stage 9: End of world Artefacts.
Greta Thurnberg, Shiva, Rudhran, Dionysus, Chinnamastha, Kaali etc...
Reason : As you wish, how our worlds should end.

Stage 10: மனக் கோவில் கொண்ட மாணிக்கவாசகனார் and all Indophile World Scholars.




Friday, 21 June 2019

Chest of Drawers: Venus and Kali



One of the basic premises of interpreting the 'Surreal Art work' is, it is beyond and above any understandings and explanations. Surrealist artists often expressed their discontent of their civilisation times taking the aide of Freudian methods of exploring the 'Unconscious'. Putting a chest of Drawers on to an ancient mother goddess figure  ( Venus of Milo ) could be best considered as an anti-war stance taken by Salvador Dali. Why this object was chosen by Dalí is an interesting question to consider. And my intrigued friend who recently visited this statue displayed in Ekebergen Park in Oslo, Norway pointed out, this can be conceived as repressed sexual activity. This article is to understand,  how this activity of converting a conventional symbol of beauty and love in to a 'chest of drawers', can be viewed from the psycho-analytic perspective.

The structure of psycho-analysis often helps us to connect with others in a deeper level and explore the fears and desires from our unconscious emotional life. Desire and Fear forms the two major driving forces that govern the 'Unconscious'. Our earliest object of desire is the mother. She is not only a primary care giver, the pleasure principle of human existence rests on her. And broadly speaking our earliest object of fear is the 'father', who has the potential to separate and create a necessary distance away from the all the pleasure principles.

Often this happens in the context that this step of generating the anxiety is much needed and welcome in order to make the dependent and helpless child who is glued on to the pleasure principles in to an individual. [Mary Klages, Literary theory]. The desire to seek, attach and remain attached to the Mother [ Pleasure Principle] can be attributed to the Unconscious of the 'id' and the 'ego'. The fear generated by the 'Super-ego' structure [ Father] helps to individuate the child from the mother [ pleasures] and prepare the child to stay in reality and take control of the reality [ Reality Principle]. The 'desire' towards mom then becomes a nurturing force and the 'fear' from the father a force that shapes any young mind to take control of the reality.


The original statue of 'Venus of Milo' is one such replica of a young Mother or a goddess, whose form and grace captured the imagination of a Greek sculptor around 100 BCE. Dali's angst against the war torn Europe has to start from somewhere. And it is not a chance finding to see this starts from one of the mothers of the cradle of western civilisations. The patriarch Fathers of the western world of his times, have effectively separated the vulnerable infant minds away from the beauty and love of the young goddess. Transforming the pleasure principle that happily rested on the 'beauty and love' to a grotesquely transformed  libidinal activity and attachment towards 'wealth' and a  ' Place to store the wages of War'.

The restlessness of the fathers of the war generation, separate the children away from the nurturing forces of ' beauty and love' and readily train and condition to get aroused and motivated by the money or wealth. The young minds who move away from the mom and sexual partners, engage in hard training routines, discharge their frustrations in the act of war. By moving away from the erogenous nurturing regions of a female body , young mind then converts the beauty and divinity of a female space in to a space where something could be stored in to. Like money or the wealth they generate through the warring activity, say for example.

Psychoanalysis theories often  talk about moving away from mom , remaining attached to the pleasures, ability to with stand the separation anxiety, moving away from the secure base, exploring the world around, discharge the frustrations in aggression , taking control of the world and in this process and indirectly hints upon the bringing home the kills and exploits from the world around us. During this process something vital is lost forever especially exemplified by the world wars. That’s one way Dali's angst against the war generating fathers could be viewed in a psycho-analytical framework. Converting ‘beauty and truth’ of Mother Earth in to a useful or useless space to fill with money/ wages of violence.

If you consider the culture of Mother Goddesses all started more or less in the same time in the human histories; they have taken two different trajectories in the east and west. Excesses of linear thinking , rationality and fervent progress have compromised on appreciating the truth and beauty of viewing the world as a secure base of a benevolent father and beautiful mother. It is a romantic version to take. ‘Truth is beauty and beauty is truth. That’s all one needs to know ‘. [ Keats, Ode on a Grecian Urn]

There is no Surrealism in Indian Artworks, as Psycho-analysis movements only elicited a luke warm response on the whole. Is it possible to put a chest of drawers in one of the ancient mothers of Indian milieu,' Kaali'?. What meanings it could generate to an Indian Psyche?

Unlike the beauty and love represented by the Greek goddess Venus, the ferocious form of female principle goes on to represent the 'Time'. This is taking the view that 'Kalabhairava' as the male principle representing the time and ' Kaali' the female equivalent of 'Time'. The psychoanalytical theories comes to a staggering halt in trying to understand the Mother - child dyad and the psychosexual developmental aspects in a linear time structure. This stems from the fact, possibly the cyclical view of time determines everything. The western intellectual traditions rested on the linearity time principles and the Indian intellectual traditions on the cyclical essence of the time. This briefly highlights how and why the sociology and psychology has not made any seismic difference in the Indian milieu.

The Surreal art of Dali represents the essence, 'Restlessness of the fathers converts beauty and love in to a space for Nothingness'. This could be understood using the theory of Psychoanalysis to some extent. The cosmic dance of Shiva comes close to understand the essence of chest of Drawers on an ancient Indian goddess. In the Indian milieu, Psychoanalysis can yield spurious results in trying to understand the art works where traditional symbolisms are used to understand and capture the essence. Cyclical representation of time, negates the role for any theories based on linear narrative structures. Satyam, Shivam and Sundaram can rest in peace. The truth, nothingness and the beauty co-exist and held together by a ferocious feminine principle of time.


Wednesday, 12 June 2019

What’s on your mind?


What’s on your mind?
——————————-
Desire called Nitrous Oxide
Impulse called Acetylcholine
Congestion called Nitrous Oxide 
Spasm called Acetylcholine

Angst called Adrenal hormones
Terror called Dopamine
Transgressions called Adrenal hormones
Truths called Dopamine

Dreams called GABA
Imaginations called Serotonin
Irritations called GABA
Insults called Serotonin

The flail arm on the hip does represent
The wilful flaccidity
Blood rushes to awaken Nitrous Oxide
All the worlds unite

Tumescence called
erection and ooze
Tumescence called
Headrush and high
Tumescence called
Order and new orders

Phoenix Rests in Peace
Chakras grinds to halt
Samādhi eats its own Karma